வியாழன், 29 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-162

என்னவளே
வாழ்வின் பேரானந்தத்தை
இரசிக்காத கிறுக்கர்கள்
யார் தெரியுமா?

கடற்கரையின் ஈரமணலில்
காதலியின் பெயரை
ஒரு முறையேனும்
கிறுக்காதவர்கள்!

புதன், 28 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-161

என்னவளே 
அழகான பரிசுப்பொருட்கள் 
மேலும் அழகாகிவிடுகின்றன
உன்னால் தரப்படும்போது!

ஆனாலும் 
உன் அன்பை போன்ற
எளிமையான பரிசுக்கு முன்பாக  
எதுவுமே அழகானதில்லை!

குறுஞ்செய்திகள்-160

என்னவளே 
உனக்காவது பரவாயில்லை 
யோசிக்க முடியாமல்
செய்து விட்டது!

ஆனால் எனக்கோ 
யோசிக்கும்  மூளையையே 
இல்லாமல் செய்து விட்டது 
இந்த காதல்!

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-159

என்னவளே 
எப்போதும் உன் பெயரை
உரக்க கூப்பிடுவதற்கு 
பயமாய் இருக்கிறது!

ஏனெனில் 
மெலிதான உன் பெயரை 
தென்றல் கிழித்து விட்டால் 
என்ன செய்வேன்?

திங்கள், 26 செப்டம்பர், 2011

வணக்கம் வைக்காதே!

ஒரு ஊர்ல ஒரு முதலாளிக்கிட்ட நிறைய பேர் வேலை செஞ்சாங்க.காலையில வந்த உடனே முதல் வேலையா முதலாளிக்கு வணக்கம் வச்சிட்டுத்தான் மறுவேலை பாப்பாங்க.ஆனா அதுல ஒருத்தருக்கும் முதலாளிக்கும் மனஸ்தாபம் ஆயிடுச்சு!அதுல இருந்து அந்த தொழிலாளி மட்டும் முதலாளிக்கு வணக்கம் வைக்கறத நிறுத்திட்டாரு!

இது முதலாளிக்கு மரியாதை குறைவா பட்டது!அவரும் அந்த தொழிலாளிய தனியே கூப்பிட்டு எனக்கு வணக்கம் வைக்க போறியா இல்லியான்னு மிரட்டினாரு!தொழிலாளி பயப்படுற மாதிரி தெரியல.நீ என்ன பண்ணுறியோ பண்ணிக்கோன்னு சொல்லிட்டாரு.முதலாளிக்கு ஆத்திரம் தாங்க முடியல!என்ன பண்ணலாம்னு யோசிச்சாரு.தினமும் தொல்லை கொடுத்தாரு!

இந்த விஷயம் எல்லா தொழிலாளிக்கும் தெரிஞ்சி போச்சி.ஆள் ஆளுக்கு கூடிப்பேச ஆரம்பிச்சிட்டாங்க!கொஞ்சம் பேரு முதலாளி பேர்லதான் தப்புன்னாங்க.கொஞ்சம் பேரு அந்த தொழிலாளி பேர்லதான் தப்புன்னாங்க!ஆனாலும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த மாதிரி தெரியல!தினம் தினம் பிரச்சனை பெரிசாகிகிட்டேதான் இருந்துச்சு!முடியவேயில்லை!

திடீர்னு ஒரு நாள் பிரச்சனை தலை கீழா மாறிடுச்சு!யாருக்கும் ஒண்ணுமே புரியல!அந்த தொழிலாளி காலையிலே வந்த உடனே முதல் வேலையா ஓடிப்போய் முதலாளிக்கு எல்லோரும் பாக்கற மாதிரி ரொம்ப பணிவா வணக்கம் சொல்றாரு!ஆனா முதலாளிக்கு பயங்கர கோவம் வருது! அதப்பத்தி கவலைப்படாம அந்த தொழிலாளி போய்ட்டாரு.

