புதன், 31 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-140

என்னவளே 
எது சொன்னாலும் 
காதில் விழாதமாதிரி 
மீண்டும் என்னவென்று கேட்கிறாய்!

போடி பிசாசு...
என்றால் மட்டும் 
காதில் விழுந்து தொலைக்கிறதே 
இதை என்னவென்று சொல்வது?

குறுஞ்செய்திகள்-139

என்னவளே 
எப்போதுமே உனக்கு 
அதிஷ்டம் என்பது தேவைப்படாது 
என்றே எனக்கு தோன்றுகிறது!

ஏனெனில் 
வெற்றிக்கான தகுதியை 
வளர்த்துக் கொள்ளும் திறமை 
உன்போல் யாருக்கு வரும்?

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-138

குழந்தையிலிருந்தே தேடுகிறேன்
என்னை க்ளிக் க்ளிக் என்று
ஆடையின்றி எடுத்து தள்ளி விட்டான்
அந்த புகைப்படக் கலைஞன்!

என்னவளே எது எப்படியோ
உன்னை களுக் களுக் என்று
வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டான்
பிழைத்து போகட்டும் அவன்!

குறுஞ்செய்திகள்-137

என்னவளே 
உண்டிவில்லை கொண்டு வா 
மாங்காய் அடிக்கலாம் 
என்றுதானே  கூப்பிட்டாய்?

அடிப்பாவி!
இதென்னது?திடீரென்று
வலிக்குமா என்று கேட்டு 
என்னை குறி வைக்கிறாய்?

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மெட்டுப்பாடல்கள்-22

பூவெல்லாம் பூத்திருக்கு
உன் வரவை பார்த்திருக்கு
என் வீட்டு தோட்டத்தில்
எங்கெங்கும் உல்லாசமே

திருநாள் தானடி வீதியில்
என் தேவதை நீ வரும் தேதியில்
என் ஜீவனை விடுவேன் பாதியில்
என் தேவதை மறையும் தேதியில்
*
பையோடு கோவில் செல்ல எதிரில் வந்தாயே
கையோடு மனதையும் சேர்த்து வாங்கி சென்றாயே
தென்றல்தான் உன்னைத்தொட்டு என்னைத்தழுவியது
உள்ளம்தான் என்னை விட்டு தானாய் நழுவியது

உன் நெற்றி பொட்டில் தானே
என் உயிரை ஒட்டி வைத்தாய்
நீ உடுத்தும் பட்டில் தானே
எனை நூலாய் கட்டி வைத்தாய்

உந்தன் கூந்தல் பூவாய் மாறவா?
நித்தம் ஊஞ்சல் நானும் ஆடவா?
*
கண்ணோடு கனவாய் வந்து என்னை எழுப்புகிறாய்
என்னோடு உறவாய் வரவே ஏனடி மழுப்புகிறாய்
மேகம்தான் உன்னை கண்டால் மழையாய் கொட்டுதடி
வானம்தான் கைகள் ரெண்டில் வசமாய் எட்டுதடி

அடி கடலை சேர நதியும்
ஒரு கப்பம் தருவதில்லை
அடி உடலை சேர உயிரும்
விண்ணப்பம் தேவையில்லை

இதய கதவை நீதான் உடைத்தாயோ?
காதல் உயிலை திருடிப் படித்தாயோ?
*
(குறிப்பு:பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-21

பூ மேகம் நெஞ்சில் பூ மேகம்
என் கண்ணில் கொஞ்சம் நீர் தூவும்
நெஞ்சில் என்றும் சந்தோஷமே
கண்ணீர் பாடும் சங்கீதமே
*
ஒவ்வொரு நிமிஷத்திலும்
என்னை அறியாமல் உனை நினைத்தேன்
நுரையீரல் சிற்றறையில்
சுவாச காற்றாக உனை நிறைத்தேன்

நீர் இன்றி வாடும் பயிராக
அட நீ இன்றி உயிர் ஆகுமே
இலையே உந்தன் பச்சயம் நான்
உன்னை என்றும் பிரியேன் நிச்சயம் தான்
*
காதலின் தீபத்திலே
கண்ணே திரியாக நான் எரிவேன்
உயிருள்ள காலம் வரை
உன்னோடு துணையாக நான் வருவேன்

நிலவாக என்றும் நீதானே
எந்தன் மனம் என்னும் வானத்திலே
என்னில் என்னை காணவில்லை
அடி வேறொன்றும் சொல்ல தோணவில்லை
*
(குறிப்பு:ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம் பேரை சொல்லும் ரோசாப்பூ என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-20

கொலுசொலி கேட்டு விட்டால்
எந்தன் நெஞ்சம் தாளமிடும்
ஆயிரம் பாடல்கள்
ஒரு நொடியினில் தோன்றிவிடும்

உந்தன் பார்வை தீண்டியே
நானோர் கவிஞனாகிறேன்
உந்தன் வேர்வை தீண்டினால்
ஐயோ என்ன சொல்லுவேன்?

