ஞாயிறு, 18 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-228

என்னவளே
ஒப்பிலா அழகுடன்
உலகை படைத்த இறைவன்
எங்கே இருக்கிறான்?என்றேன்

அடடா
அழகு உலகை ரசித்து
கண்களால் கெளரவப் படுத்து
கடவுளை காணலாம்!என்கிறாய்

செவ்வாய், 13 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-227

என்னவளே
இறந்த பின்னும்
இன்னும் நினைக்கப்படும்
பாரதி பிடிக்குமா?என்றேன்

அடடா
அண்டை மாநிலங்கள்
சண்டை போட்டு கொண்டிருந்தால்
பார் தீ பிடிக்கும்!என்கிறாய்

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மெட்டுப்பாடல்கள்-31

உன் கண்ணின் மணியாக
என்னை வைத்தாயே!
உன் நெஞ்சுக் கூட்டோடு
என்னை தைத்தாயே!

நான் உனக்கோர் அடையாளம்
உன்னை காக்கும் கடிவாளம்
உந்தன் தொடுகையிலே
உணர்கிறேன் மின்சாரம்

தினந்தோறும் உன்னால் நான் சிறக்கின்றேனே
இறக்கையொன்றும் இல்லாமல் பறக்கின்றேனே!
*
கண்களை கவர்ந்தே இழுக்கும்
வண்ணங்கள் என்னிடம் உண்டு
மலரும் நான் இல்லை
மொழிந்திடு முடிந்தாலே!

அழகாக வானில் பறப்பேன்
அண்ணாந்து பார்த்திட வைப்பேன்
பறவையும் நான் இல்லை
பகர்ந்திடு முடிந்தாலே!

என்மீது காதல் கொண்டோர்
எனக்காக உயிரும் தந்தோர்
எத்தனை பேரென்று
கணக்கே தெரியவில்லை!

என்பேர் என்பேர் என்னென்று நான் சொல்லவா?
*
இருபத்து நான்குக்கும் எனக்கும்
இருக்குதொரு சம்பந்தம் தானே
கடிகாரம் நான் இல்லை
கண்டுபிடி முடிந்தாலே!

சக்கரம் என்னிடம் உண்டு
செல்லாத ஊரே இல்லை
வாகனம் நான் இல்லை
விடை சொல்லு முடிந்தாலே!

என்னாலே கர்வம் கொண்டோர்
பின்னாலே அணி திரண்டோர்
எத்தனை பேரென்று
எண்ணிட முடியாதே!

என்பேர் என்பேர் என்னென்று நான் சொல்லவா?
*
(குறிப்பு:உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது என்ற பாடல் மெட்டு)
எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் பாடலில் கடைசி வரை அது என்ன பேர் என்று சொல்லவேயில்லை!(பாட்டில்)

அந்த கடுப்பிலேயே இந்த பாட்டை எழுதினேன்.நானும் சொல்லவேயில்லை!ஆனா நீங்க கண்டு பிடிச்சிடுவீங்கன்னு தெரியும்!

வியாழன், 8 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-226

என்னவளே
மாப்பிள்ளையை நிமிர்ந்து
நன்றாகப் பார்த்துக் கொள்ளென்று
எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை நீ!

அடடா
நிலைக்கண்ணாடி வழியே
நெடுநேரம் என்னுடன் நீ
கண்களால் பேசியதை யாரறிவார்?

செவ்வாய், 6 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-225

என்னவளே
நட்பின் கூட்டத்தில்
எல்லோரையுமே
சேர்த்துக்கொள்ள ஆசை!

அடடா
சில உறவுகள்
உடைந்த சில்லுகளாய்
ஒட்ட வைக்க என்செய்வேன்?

குறுஞ்செய்திகள்-224


என்னவளே
குழந்தை ஊட்டும் பாலை
எப்படிக் குடிக்கும்?
விலை உயர்ந்த பொம்மை நாய்!

அடடா
கதவுக்கு வெளியே
பசியால் காதடைத்து
ஏக்கமாய் பார்க்கிறது உயிருள்ள நாய்!

திங்கள், 5 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-223

என்னவளே
வரங்கள் தா என்று
தவமிருக்காமலேயே
வரங்கள் தருபவரும் உண்டோ? என்றேன்

அடடா
அத்தகைய கடவுள்கள்
இன்னும் இருக்கிறார்கள்
அவர்கள் பெயர் தாவரங்கள்! என்கிறாய்

சனி, 3 டிசம்பர், 2011

குறுஞ்செய்திகள்-222

என்னவளே
ஐம்பதாயிரத்தை இரண்டாக்கி
கணினியும் கழுத்துஅட்டிகையும்
வாங்கி ஐந்து வருடமாகிறது!

அடடா
இன்றைய மதிப்பீடு உண்மைதான்
என் பங்கு பாதி உனது இருமடங்கு
நீ பூட்டியல்லவா வைத்திருக்கிறாய்?

குறுஞ்செய்திகள்-221

என்னவளே
கல்யாணத்துக்கு முன்
கட்டாய எச்.ஐ.வி சோதனை
சந்தேகப்படுவதாகாதா?என்றேன்

அடடா
அது சந்தேகமில்லை
அடுத்த தலைமுறை
மீதான அக்கறை! என்கிறாய்