செவ்வாய், 22 மார்ச், 2016

மெட்டுப்பாடல்-37

தமிழ்த்தாயை அழைக்காத வாயில்லையே!
தமிழ்த்தாயை அழைக்காது வாழ்வில்லையே!
இன்றும் என்றும் தமிழ்ப்போல
பொன்றா புகழ்க்கொண்ட வேற்று மொழி ஏது?

சங்கங்கள் வளர்த்தவள் நீ சிந்தையிலே நிறைந்தவள் நீ
காப்பியனை ஈன்றவளும் நீதானம்மா
அன்புடைய அகத்தாள் நீ போருடைய புறத்தாள் நீ
உலகத்தின் பொதுமறையே நீதானம்மா
காவியங்கள் கொண்டவள் நீ கணினியையும் கண்டவள் நீ
தீதும் நன்றும் உரைத்தவளே நீதானம்மா
செம்மொழியாய் ஆனவள் நீ மின்மொழியாய் ஆனவள் நீ
உலகத்தின் முதல் மொழியே நீதானம்மா
உன்னாலே வளர்ந்தோமே!

எழுத்தும் நீ சொல்லும் நீ பொருளும் நீ யாப்பும் நீ
அணியோடு அழகாக இருக்கின்றாய் நீ
மேகலை நீ சிலம்பும் நீ வளையும் நீ குண்டலம் நீ
மணியோடு காப்பியமாய் இருக்கின்றாய் நீ
அமுதாக இயலோடும் இசையோடும் நாடகத்தை
இப்போதும் தந்தபடி இருக்கின்றாய் நீ
அறத்துக்கும் பொருளுக்கும் மகிழ்வுக்கும் அலங்காரம்
எப்போதும் செய்தபடி இருக்கின்றாய் நீ
உன்னாலே சிறந்தோமே!
(அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடல் மெட்டு)மெட்டுப்பாடல்-36

சகியே உன்னை மறந்து விட்டேன்
வாழும் பொழுதிலே இறந்து விட்டேன்
புதிதாய் இன்று பிறந்து விட்டேன்-அந்த
பழைய நினைவுகளை துறந்து விட்டேன்
உந்தன் முகவரி தொலைப்பதற்கு
எத்தனை தவங்கள் புரிவதடி?
மறதியை படைத்த இறைவனுக்கு
நன்றி நன்றி நன்றியடி!

துல்லியமாக அந்த நொடி
நினைத்துப் பார்த்தேன் நினைவில் இல்லை
மெல்லியதாக மீசை முடி
அரும்பிய நாட்கள் அது உறுதி!
அந்த நாள் முதல் இன்று வரை
உந்தன் பெயரைக் கேட்ட உடன்
சட்டென்று மின்னல் வெட்டுவதை நான்
எங்கனம் எங்கனம் ஒளித்து வைப்பேன்?

திடும் என பாம்பினை பார்த்தவுடன்
படக்கென்று துள்ளிக் குதித்ததுண்டா?
சுடும் ஒரு பொருளினை தொட்டவுடன்
வெடுக்கென்று விரல்களை இழுத்ததுண்டா?
அறிவியல் உலகம் இதன் பெயரை
அனிச்சை செயல் என்று சொல்கிறது!
அனிச்சை செயலைப் போல் உன்நினைவு
தானாய் நிகழ்ந்து கொல்கிறது!

(எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடல் மெட்டு)