காதலே என் காதலே
அட உனக்கென சிந்திடும் கண்ணீர்
ஏனோ இனிக்கிறதே
*
கண்ணுக்குள் பூக்குதடி வண்ணமலர் பூந்தோட்டம்
பூந்தோட்டம் எங்கெங்கும் ஓடுதடி உன் தேர் மட்டும்

தாமரை நினைவுகளோ தண்ணீரோடுதான்
காதல் நினைவுகளோ கண்ணீரோடுதான்

மண்ணை மரமது மறப்பதில்லை
வான் வரை வளர்ந்தாலும்
உன்னை மனமது மறப்பதில்லை
என்னுயிர் பிரிந்தாலும்
காதல் தந்த கண்ணீர் இனிக்குதடி
*
இதயத்தில் பறக்குதடி இன்னிசை குயில் கூட்டம்
குயில் கூட்டம் நெஞ்செங்கும் கூவுதடி உன் பேர் மட்டும்

மனம் போல் அலைகின்றேன் விண்ணில் மேகமாய்
மழைப் போல் தொலைகின்றேன் மண்ணில் வேகமாய்

என்னை எனக்கே யார் என்று
காதல் சொல்லியது
எந்தன் தேடல் நீ என்று
காதில் சொல்லியது
காதல் தந்த கண்ணீர் இனிக்குதடி
*
(குறிப்பு:இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-19

கண்ணை மூடு இமையே
என்னை கனவில் தொலைக்க வேண்டும்
அவள் அழகை ரசிக்க வேண்டும்
இந்த இரவு நாளை விடிந்து போகுமோ?
ஒரு விடை சொல்லாமல் முடிந்து போகுமோ?
*
உயிரின் மொழியை அறிந்தேன்
உலகின் மொழியை மறந்தேன்
உந்தன் அங்கம் எங்கும் எங்கும்
தங்க சுரங்கம் தங்க சுரங்கம்
எந்தன் அங்கம் வந்து தங்கும்
இன்ப அரங்கம் இன்ப அரங்கம்

இளமையை மனம் ரசித்திட
இனிமையை தினம் ருசித்திட
பெண்மையே கொஞ்சம் இளகிடு
அண்மையில் கொஞ்சம் இடங்கொடு

மூவுலகும் வியக்க எண்ணி
பிரம்மனே உன்னை பண்ணி
பூவுலகம் வந்த கன்னி நீயோ
*
உடலின் உதிரம் நீதான்
உயிரின் உறையும் நீதான்
மலரின் இதழில் வண்டு கொடுக்கும்
ஆயிரம் முத்தம் ஆயிரம் முத்தம்
எந்தன் மனதை வந்து கெடுக்கும்
ஆனந்த சத்தம் ஆனந்த சத்தம்

நித்தம் நித்தம் எந்தன் கண்ணிமையில்
நடம் இடும் அந்த கன்னிமயில்
உனையன்றி வேறு யாரடி
எனை வந்து நீயும் சேரடி
பலநூறு வாசம் இங்கே
உன்னுடைய வாசம் எங்கே
என்னுடைய சுவாசம் அங்கே பூவே
*
(குறிப்பு:என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-18

ஏ மழையே நீ விழவே
ஓர் அழகு பூ நனைய
அம்மம்மா கண் கொள்ளா அழகே

சிரிக்கிறதே ரோஜாப் பந்து
சிவக்கிறதே நாணம் வ்ந்து
வாசம் வீசும் பேசும் பூவை கண்டேனே
*
சின்ன கண்கள் ரெண்டை கண்டால் கவிதை வாராதோ?
உந்தன் கையில் என்னைத் தந்தால் ஆயுள் நீளாதோ?
உனையே நினைத்தேன் தினந்தோறுமே
நினைத்து வியந்தேன் கணந்தோறுமே
முள்ளோடும் தான் பூக்கும் ரோஜாமலர்
*
பாதை எங்கும் பூத்துக் குலுங்குது பாவையின் பாதம் பட்டு
போதை தன்னால் ஏறுது எனக்கு பாவையின் பார்வை தொட்டு
பிறப்பை எடுத்தேன் எதற்காகவோ
காதல் படித்தேன் அதற்காகவோ
சஞ்சீவியாய் நாளும் வாழ காதல் செய்வோம்
*
(குறிப்பு:ஓ மரியா நீ வரியா ஈமெயிலில் லவ் லெட்டெர் தர்ரியா என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-17

அன்பே உன் காதல்
பூங்காற்றின் வாசம்
பூமி எங்கெங்கும்
அதன் வாசம் வீசும்

மண் மழையினை தொடாமலே
ஒரு வாசம் வருவதில்லை
பெண் மனதினை தொடாமலே
ஒரு நேசம் வருவதில்லை

