வியாழன், 28 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-94

நீதான் 
கூட்டைக் கலைத்து 
வீட்டை சுத்தமாக்கும்படி
கேட்டுக்கொண்டாய்!  

இப்போது 
குருவியின் சாபத்திற்கு 
ஆளாவேனென்று 
பயமுறுத்துகிறாயே!

குறுஞ்செய்திகள்-93

எப்படித்தான் 
உன் விடைத்தாளைத் திருத்தி 
மதிப்பெண் போடுகிறார்களோ?

எப்போதுமே 
நான் ஒரு கேள்வி கேட்டால் 
நீ ஒரு பதில் சொல்வாய்!

குறுஞ்செய்திகள்-92

அடியே! கணக்கு உனக்கு 
ஆமணக்கு!
இருந்துவிட்டு போகட்டும்!

அநியாயத்துக்கென்று
முக்கோணத்துக்கு
எத்தனை கோணமென்றா கேட்பது?

குறுஞ்செய்திகள்-91

என்னவளே 
சொன்னால் கேள்!
சும்மா பிள்ளையாரையே 
சுற்றிக் கொண்டிருக்காதே!

அப்புறம் அவர்
உன்னைத்தான் பிடித்திருக்கிறது
என்று அவர் அம்மாவிடம் 
சொல்லித் தொலைக்கப் போகிறார்! 

குறுஞ்செய்திகள்-90

என்ன அழகு!
என்று வியந்தால்
கேலி பேசுவதாய்
கோபித்துக்கொள்கிறாய்!

என்ன அறிவு!
என்று வியந்தால்
கிண்டல் செய்வதாய்
கோபித்துக்கொள்கிறாய்!

அடிப்பாவி!
உண்மையை சொல்!
உனக்கு இரண்டுமிருப்பதாய்
நம்பிக்கொண்டிருக்கிறேன்!

புதன், 27 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-89


என்னுடைய இதயத்தை
சீண்டி விளையாடுவது
வழக்கமாக ஆகிவிட்டது!

எதைச்செய்தாலும்
மறக்கவோ மறுக்கவோ
போவதில்லை என்பதால்தானே?

குறுஞ்செய்திகள்-88


என் எல்லா சூழ்நிலைகளையும்
மிக எளிதாக கடப்பேன்
என்னுடன் நீ வாயேன்!

ஒரு சின்ன குழந்தை
அம்மாவின் ஆட்காட்டி விரலை
பிடித்துக்கொண்டு நடப்பது மாதிரி!

செவ்வாய், 26 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-87

தாமரை
எங்கிருக்கிறதென்று 
ஆவலுடன் கேட்டேன்!

வதன குளத்திலிருக்கும்
அதர இதழ்களை 
குவித்துக் காண்பிக்கிறாய்! 

குறுஞ்செய்திகள்-86

கணக்கு புத்தகத்தை 
பிரித்து வைத்துக்கொண்டு 
எண்ணி எண்ணி பார்க்கிறேன்!

எனக்கு கணக்கு 
சுத்தமாக வராதென்று 
அன்று நீ சொன்னதை!

குறுஞ்செய்திகள்-85

புகழும் போதெல்லாம்
நீ வேண்டுமென்றுதானே 
தோ டா தோ டா
என்று போலியாக மறுக்கிறாய்!

சரி அதை விடு! 
ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டேன்
வா டா போ டா
என்று தைரியமாகவே கூப்பிடு!

ஞாயிறு, 24 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-84

இரகசியங்களை
ஒன்று விடாமல்
உளறி கொட்டி விட்டேன்!

அந்தரங்கம்
பதுக்கி வைக்கும்
தந்திரம் அறியாத உன்னிடம்!


சனி, 23 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-83

நீ ஒவ்வொரு அடியாக 
அடி மேல் 
அடி வைத்தாய்!

நானும் ஒவ்வொரு அடியாக 
அடிமேல் 
அடி வைத்தேன்! 

நீ கோவில் பிரகாரத்தை 
சுற்றி முடிப்பதற்குள்ளாகவே 
நான் முடித்து விட்டேனே! 

உன்னைப்பற்றி 
ஒரு அழகான 
கவிதையை எழுதி! 

