வியாழன், 31 மே, 2012

குறுஞ்செய்திகள்-251


என்னவளே
மதுவும் மாதுவும்தான்
மனிதனைக் கெடுக்கும்
போதை என்று சொன்னேன்

அடடா
அவைகளை விடவும்
கொடுமையான போதை
புகழ் போதை! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-250


என்னவளே
முன்பெல்லாம் அமைதிதேடி
நகர நரகத்திலிருந்து தப்பித்து
கிராமம் நோக்கி செல்வேன்!

அடடா
இப்போது என்கிராமமும்
தன்முகம் தொலைத்துவிட்டு
நரகமாக அல்லவா மாறிவருகிறது! 

குறுஞ்செய்திகள்-249


என்னவளே
நீ நினைத்ததைப்போல
நான் இல்லாத ஏக்கத்தை
எப்படித்தான் தாங்குகிறாயோ?

அடடா
மீண்டும் நிகழமுடியா
இறந்தகாலம் வெளிப்படுகிறது
நீண்ட உன் பெருமூச்சினில்!

சனி, 26 மே, 2012

குறுஞ்செய்திகள்-248


என்னவளே
ஊர் போய் திரும்புகையில்
சொர்கத்தை பார்த்த மாதிரி
ஆனந்தம் ஏன்? என்கிறாய்

அடடா
தொடக்கக்கல்வி பயின்ற
பள்ளிக்கூடத்தை விட
சொர்க்கம் இருக்கிறதா என்ன?

வியாழன், 24 மே, 2012

குறுஞ்செய்திகள்-247


என்னவளே
பெருமழைக்காலம் தவிர்த்து
பெரும்பாலும் நீரில்லாமல்
வற்றியே கிடக்கிறது ஆறு!

அடடா
ஆற்றுத்திருவிழாவின் போது
அணையைத் திறந்தால்
அதுவே போதும் நமக்கு!

புதன், 23 மே, 2012

குறுஞ்செய்திகள்-246


என்னவளே
எப்போதும் கணினி
இடையிடையே தொலைக்காட்சி
பாவம் இளந்தலைமுறை!

அடடா
பஸ் ஆட்டம் மிஸ் ஆட்டம்
ஐஸ் ஆட்டம் கல் ஆட்டம்
எவ்வளவு இழந்துவிட்டார்கள்?

குறுஞ்செய்திகள்-245


என்னவளே
இனிமையானது எது?
கொடுமையானது எது?
விடைசொல் என்று கேட்டேன்

அடடா
இரண்டுக்கும் விடை தனிமை!
நாமே தேர்ந்தெடுத்த தனிமை!
பிறர் பரிசாக கொடுத்த தனிமை!

குறுஞ்செய்திகள்-244


என்னவளே
நடக்கையில் உரையாடுவது
இரு இடங்களுக்கு இடையே
இடைவெளியை பாதியாக்குகிறது!

அடடா
சண்டையில் உரையாடுவது
இரு மனங்களுக்கு இடையே
இடைவெளியை இரட்டிப்பாக்குகிறது!

குறுஞ்செய்திகள்-243


என்னவளே
பெற்றோர்க்கு பிள்ளைகளாக
இருக்கும் வரை அவர்களையே
நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

அடடா
நாம் பெற்றோரானதும்
நம் பெற்றோர்களை
மறந்து அல்லவா விடுகிறோம்?

செவ்வாய், 22 மே, 2012

குறுஞ்செய்திகள்-242


என்னவளே
நத்தை இறைச்சி தின்றால்
மூலம் சரியாகுமென்பது
உண்மையா? என்று கேட்டேன்

அடடா
எந்த இறைச்சியையும்
தின்னாமல் விட்டாலே
மூலம் சரியாகிவிடும்! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-241


என்னவளே
அடூர் கோபால கிருஷ்ணனை
திடீரென்று புரட்டிப்போட்டது
பதேர் பாஞ்சாலி திரைப்படம்!

அடடா
சும்மா இருந்த என்னை
இல்லறத்தில் இழுத்துப் போட்டது
தரகர் தந்த உன் புகைப்படம்!

திங்கள், 21 மே, 2012

குறுஞ்செய்திகள்-240


என்னவளே
மனசில் என்ன
பெரிய கொம்பன் என்று
நினைப்பா உனக்கு? என்கிறாய்

அடடா
மூக்குக்கொம்புக்காக
கொல்லப்பட்டு அழிந்துபோன
காண்டாமிருகத்தை நினைவூட்டுகிறாயோ?

குறுஞ்செய்திகள்-239


என்னவளே
எனது ஊர் எது? என்று
என்னிடம் கேட்பவர்களிடம்
என்ன பதிலை சொல்வேன் நான்?

அடடா
அம்மாவின் சொந்த ஊரையா?
அப்பாவின் சொந்த ஊரையா?
உத்தியோக நிமித்தமுள்ள இவ்வூரையா?


குறுஞ்செய்திகள்-238


என்னவளே
எல்லோருக்கும்
முதல் படைப்பு
மிகச் சிறப்பு! என்றேன்

அடடா
மூத்த மகளைத்தானே
குறிப்பிடுகிறீர்கள் என்று
இப்படியா கிண்டலடிப்பாய்?

ஞாயிறு, 20 மே, 2012

குறுஞ்செய்திகள்-237


என்னவளே
அனுபவமிருந்தும்
அணைக்கத் தெரியாமல்
அடிக்கடி அவதிக்குள்ளாகிறேன்!

அடடா
இதை முதலில்
கற்றுக்கொள்ள வேண்டும்
இந்த செல்லிடப் பேசியில்!

ஞாயிறு, 13 மே, 2012

மா...


மா...
எனக்கு மிக மிக
பிடித்த பழம்!

உண்ணாமல்
நினைத்து பார்த்தாலே
உமிழ்நீர் சுரக்கும் என்பதாலோ

தமிழ் இலக்கியத்தின்
முக்கனிகளுள்
முதற்கனி என்பதாலோ

கடவுளர்களின் உணவென்று
பண்டைய வேதங்களில்
குறிப்புகள் உள்ளதாலோ

உலக அளவில்
பெருமளவில்
விளைவிக்க படுவதாலோ

சர்க்கரை புரதம்
உயிர்ச்சத்துக்கள்
நிறைந்து உள்ளதாலோ

என்று நீங்கள்
நினைத்திருந்தால்
நான் பொறுப்பல்ல!

உச்சரிக்கும் போது
என் அம்மாவை
நினைவு படுத்துவதால்

மா...
எனக்கு மிக மிக
பிடித்த பழம்!