மறுநாளும் அதே மாதிரி அந்த தொழிலாளி அவர பாக்கறப்ப எல்லாம் ரொம்ப மரியாதையோட வணக்கம் வைக்கிறாரு. ஆனா முதலாளி ரொம்ப ரொம்ப கோவத்தோட உச்சிக்கே போயிடுறாரு!எனக்கு உன்னோட மரியாதை தேவையில்லை.
வணக்கம் வைக்காதேன்னு கத்தறாரு!அவரு ஏன் அப்படி மாறிட்டாருன்னு உங்க கமெண்ட்ல சொல்லுங்க!நான் அப்புறமா ஏன்னு உங்ககிட்ட மட்டும் சொல்றேன்!...
(அந்த தொழிலாளி முதலாளியை தனியா சந்திச்சி மரியாதை மனசில் இருந்து வரணும்.இது மாதிரி தொந்தரவு பண்ணி வரக்கூடாது .  நாளையிலர்ந்து நான் உனக்கு தினமும் வணக்கம் வைப்பேன்.ஆனா அந்த வணக்கத்துக்கு போட முண்டம்னு அர்த்தம் அப்பிடின்னு சொல்லிட்டானாம்! எப்பூடி?ஹி...ஹி...) 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-158

என்னவளே
வண்டி ஓட்ட தெரிந்த பின்னும்
தலைக்கவசம் அணியச்சொல்லி
சும்மா ஏன் தொல்லை பண்ணுகிறாய்?

தலைவிதி வசம்
என்று தலைவி சும்மா விட்டால்
தலைவி திவசம் கொண்டாடிவிட்டு
சும்மாதான் இருந்தாக வேண்டுமென்கிறாய்!

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-157

என்னவளே
விரல்களை மடக்கி மடக்கி
கணக்கு படிக்க கூப்பிட்டால்
உடைந்துவிடும் என்கிறாய்!

அடடா
பெண்களின் விரல்களை
வெண்டைகாய்க்கு வைத்தது
எவ்வளவு பொறுத்தம்!

குறுஞ்செய்திகள்-156

என்னவளே
கணக்கும் இனிக்கும்
தென்னங்குச்சிகளை கொண்டு
பெருக்கல் சொல்லித்தரவா?

அடிப்பாவி
குச்சாட்டம் ஆடுகிறாயே
தென்னந்துடைப்பம் கொண்டு
பெருக்க சொல்லித்தரவா?

வியாழன், 22 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-155

என்னவளே
அம்மாவிடம் பாடியதாய் நினைவு
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு!

இப்போதெல்லாம்
இலையுமில்லை ஈயுமில்லை
நம் சந்ததி புல்லும் நெல்லும்
எப்படியிருக்குமென கேட்குமோ?

குறுஞ்செய்திகள்-154

என்னவளே
எனக்கு அடுத்ததாக ஆண்குழந்தைதான்
என்று ஜோசியர் சொன்னதற்கு
என்னை ஏன் முறைக்கிறாய்?

உளறி விட்டு போகட்டும்
அவருக்கு எப்படி தெரியும்
குழந்தை பிறக்காதென்பது
குடும்பகட்டுப்பாடு செய்தபின்!

குறுஞ்செய்திகள்-153

என்னவளே
என்னுடைய கை போச்சே
வலி தாங்க முடியலையே
என்று இப்படியா கத்துவாய்?

அடிப்பாவி 
விரல்களையே வெட்டியது மாதிரி
ஊரை கூட்டுகிறாய்
நகம் தானே வெட்டினேன்!

குறுஞ்செய்திகள்-152

என்னவளே
எப்போது பார்த்தாலும்
புத்தகமும் கையுமாகவே
தூங்கி விடுகிறாய்!

ஐயோ பாவம்!
படிப்புதான் வரவில்லை
தூக்கமாவது வருகிறதே!
சரிசரி தூங்கு!

புதன், 21 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-151

என்னவளே
எப்போது பார்த்தாலும்
பூச்செடிகளோடுதானா?
அதற்கு என்னதான் வேண்டுமாம்?

வெடுக்கென கேட்டாய்
உன்னால் ஒலி,வலி,கண்ணீர்
தர முடியும்!
ஒளி,வளி,தண்ணீர் தர முடியுமா?

திங்கள், 19 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-150

என்னவளே
ஒவ்வொரு சந்திப்பிலும்
உனக்கு பூ கொடுக்க
என்னால் முடியும்!