காதலுக்கு மொழி இல்லை
காதலுக்கு மதம் இல்லை
காதலுக்கு இனம் இல்லை
காதலுக்கு ஜாதி இல்லை
*
கோயில் நுழைந்தாலே கண்மணி உன் நினைவு
நோயில் விழுந்தாலே கண்மணி உன் நினைவு
ஒவ்வொரு செயலும் செய்யும் போது
கண்மணி உன் நினைவு

கண்மணியே உன் நினைவு காலம் வென்றிடும்
கண்மணியே உன் நினைவு நெஞ்சில் நின்றிடும்
*
நிலவில் நனைந்தாலே கண்மணி உன் நினைவு
பனியில் நடந்தாலே கண்மணி உன் நினைவு
மின்மினி பூச்சிகள் காணும் போது
கண்மணி உன் நினைவு

கண்மணியே உன் நினைவு இனிமை கொடுத்திடும்
கண்மணியே உன் நினைவு இளமை கொடுத்திடும்
*
(குறிப்பு:ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-16

அன்பே உன் கண்களில்
கண்ணீரை காட்டாதே
கண்ணீரை காட்டியே
இதயத்தை வாட்டாதே

கண்ணோடு சோகம் ஏன் ஏன் ஏன்?

இன்முகம் நீ காட்டிடு
என்னுயிர் நீ காத்திடு
*
பனிகூட தாங்காத மலர் உந்தன் அங்கமோ?
புரிந்தவன் நான் அதை உரைத்திடல் பங்கமோ?
உனை பிரியும் நேரமோ
உயிர் கூட பாரமோ
உன் சோகம் தீருமோ
என் தேகம் வாழுமோ
காதல் மரம் பூக்குமோ
கண்ணீர் வரம் கேட்குமோ
கண்ணை பிரிந்திடும் இமை உள்ளதோ?
*
என் வானில் மேகமோ பூமழைகள் பொழிந்தது
பூமழைகள் பொழிந்ததில் சந்தோஷம் வழிந்தது
காலங்கள் மலர்ந்தது
காயங்கள் மறைந்தது
துக்கங்கள் தொலைந்தது
தூளாகக் கரைந்தது
சொர்கம் தான் திறந்தது
ஆனந்தம் பிறந்தது
உன்னை மறந்திடும் நாள் இறப்பேன்!
*
(குறிப்பு:எங்கே என் புன்னகை? எவர் கொண்டு போனது?தீப்பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது என்ற பாடல் மெட்டு)

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-136

என்னவளே 
உடம்புக்கு முடியவில்லை 
மிகவும் மோசமாக 
உணருகிறேன்!

உனக்குத்தான் 
எவ்வளவு அக்கறை!
இப்படியே இருக்கலாமென்று 
நினைக்கிறேன்!

புதன், 24 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-135

பூட்டிய சிறைக்குள் 
மாட்டிய கைதிகள் 
விடுதலையானால் 
மடிந்து விடுகிறார்கள்!

அவர்கள் யாரென்று 
என்னை ஏன் கேட்கிறாய்?
நானென்ன சட்டைப்பையிலா
அவர்களை வைத்திருக்கிறேன்?

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-134

எனக்கு உன்னுடைய முடிவு 
ரொம்ப ரொம்ப பிடிக்கும் 
என்று சொன்னது 
சரியாகத்தானே காதில் விழுந்தது?

ஏன் கேட்கிறேன் என்றால்
அடிக்கடி 
உன்னுடைய முடிதான்
என் சாப்பாட்டில் நிறைய இருக்கிறது!

குறுஞ்செய்திகள்-133

என்னவளே
என்ன செய்கிறாய்?
ஏது செய்கிறாய்?
ஒரு தகவலும் இல்லை!

அது சரி 
எனக்குதான் 
வேறு வேலையில்லை 
உன்னை நினைப்பதை தவிர!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-132

என்னவளே 
உன்னுடன் பேசாவிட்டால் 
தண்டனை தரப்போவதாய் 
சொல்கின்றாயே!

உன்னுடன்
பேசாமல் இருப்பதே 
எனக்கு தண்டனைதான் 
என்று தெரியாதா?