குறுஞ்செய்திகள்-82

உங்களுக்கென்ன
நண்பரே!
அழகி ரதியோ?மதியோ?

என்னவள்
அப்போ நான் இல்லையா?
என்று ஒரே ரகளை!

குறுஞ்செய்திகள்-81

லஞ்சம் பற்றிய
உன் கருத்தை
கேட்டேன்!

ஐஸ்கிரீமோடு
பேசலாமா
என்கிறாய்! 

குறுஞ்செய்திகள்-80

இந்தி கற்றுக் கொள்ளவா?
ஆங்கிலம் கற்றுக் கொள்ளவா? 
யோசனை கேட்கிறாய் என்னிடம்!


ஐயய்யோ?என்ன செய்வேன்?
தமிழ் கற்றுக் கொள்ளேன்
நானே சொல்லித் தருகிறேன்!

குறுஞ்செய்திகள்-79

எவ்வளவு வேகமாக 
வண்டி ஓட்டி 
என்ன பயன்?

வேகத்தடைகளும் 
பின்னால் நீயும் 
இல்லாத சாலையில்! 

குறுஞ்செய்திகள்-78

வழக்கமாக நீதானே 
ஞாபகப்படுத்துவாய் 
என்னாயிற்று உனக்கு? 


எப்போதும் போல 
பசி எடுப்பதே 
மறந்துபோனது எனக்கு! 

குறுஞ்செய்திகள்-77

பறக்கும் முத்தம் 
கொடுத்துவிட்டு 
ஓடி விட்டாய்! 

பத்திரமாய் அதை 
வைத்துள்ளேன் 
வாங்கிக்கொள்!

வெள்ளி, 22 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-76

உன்னை 
பூ மாதிரி
பார்த்துக்கொள்ளவா?

பறிப்பேன் 
நுகர்வேன் 
பரவாயில்லையா?


குறுஞ்செய்திகள்-75

எனது 
நாட்குறிப்பேட்டின்
மிக அழகான கவிதை! 

உனது 
கூந்தல் தவறவிட்ட 
ஒற்றை செம்பருத்திப்பூ!

குறுஞ்செய்திகள்-74

மேலெல்லாம்
பூக்களை 
தூவி விட்டாய்! 

தண்ணீர் குடிக்கையில் 
சிரிக்க வைத்தது 
என் அதிஷ்டம்!

குறுஞ்செய்திகள்-73


குழந்தைகளுடன்
விருப்பம் போல் 
விளையாடு!

கதவுக்கு வெளியே 
ஒரு பெயர் பலகை 
தொங்க விடு!

சொர்கத்தில் இருக்கிறோம் 
தயவு செய்து 
தொந்தரவு செய்யாதீர்! 

வியாழன், 21 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-72

நீ தானே 
அழ வைத்து 
பின் அனுப்பி வைத்தாய்!
அப்புறமென்ன?

புன்னகைக்க சொல்லி 
தொலைபேசியில் 
தொடர்பு கொண்டு
தொல்லை செய்கிறாயே! 

ஹைக்கூ-2
வேறு என்ன 
கிழித்தாய்?
நாட்காட்டி!

புதன், 20 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-71


வாழ்க்கையில்
பலரை
மறந்து விடுகிறோம்!

வாழ்க்கையில்
சிலரை
நினைத்து பார்க்கிறோம்!

மரணத்தை விடவும்
கொடுமையானதென்றே
கருதுகிறேன்!

உயிருடன் இருக்கையில்
உன்னால்
மறக்கப்படுவது!

செவ்வாய், 19 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-70

கூட இருக்கும் போது
ஒன்றுமே
கண்டு கொள்வதில்லை
தூங்கி வழிகிறேன்!

தூர இருக்கும் போது
இந்நேரம்
என்ன செய்து கொண்டிருப்பாய்?
ஏங்கி தவிக்கிறேன்!

திங்கள், 18 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-69

மெளனம்
பலமா?
பலவீனமா?

ஏதோ
இஷ்டம் போல்
செய்!

சனி, 16 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-68

வளரவும் இல்லை
தேயவும் இல்லை
அறிவியல் இதனை
கண்டு பிடித்துவிட்டதே
வியந்து நிற்கிறது வான்மதி!