ஆனால்
பூ கேட்கும் முன்
பூச்செடி பரிசளிக்க
மறந்து விடாதே!

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-149

என்னவளே
உன் மௌனம்
என் தலை சுக்குநூறாக
காரணமாகி விடுமோ?

ஒரு கணத்தில்
ஆரம்பித்த மௌனம்
கனமாய் நீள்வது
உனக்கு சம்மதமா?

வியாழன், 15 செப்டம்பர், 2011

எதிர்பார்ப்பு


நகர நெரிசலின் குறுகிய சந்தில்
ஜனத்திரள் ஊடேயான பயணத்தில்
திடுமென ஒரு பொழுதில்
கண் பொத்தி நிறுத்தும் கரங்கள்
யாருடையதாக இருக்கும்?

முகம் பார்த்து முகம் பார்த்து
சலித்துபோன கண்களுக்கு
இழையறாது சரஞ்சரமாய்
நீளும் கற்பனையில்
விதம் விதமாய் தலைகள்!

கண்களற்று போயிருந்தால்
எதை உனக்கான பிம்பமென்று
தீர்மானித்திருக்க முடியும்?
சமயத்தில் கபடம் ஏதுமற்ற
புன்னகைமுகம் காணக்கிடைக்கலாம்!

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-30

தாமரையே தாமரையே
தந்தேன் இந்த சூரியனை
தலைசாய்த்து மெளனம் காக்காதே
ஒரு தேவதை போல் நீயே வியக்கும் வண்ணம்
உன்னை தினந்தோறும் அலங்கரிப்பேன்
*
உனை நானாக எனை நீயாக
அடி எந்நெஞ்சம் எப்போதும் நினைக்கிறது
தள்ளி ஓடாதே தடை போடாதே
ஒரு பொன்மஞ்சம் இப்போது அழைக்கிறது

இரவோடு இரவாக நிலவுக்கு ஏறி செல்வோம்
காதோடு காதாக நிலவுக்கு நம்கதை சொல்வோம்
நாம் உலகம் எங்கும் ஊர்வலம் போவோம்
ஆகாய மேகத்தில்...
*
உயிர் நீதானே உடல் நான்தானே
உடல் மேல் உயிர்வந்து ஒன்றாதோ
மெல்ல தீண்டிவிடு என்னை தூண்டிவிடு
தூண்டாத தீபம் சுடர் விடுமோ?

இரவோடு இரவாக நிலவுக்கு ஏறி செல்வோம்
காதோடு காதாக நிலவுக்கு நம்கதை சொல்வோம்
நாம் உலகம் எங்கும் ஊர்வலம் போவோம்
ஆகாய மேகத்தில்...
*
(குறிப்பு:வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா?விளையாட ஜோடி தேவை என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-29

அத்து மீறுதேஅன்பே...
ஆசை அலை அத்து மீறுதே...
ஆயிரமாயிரம் உணர்வுகள் கிளர்ந்து
அத்து மீறுதே...அன்பே...
ஆசை அலை அத்து மீறுதே...

சிறை வசமான
பிறை நிலா ஒன்று
மேகம் உடைத்து வெளியிலே-இந்த
பூமியை பார்த்த நொடியிலே...
*
கதிரவன் ஒளியை நட்ட நடுநிசியில் உணர்கிறேன்
காற்றை புணரும் ஒரு மெளனம் உணர்கிறேன்
சில்வண்டு ரீங்கரிப்பில் மெல்லிசை உணர்கிறேன்
சொல்லில் சொல்லவொண்ணா-
இன்பத் தொல்லை உணர்கிறேன்!

என்னை காண்கிற சந்தர்ப்பம் நேர்ந்தால்
கண்களை தாழ்த்தி கடந்து போ-அடி
உந்தன் கொலுசு பாதங்களினால்
இதயம் நசுக்கி நடந்து போ
மங்கும் விழிகளில் மலரும் முகங்களில்
என்முகம் எதுவென மறந்து போ
*
முற்றும் போட்ட பின்பும்
கதை தொடருதே
முள்ளென்று தெரிந்தும்
கொடி படருதே
என் செய்வேன்
என் செய்வேன்?
என் இறைவா...

