திங்கள், 18 பிப்ரவரி, 2013

தாலாட்டு...



சீதனமாய் வரும் செல்வம்
சித்திரமே நமக்கெதுக்கு...
கண்மணியே கண்ணுறங்கு
வருங்காலம் நமக்கிருக்கு...

கண்ணான கண்மணியே
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போடாதம்மா கடுதாசி

தங்கத்துல தோடு போட
மகளே தோது இல்லை
சந்தையில வாங்கித் தாரேன்
தங்கமே நீ போட்டுக்கம்மா

பட்டாடை உடை உடுத்த
மகளே வசதி இல்லை
ஆடி தள்ளுபடியில்
ஆடை வாங்கித் தாரேன்

பொத்தலான உடை பார்த்து
எத்தனையோ கேலி கிண்டல்
அத்தனையும் தச்சுத் தாரேன்
ஊசி நூலு இருக்குதம்மா

மாடி மேல மாடி கட்ட
நாதி இல்லை எம்மகளே
ஓல குடிசை இருக்கு
ஒரு முழம் பாய் இருக்கு

சுடுசோறு பலகாரம்
ஆக்கித்தர முடியலையே
கூழும் கஞ்சியும் தான்
குடிச்சி நீ வளர்ந்துக்கம்மா

காலுக்கு கொலுசு இல்லை
காலணி வாங்கித் தாரேன்
முள்ளும் கல்லும் குத்தாம
பள்ளிக்கு நீ போயிவாம்மா

விளக்கு எரியாமல்
எண்ணெய் இன்றி கிடக்குதம்மா
வீதியோரம் எரிஞ்சாக்கா
வெளியில் வந்து படிச்சிக்கம்மா

வாழ்க்கையில் முன்னேற
ஒருகையும் உதவாவிட்டால்
தன்னம்பிக்கை இருக்குதம்மா
வேறு கை எதுக்கம்மா?



3 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

சிறபான வாழ்வுக்குகந்த கவிதை அருமை !...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரியும் வலிகள்...

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

இந்த தாலாட்டு மிகவும் வலிக்கிறது.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)