வளரவும் இல்லை
தேயவும் இல்லை
உன்னால் எனக்கு
பித்து பிடித்துவிட்டதே
மயங்கி நிற்கிறது என்மதி!

வியாழன், 14 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-67

நீ எனக்கு
கைக்கடிகாரம் வாங்கித்தா
நான் உனக்கு
பட்டுச்சேலை வாங்கித்தருகிறேன்!

ஆனால் ஒன்று
என்னைப் போல்
உன்னால் சொல்ல முடியாது
கட்டி விடு என்று!

குறுஞ்செய்திகள்-66

யாருக்கும்
தெரியாத ரகசியம்
எனக்கு
தெரிந்து விட்டது!

பனித்துளிகள்
என நினைத்திருந்தது
கண்ணீர்த்துளிகள்
என உறுதியாகிவிட்டது!


சூடிக்கொள்ள மறுத்து
ரோஜா பூக்களை
அழ வைத்தது
நீதானென்று ஒத்துக்கொள்!

புதன், 13 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-65

உன் முன்னால்
மட்டும்தான்
இப்படி!

சத்தம் போட்டு அழவும்
சத்தம் போட்டு சிரிக்கவும்
வெட்கம்!

குறுஞ்செய்திகள்-64

உண்மையில்
தோசையை சுட்டது
உனது அம்மாவா?
இல்லை நானா?

உனது சிற்றுண்டி
டப்பாவிலிருந்த
தோசையை
காணவில்லையாமே!

குறுஞ்செய்திகள்-63

எனக்கு விதிகளை
படிப்பதென்பது
சுத்தமாக பிடிக்காது!

உனக்கு விதிகளை
சொல்லித்தருவதற்காகவே
நான் படிக்கிறேன்!

இதைத்தான்
விதி என்கிறார்களோ?

ஹைக்கூ-1


விதவைப்பெண்
மஞ்சள் பூசக்கூடாதா?
மெழுகுவர்த்தி!

செவ்வாய், 12 ஜூலை, 2011

அ போடு...    ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பதாம் வருஷம் முகையூர் ஒன்றியம் பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த சமயம்.தலைமை ஆசிரியர் கலியபெருமாள் என்னை முதல் வகுப்பு ஆசிரியை மரிய செல்வம் மருத்துவவிடுப்பில் சென்று விட்டதால் என்னை வகுப்பெடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

                                  நானும் மிக ஆர்வமாக வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆவலாக இருந்தேன்.முதல் வகுப்பு மாணவர்கள் மற்ற வகுப்பு மாணவர்களைப் போல் இல்லை.அவர்கள் இப்போதுதான் பள்ளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.பள்ளி சூழ்நிலை இன்னும் பழகவில்லை.பார்த்து நடந்து கொள்ளென்று தலைமை ஆசிரியர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

                               மற்ற ஊர்களில் பால்வாடி,அங்கன்வாடி மையங்கள் தனியாக இருக்கும். பள்ளிக்கு வருவதற்கு முன்னரே எளிய பாடல்களை தெரிந்து கொண்டும் எழுத்துக்களை கற்றுக்கொண்டும் மாணவர்கள் வருவார்கள்.ஆனால் பையூரில் அதற்கு வழி இல்லை.முதல் வகுப்பிலிருந்துதான் அவர்களுக்கு பள்ளி அனுபவம் தொடங்கும்படி இருந்தது.

                       முதல்வகுப்புக்கு பாடம் நடத்துவது எனக்கு பெரும் சவாலாகவே இருந்தது. பாதி பிள்ளைகள் என்னைக்கண்டாலே பயந்து அழ ஆரம்பித்தன. அவர்களுடன் சுமூகமாக ஒன்றுவதற்கே பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது.ஒரு வழியாக மிட்டாய் கொடுத்து என் வயப்படுத்தி வைத்திருந்தேன்.பிள்ளைகளுக்கு “அபோட சொல்லிக்கொடுத்தேன்.

                  விழுப்புரத்திலிருந்து பையூருக்கு போவதென்றால் திருவெண்ணெய் நல்லூர் வழியாக திருக்கோவிலூருக்கு போகும் பேருந்தில் சென்று தொட்டிக்குடிசை அல்லது மண்டபம் நிறுத்தத்தில் இறங்கி ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும்.