கொடுவாள் கொண்டு வெட்ட
பீறிடும் இளநீர் போலவே
உனது ஞாபகங்களினாலே...
*
(குறிப்பு:அலை பாயுதே...கண்ணா... என் மனம் அலைபாயுதே என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-28

கார்மேகம் சூழும் வரை
மயில் ஆடிடத்தான் நினைக்கும்
என் தேகம் வாழும் வரை
மனம் பாடிடத்தான் நினைக்கும்
*
ஒரு மூங்கிலின் பாடல்தான்
இந்த தென்றலின் தாலாட்டோ?
ஒரு பூமியின் பாடல்தான்
அந்த திங்களின் சீராட்டோ?
ஒரு காதலின் பாடல்தான்
எந்த உயிருக்கும் பாராட்டோ?
*
ஒரு புல்லின் பாடலுக்கு
இந்த பனித்துளி பரிசு தரும்
ஒரு பூவின் பாடலுக்கு
அந்த தேன்துளி பரிசு தரும்
ஒரு வாழ்வின் பாடலுக்கு
எந்த தேடலும் பரிசு தரும்
*
(குறிப்பு:ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-27

மலரே மலரே உன் வாசம்
மேகக் குழலாள் தூதுவிட
மறந்தாள் போலும் மங்கையவள்
எனக்கன்று ஜலதோஷம்
*
நான் பனிவிழும் இரவுகள் யாவிலும்
அவளை எண்ணியே விழித்திருந்தேன்
தேன் சிந்திடும் பூமர நிழலிலும்
உறக்கம் இன்றியே படுத்திருந்தேன்

கனா காண ஏங்கினேன்
கண்ணோடு இமை சேருமா?
கானல் தானே வாங்கினேன்
என்னோடு சுமை தீருமா?
கண்ணன் இங்கே ராதை எங்கே?
*
என் தேவதை தண்ணீர் கேட்டால்
பூவின் மொட்டுகள் உடைத்திடுவேன்
ஓர் பார்வையை பதிலாய் தந்தால்
நூறு கவிதைகள் படைத்திடுவேன்

வரையறை இல்லையே
என் அன்பை நான் சொல்லவே
தலையணை வெள்ளமே
என்னோடு அவள் இல்லையே
கண்ணன் இங்கே ராதை எங்கே?
*
(குறிப்பு:மனசே மனசே குழப்பமென்ன இதுதான் வயசே காதலிக்க என்ற பாடல் மெட்டு)

குறுஞ்செய்திகள்-148

என்னவளே
தொலைக்காட்சி பெட்டியா?
தொல்லைக்காட்சி பெட்டியா?
நீயே சொல்!

உன்னையும் என்னையும்
பேசவிடாமல்
இடைஞ்சல் பண்ணும்
முட்டாள் பெட்டி!

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-147

என்னவளே 
வண்டி ஓட்டும் போது 
கண்ணாடி அணிய சொல்லி 
எத்தனை முறை சொல்லியிருப்பாய்?

அதனாலென்ன?
தூசி விழுந்த கண்களை 
ஊதி விடுவதற்கு 
உன்னிடம்தான் உதடுகள் இருக்கிறதே? 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-26

அல்லி மலரே அல்லி மலரே
சந்திரனை மறந்தாயோ?
சந்திரனையே மறந்துவிட
எப்படித்தான் துணிந்தாயோ?

பல வாசமலர்களை பார்ப்பது என்னவோ உண்மைதான்
என் காதல் நெஞ்சம் கேட்பது என்னவோ உன்னைதான்
உனை எண்ணியே உடல் தேய்கிறேன்
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
*
எந்தன் காதலை நானும் சொல்ல
எந்த மொழியிலும் வார்த்தை இல்லை
என்னை நீயும் உதறித் தள்ள
இந்த உயிருக்கு வாழ்க்கை இல்லை

கை ஓங்கும் முன்பாக
அடித்தார் போல் கத்தாதே
பூத்தொடுக்கும் பொன்விரலால்
என் விழியை குத்தாதே

உன்னோடு அடைக்கலமாக
என்னுள்ளம் இருக்கிறதோ?
அதனால்தான் ஏளனமாக
உன்பார்வை சிரிக்கிறதோ?
*
இதய குளத்தில் நீ வந்து குளித்தாய்
நூறு இன்பம் எப்படி விளிக்க?
கரையில் ஏறி நஞ்சினை தெளித்தாய்
கோடி துன்பம் எப்படி விளிக்க?