கரும் பலகை     அந்த மாணவியின் பெயர் ஞாபகத்தில் இல்லை.வகுப்பு மூன்றாவது.அந்த பெண்ணின் அக்கா வேம்பரசி அப்போது எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் அப்பா கலியபெருமாள் ஆசிரியர்கள் மீது மரியாதை உள்ளவர்.அடிக்கடி பள்ளிக்கு வந்து பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை நலம் விசாரிப்பவர்.ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் கூட பெண் பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.ஊரில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு படிவங்களை நிரப்ப அவர் உதவி செய்வதை நானே நேரில் பல முறை பார்த்திருக்கிறேன்.மிகவும் வறுமையான குடும்பம் எனினும் ஒரு போதும் வறுமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெற்றிலை பாக்கை குதப்பி கொண்டே காவிப்பற்கள் தெரிய சிரிக்கும் அவர் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது.
     சரி சரி விஷயத்துக்கு நேரா வா!என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.கொஞ்சம் பொறுங்கள்.எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை!அதான் இப்படி!(ஹி...ஹி...ஹி...)எல்லா வகுப்புகளுக்கும் சுவர் கரும்பலகைகள் இருந்தன.மூன்றாம் வகுப்பைத்தவிர! நான் தான் மூன்றாம் வகுப்புக்கு வகுப்பாசிரியர்.சுவர் கரும்பலகை இல்லாததால் மாற்று ஏற்பாடாக தலைமை ஆசிரியர் சட்டத்தில் நிறுத்தி வைக்கும் சாய்வு கரும்பலகையை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.சாய்வு கரும்பலகையும் நல்ல வசதியாகத்தான் இருந்தது அதை நிறுத்தி வைக்கும் சக்கை ஒழுங்காக இருந்தவரை!சக்கை உடைந்து போனதால் கரும்பலகையை சட்டத்தில் இருந்து அகற்றி விட்டு சுவரில் சாத்தி வைத்து எழுதிக்கொண்டிருந்தேன்.
     நான் கொஞ்சம் உயரம் என்பதால் குனிந்து குனிந்து எழுத வேண்டியதாக இருந்தது!பல நேரங்களில் முட்டி போட்டு எழுத வேண்டியதாக இருந்தது!
(எங்கள முட்டி போட சொல்ற இல்ல?நல்லா முட்டி போடு என்று மாணவர்கள் உள்ளுக்குள் சந்தோஷப் பட்டிருப்பார்களோ?)எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!இதிலே இன்னொரு கூத்தும் நடக்கும். நான் இந்த பக்கம் எழுதினால் அந்த பக்கம் இருப்பவர்கள் மறைக்கிறது என்றும் அந்த பக்கம் எழுதினால் இந்த பக்கம் இருப்பவர்கள் மறைக்கிறது என்றும் மாறி மாறி புகார் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! தீராத தலைவலியாக இருந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
     திடீரென்றுதான் அந்த யோசனை எனக்கு பளிச்சிட்டது! நாமே ஏன் சட்டத்தை சரி செய்து கரும்பலகையை தூக்கி உயர வைத்து எழுதக்கூடாது?என்ற எண்ணம் வ்ந்த உடன் என்னையே ஒரு முறை பாராட்டிக்கொண்டு மளமளவென்று செயலில் இறங்க ஆரம்பித்தேன்! ஒரு ஓரமாய் சாத்தி வைத்திருந்த சட்டத்தை கொண்டு வந்து சுவரில் சாத்தி வைத்துவிட்டு டேய்! ஓடிப்போய் ரெண்டு குச்சி ஒடைச்சிக்கிட்டு வாங்கடா என்று கட்டளை இட்டேன்!குச்சிகள் வந்தவுடன் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு குச்சியை சொருகி,மாணவர்கள் உதவியுடன் கரும் பலகையை தூக்கி உயரே வைத்தேன்!முன் வரிசையில் முதல் ஆளாக வேம்பரசியின் தங்கை அமர்ந்திருந்தாள்.ஒரு வழியாக கரும்பலகை எல்லோர் பார்வைக்கும் தெரிந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியாக கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்!
     கரும்பலகையில் ஒரு வார்த்தை கூட எழுதியிருக்க மாட்டேன்!அதற்குள் அந்த விபரீதம் நடந்தது!கரும் பலகை வழுக்கி அந்த மாணவியின் காலில் விழுந்தது!(படு பாவிப்பசங்க ஓணாங்குச்சியையா ஒடைச்சி கிட்டு வந்து தருவானுங்க!)நிலமையை உணர்ந்து அவளை தூக்க ஒரே ரத்தம்!பெருவிரலை எவ்வளவு அழுத்தி பிடித்தும் ரத்தம் நிற்கவே இல்லை!(காயம் மோதிர விரலில்)குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டே வ்ந்து என்னை திட்டுவதற்காக வாயெடுத்த அவளின் அம்மா ரத்தத்தை பார்த்து தொபக்கடீரென்று மயக்கம் போட அவரை எழுப்புவதே பெரும் பாடாய் ஆகிவிட்டது!(பயபுள்ளைங்க அதுக்குள்ள வீட்டுக்கு தகவல் குடுத்துடுச்சே!)
     அந்த மாணவியின் அப்பா ரொம்ப நல்லவரானதால்(மிகச்சரியாக நகரப்பேருந்திலிருந்து அப்போதுதான் இறங்கி பள்ளிக்கு வந்தார்)
பிரச்சனை பெரிதாகவில்லை!விழுப்புரம் அழைத்து சென்று கட்டு கட்டி எக்ஸ்ரே எடுத்து பார்த்து(என் செலவில் தான்)அவளின் கால் சரியானது!
அன்றுதான் கற்றுக்கொண்டேன் எதையும் முன் ஜாக்கிரதையோடு செய்ய வேண்டும்!


