செவ்வாய், 12 ஜூலை, 2011

அ போடு...    ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பதாம் வருஷம் முகையூர் ஒன்றியம் பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த சமயம்.தலைமை ஆசிரியர் கலியபெருமாள் என்னை முதல் வகுப்பு ஆசிரியை மரிய செல்வம் மருத்துவவிடுப்பில் சென்று விட்டதால் என்னை வகுப்பெடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

                                  நானும் மிக ஆர்வமாக வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆவலாக இருந்தேன்.முதல் வகுப்பு மாணவர்கள் மற்ற வகுப்பு மாணவர்களைப் போல் இல்லை.அவர்கள் இப்போதுதான் பள்ளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.பள்ளி சூழ்நிலை இன்னும் பழகவில்லை.பார்த்து நடந்து கொள்ளென்று தலைமை ஆசிரியர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

                               மற்ற ஊர்களில் பால்வாடி,அங்கன்வாடி மையங்கள் தனியாக இருக்கும். பள்ளிக்கு வருவதற்கு முன்னரே எளிய பாடல்களை தெரிந்து கொண்டும் எழுத்துக்களை கற்றுக்கொண்டும் மாணவர்கள் வருவார்கள்.ஆனால் பையூரில் அதற்கு வழி இல்லை.முதல் வகுப்பிலிருந்துதான் அவர்களுக்கு பள்ளி அனுபவம் தொடங்கும்படி இருந்தது.

                       முதல்வகுப்புக்கு பாடம் நடத்துவது எனக்கு பெரும் சவாலாகவே இருந்தது. பாதி பிள்ளைகள் என்னைக்கண்டாலே பயந்து அழ ஆரம்பித்தன. அவர்களுடன் சுமூகமாக ஒன்றுவதற்கே பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது.ஒரு வழியாக மிட்டாய் கொடுத்து என் வயப்படுத்தி வைத்திருந்தேன்.பிள்ளைகளுக்கு “அபோட சொல்லிக்கொடுத்தேன்.

                  விழுப்புரத்திலிருந்து பையூருக்கு போவதென்றால் திருவெண்ணெய் நல்லூர் வழியாக திருக்கோவிலூருக்கு போகும் பேருந்தில் சென்று தொட்டிக்குடிசை அல்லது மண்டபம் நிறுத்தத்தில் இறங்கி ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும்.

                           பேருந்து சக்கரம் பழுதாகி விட்டதால் அன்று தாமதமாக பள்ளி செல்ல வேண்டிய சூழ்நிலை.மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு சென்றேன்.பள்ளி வாசல் முன் கூட்டமாக இருந்தது.எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.ஒட்டு மொத்த கூட்டமும் எனக்காகத்தான் காத்திருக்கிறது என்பதை அறிந்தவுடன் இதயத்துடிப்பு இன்னும் பல மடங்காக கூடி விட்டது.நாம் என்ன தவறு செய்தோம்?ஏன் ஒரு விசாரணைக் கைதியைப் போல நம்மை எல்லோரும் பார்க்கிறார்கள்?என்று ஒரே குழப்பமாக இருந்தது.

         தலைமைஆசிரியர் அறைக்கு தயங்கியவாறு உள்ளே சென்றேன்.அங்கே கூடி இருந்தவர்கள் அத்தனை பேரும் ஒன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள்.இவர்தான் அப்படி சொன்னாராம்.இவர்தான் அப்படி சொன்னாராம் என்று குசு குசு வென பேசிக்கொண்டார்கள்.எனக்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை.தலைமை ஆசிரியரை மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தேன்.

                 தலைமைஆசிரியர் மிகவும் திறமையானவர்.எந்த பிரச்சனையையும் நாசூக்காக கையாளக்கூடியவர்.முகம் எப்போதும் சிரித்தபடிதான் இருக்கும்.புன்முறுவலோடு என்னைப்பார்த்து கேட்டார்.ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுத்தாய்?
போட சொல்லிக்கொடுத்தேன் என்று சொன்னேன்.அதுதான் எப்படி சொல்லிக்கொடுத்தாய்?என்று கேட்டார்.

பல்பத்தை வைத்து எல்லோரும் போடுங்கள்,போடுங்கள் என்று நான் சொன்னதை பிள்ளைகள் வாத்தியார் பல்பத்தை வாயில் போட சொல்கிறார் என்று நினைத்து வாயில் போட்டு தின்றிருக்கிறார்கள்.இதை நான் கவனிக்க வில்லை.நாளைக்கு எல்லோரும் கண்டிப்பாக “அபோட்டுக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

                 பல்பம் தின்ற பிள்ளைகள் பல்பம் தின்னாத மற்ற பிள்ளைகளையும் வாத்தியார் பல்பத்தை “அபோடாவிட்டால் அடித்து விடுவார் என்று பயமுறுத்தியதால் வீட்டுக்கு போய் ஆளுக்கு ஒரு பல்பம் பாக்கெட்டை “அபோட்டிருக்கிறார்கள்.பல்பத்தை “அபோடச்சொன்ன வாத்தியார் யார் என்று தேடிக்கொண்டு பெற்றோர்கள் பள்ளிக்கே வந்து விட்டார்கள்.

                      எனக்கு அழுவதா?சிரிப்பதா?என்றே தெரியவில்லை.ஒட்டு மொத்த வகுப்புக்கும் ஆளுக்கு ஒரு பல்பம் பாக்கெட் வாங்கித்தந்த பின்னரே பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.அன்றுதான் நான் கற்றுக்கொண்டேன்.சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும். 

3 கருத்துகள்:

shanevel சொன்னது…

நல்லது அ வோடு நிறுத்தி விட்டிங்க முதல் நாளில் ...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனு - கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பு வருது சீனு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

radhakrishnan சொன்னது…

சீனுசார்,
ஆ' போட்ட கதை நன்றாக உள்ளது
சிரிப்பாகவும் இருக்கிறது
உங்கள் பணியில் ஆர்வம் பாராட்டத்
தக்கது, வாழ்த்துக்கள்