எதைஎதையோ படித்தேனே
பெண்ணுள்ளம் படிக்கலையே
பெண்ணுள்ளம் படிக்காத
என்னுள்ளம் வெடிக்கலையே

எது ஒன்று செய்தால் என்னை
பூரணமாய் நம்பிடுவாய்?
என்னை விட்டு விலகிப்போகும்
காரணத்தை சொல்லிடுவாய்!
*
(குறிப்பு:வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா? என்ற பாடல் மெட்டு)

குறுஞ்செய்திகள்-146

என்னவளே 
பள்ளிக்கு விடுமுறையா என்று 
தெரிந்துதான் கேட்கிறாயா?
தெரியாமல் கேட்கிறாயா? 

புரிந்து கொள்
இது தமிழ் நாடு 
ஓணம் பண்டிகைக்கெல்லாம்
விடுமுறை கேட்க கேரளாவா?


செவ்வாய், 6 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-145

அன்பே
தனிவகுப்பு என்பதிலே
எனக்கும் உடன்பாடில்லை
ஆனாலும் அது உனக்கே தேவைதானோ?

ஒருவேளை
தனிவகுப்பை ஆங்கிலத்தில்
தவறின்றி எழுதி இருந்தால் 
இப்படி உன்னை கேட்டிருக்க மாட்டேன்! 


திங்கள், 5 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்144

என்னவளே
நீ சிரித்தால் சிரிக்கவும் 
நீ அழுதால் அழவும்
நிலைக்கண்ணாடியாக மாறவா? 

ஐயையோ...
நான் சொன்னது தப்பு
கோரிக்கையை திரும்ப பெறுகிறேன்
அடிக்கடி கோபத்திலேயே இருக்கிறாய்! 

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-143

என்னவளே நீ 
எனக்கு மட்டும் காதலி
என்று நினைத்து 
தெரியாமல் ஏமாந்து விட்டேன்!

ஆனால் நீயோ 
கவிதைக்கும் காதலி 
என்பதை அறிந்து
இருவருக்கும் காதலனாகிவிட்டேன்!

குறுஞ்செய்திகள்-142

என்னவளே 
ஏதோ ஒரு நாள் 
தலைவலி வந்ததற்காக 
மாத்திரை கேட்கிறாயே?

எப்போதுமே 
உன் கூடவே இருக்கிறேன் 
ஒரு நாளாவது நான் 
மாத்திரை கேட்டிருப்பேனா?

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-25

உந்தன் பிம்பம் விழுகின்ற பனித்துளி முத்தாகும்
உந்தன் அழகை காண்கின்ற மனமோ பித்தாகும்
ஒரு வானவில் உருவாக்குவேன்
உன் தாவணி நூல் கிடைத்தால்
தலைவியே நீ உரைத்தால்
*
அசையும் தென்னங்கீற்றோடு
உந்தன் அழகு குழலாடும்
முதன்முறை முத்தம் நான் கொடுத்த
நினைவுகள் வந்து நிழலாடும்

பொருள் கொடுத்து பூக்கச்சொன்னால்
பூக்கள் என்றும் பூக்காது
காசு பணம் எதனையுமே
காதல் என்றும் கேட்காது

நம் காதல்தான் இந்த பூமிக்கு
முன்மாதிரி ஆகுமே
என்றும் வாழுமே
*
இருவரும் இணையும் பொழுதுகளில்
தென்றலும் மத்தியில் நுழையாது
தேனொளி நம்மில் வீசிடவே
திங்களும் வருமே அழையாது

காரிகையே உன் உருவை
தூரிகை கொண்டா தீட்டுவது?
பேரழகை சித்திரத்தில்
எவ்விதம் வரைந்து காட்டுவது?