சனி, 20 ஆகஸ்ட், 2011

ஆட்டுக்குட்டி               நான்காம் வகுப்பு தமிழ் புத்தகம் என்பதாய் ஞாபகம்.அனேகமாக அது கடைசிப்பாடமாக இருக்கலாம்.பாடத்தின் பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.வெற்றுத்திண்ணை...
                         அந்த கதையில் வள்ளி என்று ஒரு கதா பாத்திரம்.கதை என்ன வென்றால் வள்ளியின் அப்பா ஒரு குடிகாரர்.(குடிகாரன் என்று சொன்னால் குடிமகன்கள் யாரவது கோபித்து கொள்ள போகிறார்களோ என்ற பயம் தான்...)வீட்டிலிருக்கும் அண்டா குண்டா சட்டி பானை எல்லாவற்றையும் வைத்து தினந்தோறும் குடிப்பதுதான் வேலை.

                                     இது இப்படி இருக்க வள்ளி ஒரு ஆட்டுக்குட்டி வளர்த்து வந்தாள்.தினந்தோறும் ஆட்டுக்குட்டியோடு கொஞ்சி விளையாடுவதுதான் வேலை.பள்ளி விட்டு வந்ததும் முதல் வேலையாக ஆட்டுக்குட்டிக்கு தேவையான தீனி போடுவாள்.விடுமுறை நாட்களை ஆட்டுக்குட்டியோடுதான் கழிப்பாள்.திடீரென்று ஒரு நாள் வள்ளியின் அப்பா அவளை சந்தைக்கு அழைத்துக்கொண்டு போகிறார்.கூடவே ஆட்டுக்குட்டியையும் கூட்டிக்கொண்டு போகிறார்கள்.குடிப்பதற்கு பணம் இல்லாததால் திருவாளர் குடிமகன் அவர்கள் ஆட்டுக்குட்டியை சந்தையில் விற்றுவிட வெறுங்கையோடு வீடு திரும்புகிறார்கள்.மறுநாள் வள்ளி பள்ளிக்கு கிளம்பும் போது திண்ணையை பார்க்கிறாள்.ஆட்டுக்குட்டி இருந்த திண்ணை வெற்றுத்திண்ணையாக காட்சி அளிக்கிறது.

              இந்த பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு ஆட்டுக்குட்டி போக எனது ஆர்வக்கோளாறு காரணமாக ஆட்டுக்குட்டியை தூக்கி வந்து மேசை மேல் வைத்து கட்டிபிடித்து கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி விட்டேன்.வள்ளியின் அப்பா மாதிரி இருக்க கூடாது.வள்ளி போல ஆட்டுக்குட்டி மற்றும் வளர்ப்பு பிராணிகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று ஆழமான உபதேசம் வேறு!அத்தோடு விட்டேனா?பிள்ளைகளே வாருங்கள் ஒவ்வொருவராக வந்து ஆட்டுக்குட்டியை தொட்டு தடவிப்பாருங்கள் என்று வரிசையில் நிற்க வைக்க மாணவர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!எனக்கு மன நிறைவோடும்,மாணவர்களுக்கு மகிழ்சியோடும் அந்த பாடவேளை இனிதே முடிந்தது!

                  சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பள்ளிக்கு போனால் தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னால் ஒரு குடிமகன் ஏகவசனத்தில் என்னை அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.எவண்டா அவன் விழுப்புரம் வாத்தி?வெளிய வாடா!என்று.சாதரணமாகவே எனக்கு கை கால் உதறும்.தண்ணி போட்டு விட்டு என்னை கூப்பிடுகிறானே?சண்டாளப்பாவி!எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று புலம்பிக்கொண்டே தலைமை ஆசிரியரிடம் வழக்கம் போல் தஞ்சம் புகுந்தேன்!

                                பையூரிலிருந்து சேத்தூருக்கு போகும் வழி கரடு முரடாகவே இருக்கும்.ஏரிக்கரை மீது போகும் ஒற்றையடி பாதை வழியாகவே சென்றாக வேண்டும்!பாதையெங்கும் கற்களும்,முட்களுமாகவே நிறைந்திருக்கும்.வழியில் ஒரு சிறு பாலமும் உண்டு.விடுமுறை தினங்களில் விளையாடுவதற்காக போன பள்ளி பிள்ளைகள் ஆடு மாடு மேய்வதை பார்த்திருக்கிறார்கள்.உடனே நான் சொன்னது தானா நினைவுக்கு வர வேண்டும்?அதற்கேற்ற மாதிரி ஆடு ஒன்று குட்டிகள் போட்டிருக்க,வாங்கடா ஆட்டு குட்டியை கொஞ்சலாம் என்று ஆட்டுக்குட்டிகளை துரத்தியிருக்கிறார்கள்.