                           பேருந்து சக்கரம் பழுதாகி விட்டதால் அன்று தாமதமாக பள்ளி செல்ல வேண்டிய சூழ்நிலை.மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு சென்றேன்.பள்ளி வாசல் முன் கூட்டமாக இருந்தது.எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.ஒட்டு மொத்த கூட்டமும் எனக்காகத்தான் காத்திருக்கிறது என்பதை அறிந்தவுடன் இதயத்துடிப்பு இன்னும் பல மடங்காக கூடி விட்டது.நாம் என்ன தவறு செய்தோம்?ஏன் ஒரு விசாரணைக் கைதியைப் போல நம்மை எல்லோரும் பார்க்கிறார்கள்?என்று ஒரே குழப்பமாக இருந்தது.

         தலைமைஆசிரியர் அறைக்கு தயங்கியவாறு உள்ளே சென்றேன்.அங்கே கூடி இருந்தவர்கள் அத்தனை பேரும் ஒன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள்.இவர்தான் அப்படி சொன்னாராம்.இவர்தான் அப்படி சொன்னாராம் என்று குசு குசு வென பேசிக்கொண்டார்கள்.எனக்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை.தலைமை ஆசிரியரை மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தேன்.

                 தலைமைஆசிரியர் மிகவும் திறமையானவர்.எந்த பிரச்சனையையும் நாசூக்காக கையாளக்கூடியவர்.முகம் எப்போதும் சிரித்தபடிதான் இருக்கும்.புன்முறுவலோடு என்னைப்பார்த்து கேட்டார்.ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுத்தாய்?
போட சொல்லிக்கொடுத்தேன் என்று சொன்னேன்.அதுதான் எப்படி சொல்லிக்கொடுத்தாய்?என்று கேட்டார்.

பல்பத்தை வைத்து எல்லோரும் போடுங்கள்,போடுங்கள் என்று நான் சொன்னதை பிள்ளைகள் வாத்தியார் பல்பத்தை வாயில் போட சொல்கிறார் என்று நினைத்து வாயில் போட்டு தின்றிருக்கிறார்கள்.இதை நான் கவனிக்க வில்லை.நாளைக்கு எல்லோரும் கண்டிப்பாக “அபோட்டுக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

                 பல்பம் தின்ற பிள்ளைகள் பல்பம் தின்னாத மற்ற பிள்ளைகளையும் வாத்தியார் பல்பத்தை “அபோடாவிட்டால் அடித்து விடுவார் என்று பயமுறுத்தியதால் வீட்டுக்கு போய் ஆளுக்கு ஒரு பல்பம் பாக்கெட்டை “அபோட்டிருக்கிறார்கள்.பல்பத்தை “அபோடச்சொன்ன வாத்தியார் யார் என்று தேடிக்கொண்டு பெற்றோர்கள் பள்ளிக்கே வந்து விட்டார்கள்.

                      எனக்கு அழுவதா?சிரிப்பதா?என்றே தெரியவில்லை.ஒட்டு மொத்த வகுப்புக்கும் ஆளுக்கு ஒரு பல்பம் பாக்கெட் வாங்கித்தந்த பின்னரே பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.அன்றுதான் நான் கற்றுக்கொண்டேன்.சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும். 

குறுஞ்செய்திகள்-62

உண்மையிலேயே
குழந்தைக்குத்தான்
முத்தம் தருகிறாயா?

ஓரக்கண்ணால்
என்னை பார்த்துக்கொண்டே
ஏன் இப்படி?

திங்கள், 11 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-61

உன்
ஒருத்திக்காகவாவது
நான் ஒரு
வங்கி மேலாளராக
இருந்திருக்கலாம்!

உன்
பொன்னகைக்கு பதிலாக
புன்னகைக்கே
கடன் தர
சொல்லியிருப்பேன்!

குறுஞ்செய்திகள்-60

உன்னிடமிருந்து
வந்திருக்காதென தெரிந்தும்
ஆவலுடன் பார்க்கிறேன்!

குறுஞ்செய்தி வேண்டாம்
வெறுஞ்செய்தி கூடவா
அனுப்ப முடியாது?

