சனி, 31 மார்ச், 2012

மெட்டுப்பாடல்கள்-33


யாரும் பிறந்ததுண்டா?-இங்கு
யாரும் பிறந்ததுண்டா?
தாயை போல இங்கு
தரணியிலே வந்து
உடலும் உயிருமாய்
மானுட தெய்வமாய்
யாரும் பிறந்ததுண்டா?-இங்கு
யாரும் பிறந்ததுண்டா?
*
அண்டை மனிதருடன்
சொந்த பந்தம் போல்
அன்பு காட்டுவாயே!
சுற்றுப்புறம் எல்லாம்
சொந்த வீடு போல்
சுத்த மாக்குவாயே!

கைகள் இருக்கையில்
கடவுள் தந்தாலும்
கையேந்த கூடாதென்பாய்!
கடனை வாங்கினால்
கடமை தவறினால்
கவலை வாட்டுமென்பாய்!

தன்னை அறிய சொன்னாய்
பிறரை புரிய சொன்னாய்
வாழும் வாழ்க்கை முறையை
வகுத்து கொள்ள சொன்னாய்!
*
பொய்யே பேசாமல்
திருடிப் பிழைக்காமல்
வாழச் சொன்னாயம்மா!
உழைப்பு ஒன்றுதான்
உயிரின் மூச்சென
வாழ்ந்து சென்றாயம்மா!

விட்டுக் கொடுக்கவும்
உறவைப் பேணவும்
கற்றுக் கொடுத்தாயம்மா!
இந்தஊரு வியக்கும்படி
உனது புகழை இங்கு
விட்டுச் சென்றாயம்மா!

தன்னை அறிய சொன்னாய்
பிறரை புரிய சொன்னாய்
வாழும் வாழ்க்கை முறையை
வகுத்து கொள்ள சொன்னாய்!
*
(குறிப்பு: நாடு பார்த்ததுண்டா?-இந்த நாடு பார்த்ததுண்டா? என்ற பாடல் மெட்டு)


வியாழன், 29 மார்ச், 2012

அம்மா-1


அம்மா...
ஒரு நாளும் அனைவருக்கும் முன்பாக
சாப்பிட்டதே இல்லை நீ!
பல நாட்கள் பரிமாறிய சந்தோஷத்திலேயே
பட்டினியாய் படுப்பாய்!

எழுந்து நின்று உணவு தயாரிக்கும் நிலையில்
உடல்நிலை இல்லாத போதும்
ரொட்டிக்கான மாவை பிசையத் தொடங்கியிருக்கும்
உனது பத்து விரல்கள்!

எது எப்படியோ
வேறுவழியில்லை அம்மா!
நீதான் இன்று முதலில்
சாப்பிட்டாக வேண்டும்!

அடுத்தவருக்கான உணவைத் தயாரித்து
உண்ண வைத்து பார்த்து
உன் பசி போக்கிக்கொள்வதே
வாடிக்கை உனக்கு!

ஆனால் இன்று நீ சாப்பிடாமல்
விரதம் முடிவுக்கு வராது!             
காக்கையாகி தென்னை மரத்தில்
மௌனமாய் அமர்ந்திருக்கிறாய்!