                 மிரண்டு போய் ஓடிய ஆட்டு குட்டிகளில் ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டிருக்கிறது! மற்ற குட்டிகள் கல்லிலும் முள்ளிலும் மாட்டி காயப்பட்டிருக்கிறது!பயந்து போன மாணவர்கள்  சத்தங்காட்டாமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்கள்!இது எப்படியோ சம்மந்தப்பட்ட ஆட்டுக்குட்டி உரிமையாளருக்கு தெரிந்து போக,வாத்தியார்தான் ஆட்டுக்குட்டியை பிடித்து கொஞ்ச சொன்னார் என்று என்னை கை காட்டி விட்டார்கள் பிள்ளைகள்! 

                                        இறந்து போன ஆட்டுக்குட்டிக்கும் காயம் பட்ட ஆட்டு குட்டிகளுக்கும் நட்டஈடாக தண்டம் அழுதபின் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது!அன்றுதான் கற்றுக்கொண்டேன்.சொல்வதை மிகைப்படுத்தி சொல்லக்கூடாது.


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-131

என்னவளே
எல்லோருக்கும்
எதோ ஒரு நாள்
நினைவு நாளாய் அமையும்!

ஆனால்
எனக்கு மட்டும்
உன்னை நினைக்காத நாள்
நினைவு நாளாய் அமையும்!

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-130

என்னவளே 
எல்லோரையும் 
மகிழ்வித்து கொண்டிருக்க 
நான் என்ன கோமாளியா?

அன்பின் மதிப்பை 
உணர்ந்து கொண்ட 
உன் போன்ற ஒருத்தி
என் வாழ்நாளைக்கும் போதும்! 

குறுஞ்செய்திகள்-129

என்னைத்தவிர 
எல்லோரும் 
உனக்கு முக்கியம் 
என்று புலம்பி தள்ளுகிறாய்!

அப்படியாயின் 
யாரென்று சொல்!
நானும் தெரிந்து கொள்கிறேன்!
இப்போது மாட்டிக்கொண்டாயா?

குறுஞ்செய்திகள்-128

என்னவளே 
மௌனத்திற்கும் 
கோபத்திற்கும் 
சம்மந்தம் இருக்கிறதா? 

அதை விடு!
நீ ரொம்ப நல்லவள்!
கோபம் வந்தாலும் 
அடிக்க மாட்டாய்தானே?

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-127

என்னவளே 
எதாவது கேள்வி கேட்டால் 
பதில் சொல்லாமல் 
முறைப்பதை விட்டுவிடு!

தகவல் அறியும் 
உரிமை சட்டத்தின் மூலம் 
யாரும் யாரையும் 
கேள்வி கேட்கலாமாம்!

குறுஞ்செய்திகள்-126

கடவுளின் இரண்டு 
படைப்புகளுக்காகவே 
அவரை எவ்வளவு 
பாராட்டினாலும் தகும்!

என்னவளே 
அதில் ஒன்று மரம்!
பொறு!அவசரப்படாதே! 
மற்றொன்று நீதான்!

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-125

என்னவளே
உன் மீது வைத்திருக்கும் அன்பை
வெறும் எண்களை கொண்டு
மதிப்பிட்டு விட முடியுமா?

சரி விடு!
ஒன்றுக்கு பிறகு
எத்தனை பூஜ்ஜியத்தை சேர்த்தாலும்
உனக்கு படிக்க தெரியுமா?

குறுஞ்செய்திகள்-124

எல்லோருடைய செல்பேசி எண்களையும்
சேமித்து வைத்திருக்கிறேன்
உன் ஒரு எண்ணை தவிர!
ஏன் தெரியுமா?

யாருக்கு பேச நினைத்தாலும்
உன்னை அழைப்பதையே
அனிச்சை செயலாக்கி கொண்டுவிட்டது
என் விரல்கள்!

குறுஞ்செய்திகள்-123

என்னவளே
நீ இலவசமாய் 
புன்னகை தரும் ரகசியம் 
எதுவாயிருக்கும்?

அடிப்பாவி!
இதை வைத்துதான் என்னிடம்
உடனடி அங்கீகாரம் 
வாங்கி விடுகிறாயா நீ? 

குறுஞ்செய்திகள்-122

என்னவளே 
நமக்குள்ளே பல்வேறு சண்டைகள்
இருந்தும் இணைத்து வைத்திருக்கிறாய்
உன் நேசத்தின் பெயரால்!