குறுஞ்செய்திகள்-59

தட்டச்சு இயந்திரத்தில்
தாளை
எவ்வளவு அழகாக
உள்ளீடு செய்கிறாய்!

நான் சிணுங்கும்போது
காதை
பிடித்து செல்லமாக
திருகுவது மாதிரி!

குறுஞ்செய்திகள்-58

உன்னிடத்தில்
நான்
முட்டாளாக
நடந்து கொள்ளவே
விரும்புகிறேன்!

ஏனெனில்
அறிவாளிக்கு
அறிவு இருக்கும்
முட்டாளுக்குத்தான்
அனுபவம் கிடைக்கும்!

ஞாயிறு, 10 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-57

திரைப்பட
இடைவேளையில்
பாப்கார்ன் ஒன்று
வாங்கி வந்தேன்

இரண்டு பாப்கார்ன்
வாங்கிவந்திருக்கலாம்
என்றதற்கு பரவாயில்லை
என்று சொன்னேன்

உனக்கில்லை
இரண்டுமே
எனக்குத்தான்
என்று புன்னகைக்கிறாய்!

குறுஞ்செய்திகள்-56


அடிப்பாவி
குனியும்போது
ஜாக்கிரதையாக
இருந்திருக்கக்கூடாதா?

பொல்லாத
என் கண்கள்
படமெடுத்து
வைத்துக்கொண்டுவிட்டதே!

குறுஞ்செய்திகள்-55

ஜவுளிக்கடையில்
பொம்மையை பார்த்ததற்காகவா
என்னுடன்
பேசமாட்டேன் என்கிறாய்!

சத்தியமாக நம்பு
பொம்மையின் சேலையை
உனக்குத்தான்
கட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன்!

குறுஞ்செய்திகள்-54

ஒப்பனைப் பெண்களுக்கு
உன்னைத்தான்
காட்ட நினைப்பேன்!

உன்னைப் போல
எளிமையாக இருப்பது
எவ்வளவு அழகென்று!

குறுஞ்செய்திகள்-53

பூக்கடையை
கடக்கும் போதெல்லாம்
நினைத்துக்கொள்வேன்!

பூக்களைப்பறித்தால்
செடிகளுக்கு வலிக்குமென்று
அன்று நீ சொன்னதை!

குறுஞ்செய்திகள்-52

ரோஜாவை
நீ சூடிக்கொள்ள
மறுத்தாய்!

இப்போது பார்
ரோஜா சூடிக்கொள்ள
வேண்டியதாயிற்று!

என் இரு
கண்ணீர்த் துளிகளின்
பாரங்களை!

சனி, 9 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-51

ஆதிகால மனிதன்
அம்புக்கூட்டை
முதுகில் சுமந்ததன்
அடையாளமாக
என்ற எழுத்து இருக்கிறது!

தற்கால மனிதன்
உன் அன்பை
இதயத்தில் சுமப்பதன்
அடையாளமாக
எதை நான் விட்டு செல்வது?

வெள்ளி, 8 ஜூலை, 2011

குறுஞ்செய்திகள்-50

என்னிடம்
பொய் சொல்வது
தவறென்று
நீதானே சொன்னாய்!

உனக்கு
என்ன பிரச்சனை
என்றால்
ஒன்றுமில்லை என்கிறாயே!

குறுஞ்செய்திகள்-49

உன்னைப்போல
நல்லவன்
யாருமில்லை என்றாய்!

உனக்கு எதாவது
வேண்டுமா?
என்று கேட்டேன்!

உன்னைப்போல
கெட்டவன்
யாருமில்லை என்கிறாய்!

குறுஞ்செய்திகள்-48

நான் பித்து பிடித்தவன்
போலிருப்பதாய்
உன்னிடம்
சொல்லப்போகிறானாம்
என் நண்பன்!

நான் பித்து பிடித்தவன்
போலிருக்க
காரணம் நீதானென்று
உனக்குமா தெரியாது?

குறுஞ்செய்திகள்-47

பேசிக்கொண்டே இருந்தாலும்
அழகுதான்!

மெளனமாக இருந்தாலும்
அழகுதான்!

உன்
உதடுகள்!