உயிர்ப் பூவினை உனக்காகத்தான்
இதுநாள் வரை சுமந்திருந்தேன்
உனக்கதை பரிசளிப்பேன்
*
(குறிப்பு:எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-24

கண்மணியே கண்ணுபடும்
ஒரு திருஷ்டிப் பொட்டு வேணுமடி
பிரம்மனுக்கே ஆச்சரியம்
தன் சிருஷ்டி கண்டு தோணுமடி

யாரும் காணாத உருவாய்
எந்தன் கண்ணோடு வருவாய்-அடி
உன்னோட திருவாய்
தப்பாமல் தருவாய்
*
ஊரு கண்ணு பூரா
உம்மேலையும் எம்மேலையும்
காதுபட என்னென்னவோ
முன்னாலையும் பின்னாலையும்

ஐயய்யோ அடுக்காது
அவனுக்கே பொறுக்காது
அவுக பேச்செல்லாம்
இனிமே எடுக்காது

தங்கத்துல செஞ்சிபுட்டேன் தாலி
தங்கமே யாரு செய்வா கேலி-அடி
உன்னை சுத்தி இன்னும் கூட
ஏண்டியம்மா வேலி
*
காதுல முத்தங் கொடுத்து
உசிரையே கரைச்சவளே
தலையில மிளகாய
சொல்லாமலே அரைச்சவளே

உன்னோட குறும்பெல்லாம்
எந்நாளும் மறக்காது
என்னோட இதய சன்னல்
யாருக்கும் திறக்காது

அசையும் பச்சைவயல் நாத்து
அதைத்தான் தழுவும் தென்றல் காத்து-அடி
நீயோ நாத்து நானோ காத்து
போதும் கதவ சாத்து!
*
(குறிப்பு:ராசாவே உன்னை நம்பி ஒரு ரோசாப்பூ இருக்குதுங்க என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-23

நீண்ட கூந்தலிலே
நிலவ கட்டிவச்ச பூங்குயிலே
நித்தம் உன் நினைப்ப நெஞ்சுக்குள்ளே
பொத்தி பொத்தி வாரேன் பெண்ணே
உன்னை குட்டி போட்ட பூனை போல
சுத்தி சுத்தி வாரேன் கண்ணே

இமையோரம் நதி ஓட
இதயம் ஒரு ஜதி பாட
ஐயய்யோ எனக்கென்ன ஆனது?ஏனிது நேர்ந்தது?
காதலோ?
உன்னை காணாம இருந்திருந்தா
ஒண்ணும் ஆகாம இருந்திருக்கும்
இனி நீ சொல்லியோ நான் சொல்லியோ
அதை கேட்க போவதில்லை இந்த பாவி நெஞ்சம்!
*
மாமன விட்டு தள்ளி போறவளே
மஞ்சம் அதில் எனக்கு இடமில்லையோ?
கூரப்பட்டு உடுத்தி போறவளே
குஞ்சம் அதில் எந்தன் உசிரில்லையோ?
சேலைக்குள்ள சோலைகளை
ஒளிச்சு வச்ச உயிர்ச்சிலையே
ஒரு விதையை மறைக்கிற மண்ணுந்தான்
முளைக்கையில் அதனிடம் தோற்குமே!
*
இதயமதை என்னிடம் கொடுத்து விட்டு
என்னை நீயும் வாங்கிக்கொள்ளடியே
இளமையது தீர்ந்து போவதற்குள்
இருக்கும் வரை வாழ்ந்துகொள்ளடியே
காதலெனும் செய்யுளிலே
இலக்கணங்கள் ஏதுமில்லை
இளமனச முறுக்கியே பிழியுது
சிறுக்கியின் சின்ன இடை வேர்வதான்!
*
(குறிப்பு:குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே என்ற பாடல் மெட்டு)

வியாழன், 1 செப்டம்பர், 2011

குறுஞ்செய்திகள்-141

என்னவளே 
உள்ளுக்குள் மிகவும் 
குறு குறு என்று 
சொல்லமுடியாத உணர்வு!

அடியே 
உன்னுடைய மௌனம் 
எப்படியெல்லாமோ என்னை 
பொருள் கொள்ள வைக்கிறது!