ஓ...நீ
தேசத்தின் பெயரால் எல்லோரையும் 
இணைத்து வைத்திருக்கும் 
இந்தியத்தாயின் மகள் அல்லவா?


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-121

என்னவளே 
குழந்தைகள் என்றால் 
கொள்ளை பிரியம் என்று 
உண்மையைத்தான் சொன்னேன்!

ஏய் படவா!
சுற்றி வளைத்து 
எங்கு வருவாயென 
எனக்கு தெரியும் என்கிறாய்!

குறுஞ்செய்திகள்-120

உனக்கென்ன?
பேச்சு சுவாரசியத்தில் 
நாயின் காலை மிதித்தது 
நானல்லவா?

நாட்டு மருந்து 
வேலை செய்யாமல் 
நாலு காலில் நடந்து 
ஊளை இடும்படி ஆகுமோ?

குறுஞ்செய்திகள்-119

அடியே 
மும்பை பங்கு சந்தை பற்றி 
பல்வேறு சந்தேகங்களை 
என்னிடமா கேட்டு தொலைப்பாய்?

எதோ 
ஒரு மடப்பட்டு சந்தை 
அண்டராயநல்லூர் சந்தை 
இது பற்றியெல்லாம் கேளேன்!

சனி, 13 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-118

என்னவளே 
கோழி பிரியாணியும் 
அவித்த முட்டையும் 
உனக்கு ரொம்ப பிரியம்!

அதற்காக 
வடலூர் சத்திய ஞான 
சபை வளாகத்தில் கேட்டால் 
நான் என்ன பண்ணுவேன்? 

குறுஞ்செய்திகள்-117

என்னவளே 
என்னால் சாப்பிட முடியுமா  
என்று தெரிந்து கொள்ளாமல்  
பரிமாறிக் கொண்டே இருக்கிறாய்!

அடிப்பாவி 
எப்படி சொல்வேன் என் நிலையை?
மாங்கொட்டை சாமியார் கதை 
தெரியாதா உனக்கு?

குறுஞ்செய்திகள்-116

எதற்கெடுத்தாலும் 
அம்மா அம்மா என்று 
முந்தானையை பிடித்து 
சுற்றிக்கொண்டிருந்தேன்!

என்னசெய்தாயோ
ஆமா ஆமா என்று
முந்தானையை பிடித்து
சுற்ற வைத்துவிட்டாய்!

குறுஞ்செய்திகள்-115

நான் என் வேலைகளை 
செய்து கொள்வதற்கே 
யாருடைய துணையையாவது
எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன்!

அடியே உன் வேலைகளை 
செய்து கொடுப்பதற்கு 
இத்தனை ஆர்வம் 
எங்கிருந்துதான் வந்ததோ?

குறுஞ்செய்திகள்-114

என்னவளே 
தொலைக்காட்சி தொடர் ரத்து 
கொசுக்கடி புழுக்கம் 
எல்லோரும் சலித்துக்கொண்டார்கள்!

நீயும் நானும் 
சந்தோஷப்பட்டுக் கொண்டோம்! 
தனிமை நிலா மொட்டைமாடிக்காற்று 
தொடரட்டும் மின்வெட்டு!

குறுஞ்செய்திகள்-113

கண்ணே நீ முன்னால் போ 
நான் பின்னால் வருகிறேன் 
என்று சொன்னால் 
கேட்கமாட்டேன் என்கிறாய்!

அடியே என்ன செய்வேன்?
எப்படி உன்னிடம் சொல்வேன்?
என் முழுக்கால் சட்டையின் 
பின் பக்கம் கிழிந்து விட்டதை! 

குறுஞ்செய்திகள்-112

அடியே
கைகள்  சிவக்க சிவக்க
இப்படியா வேலை செய்வதென
கடிந்து கொள்கிறேன்!

என்னவோ
நிஜமாகவே காப்பு காய்த்தது போல்
கவலையோடு காட்டுகிறாய்
பீட்ரூட் துருவிய விரல்களை! 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-111

என்னவளே!
நிலம் நீர் நெருப்பு வானம் வளியென
ஐம்பூதங்களா இருக்கிறது?
எனக்கு தெரிந்து ஒரே ஒரு பூதம்தான்!

ஐயையோ!
நான் உன்னை சொல்லவில்லை
பூதம் என்றால் சக்தியாம்!
வேண்டுமானால் விக்கிப்பீடியாவை பார்!

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-110

என் நினைவுகளை 
முன்னூற்று அறுபது 
டிகிரியிலே 
பறக்க வைக்கிறாய்!

என்னவளே 
தேன் சிட்டுக்கு
உண்மையில் நீதானே 
பயிற்சி கொடுத்தாய்? 

குறுஞ்செய்திகள்-109

என்னவளே 
நீண்ட நாட்களாய்
எனக்கொரு சந்தேகம்
கேட்கட்டுமா? 

