ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

மெட்டுப்பாடல்கள்-34

சின்னஞ்சிறு விதையினிலே
அடேங்கப்பா ஆலமரம்
சிறிய உருவமென்றால்
ஏளனமாய் நினைக்கலாமா?
நாம் ஓங்கி வளர்ந்திடவும்
ஓங்காமல் கிடந்திடவும்
உருவமொரு காரணம் இல்லை

வெள்ளை நிற காத்தாடி
உயரத்திலே பறக்கையிலே
கருப்பு நிறம் என்றால்
பறக்காமல் போய் விடுமா?
நாம் மேலே எழுந்திடவும்
கீழே விழுந்திடவும்
நிறமொரு காரணம் இல்லை

காந்தம் போல தனித்தன்மை
எல்லோருக்குள்ளும் உள்ளிருக்கும்
தன்னை அறிந்துகொண்டால்
தனித்தன்மை விளங்கிடாதோ?
காந்தம் இரண்டாய் போனாலும்
துண்டாய் போனாலும்
தனித்தன்மை மாறுவதில்லை

தூங்கவிடா கனவு ஒன்று
வரும் வரைக்கும் தூங்காதிரு
கனவு தினம் கண்டால்
நனவாவது நிச்சயம் அன்றோ?
விழிகள் ஏக்கம் கொண்டாலும்
தூக்கம் கொண்டாலும்
சிவக்காமல் விடிவு இல்லை

உறுதியான எண்ணம் கொண்டு
உண்மையாக பாடுபடு
மனித மனம் நினைத்தால்
அடைந்தே தீரும் அன்றோ?
நாம் கடமைக்கு செய்தாலும்
கடமையாக செய்தாலும்
உழைப்பின்றி வெற்றி இல்லை

(சொய் சொய் பாடல் மெட்டு)









புதன், 20 பிப்ரவரி, 2013

குறுஞ்செய்திகள்-258

என்னவளே
தாகத்துக்கு நீர்
என் சோகத்துக்கு நீ !
அடடா
நீர் இன்றி பயிர் வாடும்
நீ இன்றி உயிர் வாடும் !

திங்கள், 18 பிப்ரவரி, 2013

தாலாட்டு...



சீதனமாய் வரும் செல்வம்
சித்திரமே நமக்கெதுக்கு...
கண்மணியே கண்ணுறங்கு
வருங்காலம் நமக்கிருக்கு...

கண்ணான கண்மணியே
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போடாதம்மா கடுதாசி

தங்கத்துல தோடு போட
மகளே தோது இல்லை
சந்தையில வாங்கித் தாரேன்
தங்கமே நீ போட்டுக்கம்மா

பட்டாடை உடை உடுத்த
மகளே வசதி இல்லை
ஆடி தள்ளுபடியில்
ஆடை வாங்கித் தாரேன்

பொத்தலான உடை பார்த்து
எத்தனையோ கேலி கிண்டல்
அத்தனையும் தச்சுத் தாரேன்
ஊசி நூலு இருக்குதம்மா

மாடி மேல மாடி கட்ட
நாதி இல்லை எம்மகளே
ஓல குடிசை இருக்கு
ஒரு முழம் பாய் இருக்கு

சுடுசோறு பலகாரம்
ஆக்கித்தர முடியலையே
கூழும் கஞ்சியும் தான்
குடிச்சி நீ வளர்ந்துக்கம்மா

காலுக்கு கொலுசு இல்லை
காலணி வாங்கித் தாரேன்
முள்ளும் கல்லும் குத்தாம
பள்ளிக்கு நீ போயிவாம்மா

விளக்கு எரியாமல்
எண்ணெய் இன்றி கிடக்குதம்மா
வீதியோரம் எரிஞ்சாக்கா
வெளியில் வந்து படிச்சிக்கம்மா

வாழ்க்கையில் முன்னேற
ஒருகையும் உதவாவிட்டால்
தன்னம்பிக்கை இருக்குதம்மா
வேறு கை எதுக்கம்மா?