தேவதை 
வசிக்கும் இடத்தை 
சுவர்க்கம் என்று சொல்லாமல் 
பூமி என்கிறார்களே?

குறுஞ்செய்திகள்-108

என்னவளே 
உனக்காக நான் 
என்ன கொடுக்க முடியும்?
நீயே சொல்! 

எப்போதோ 
உனக்காக நான்
என்னை கொடுத்து விட்ட 
பிறகும் கூட! 

குறுஞ்செய்திகள்-107

என்னவளே 
விளையாட்டு மைதானத்தில் 
ஒரு முறை கூட 
உன்னை பார்த்ததில்லை! 

வெளி விளையாட்டே 
பிடிக்காதென்றால் எப்படி? 
சரி விடு!அம்மா அப்பா விளையாட்டு
சொல்லித்தரவா? 

குறுஞ்செய்திகள்-106

என்னவளே 
இந்த பிச்சைக்காரர்கள்
மிகவும் மோசம் 
என்றே தோன்றுகிறது!

உன்னுடன் 
வரும்போது மட்டும் 
மிகவும் என்னை 
புகழ்ந்து தள்ளுகிறார்கள்!  

குறுஞ்செய்திகள்-105

எப்போதுமே 
நொறுக்கு தீனியாகவே 
வாங்கி தரச் சொல்லி 
தொந்தரவு செய்கிறாயே!

என்னவளே 
நொறுங்க தின்றால் 
நூறு வயது என்பதை 
தவறாக புரிந்து கொண்டாயோ?


குறுஞ்செய்திகள்-104


அன்பே...
தயவு செய்து 
எங்கு போனாலும் 
சொல்லிவிட்டு போ!

கண்ணே...
குறைந்த பட்சம் 
சாவியையாவது
கொடுத்து விட்டு போ!

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-103

உன் பிறந்த நாளுக்கு 
என்ன பரிசு தருவதென்று 
நெடு நேரம் சிந்தித்தும் 
பலனில்லை!

உன் காதலுக்கு முன்னால்
எல்லாப் பரிசுப் பொருட்களும் 
மிகவும் அற்பமானதாகவே
தோன்றுகிறது!

சனி, 6 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-102

என்னவளே!
வேலை வாய்ப்பகத்தில் 
பதிவு செய்ய துணைக்கு 
என்னை கூப்பிட்டாய்!

இத்தனை அழகான 
உன்னுடன் வருவது
எத்தனை பேருக்கு
எரிச்சலைக் கிளப்புமோ?

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-101

என்னவளே!
நாலு கால் ஒரு வால்
ஆனால் அது முட்டை இடும்!
அது என்ன?

இந்த கேள்விக்கு 
திரு திரு என்று முழித்து
விடை கேட்டு கெஞ்சினாயே
நினைவிருக்கிறதா?  

குறுஞ்செய்திகள்-100


என்னாச்சோ
ஏதாச்சோ
என்று தெரியாமல் 
கவலைப்பட்டு கொண்டிருக்கிறேன்!

போனோமா
வந்தோமா 
என்று இல்லாமல் 
ஆடி அசைந்து அழகாகத்தான் வருகிறாய்!


வியாழன், 4 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-99

பாதத்தின் விரல்களை 
விசைப்பலகையின் 
எழுத்துக்களாக நினைக்க 
கேட்டுக்கொண்டாய்! 

சும்மா கணினியையே
நோண்டிக்கொண்டு 
இருக்கிறானே இவன்
என்ற கடுப்பில்தானே? 

குறுஞ்செய்திகள்-98

செல்லிடப்பேசியில் 
சுத்தமாக காசு 
இல்லை என்றால் 
நீ நம்பவா போகிறாய்?

உனக்கென்ன? 
தவறிய அழைப்புக்கு 
பதில் அளிப்பதே 
என் பிழைப்பாகி விட்டது!  

புதன், 3 ஆகஸ்ட், 2011

குறுஞ்செய்திகள்-97

உம் என்று 
மூஞ்சியை தூக்கி 
வைத்துக்கொள்ளாதே! 

உன்னால் 
எவ்வளவு நேரம்தான்
நடிக்க முடியும்? 

குறுஞ்செய்திகள்-96

ஏதோ இரகசியம் சொல்லத்தான்
மொட்டை மாடிக்கு 
கூப்பிடுவதாய்
நினைத்து கொண்டேன்!

நீ என்னடாவென்றால் 
ஏகப்பட்ட துணிகளை 
துவைப்பதற்காய்
நனைத்து வைத்திருக்கிறாய்!  

குறுஞ்செய்திகள்-95

உனக்கு ஒரு 
அழகிய மோதிரம் 
வாங்கித்தர ஆசை! 

மற்ற விரல்கள் 
கோபிக்குமென்று
யோசிக்கிறேன்!

தெரியும்...
எல்லா விரலுக்கும் 
கேட்பாயென்று!