வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மெட்டுப்பாடல்கள்-20

கொலுசொலி கேட்டு விட்டால்
எந்தன் நெஞ்சம் தாளமிடும்
ஆயிரம் பாடல்கள்
ஒரு நொடியினில் தோன்றிவிடும்

உந்தன் பார்வை தீண்டியே
நானோர் கவிஞனாகிறேன்
உந்தன் வேர்வை தீண்டினால்
ஐயோ என்ன சொல்லுவேன்?

காதலே என் காதலே
அட உனக்கென சிந்திடும் கண்ணீர்
ஏனோ இனிக்கிறதே
*
கண்ணுக்குள் பூக்குதடி வண்ணமலர் பூந்தோட்டம்
பூந்தோட்டம் எங்கெங்கும் ஓடுதடி உன் தேர் மட்டும்

தாமரை நினைவுகளோ தண்ணீரோடுதான்
காதல் நினைவுகளோ கண்ணீரோடுதான்

மண்ணை மரமது மறப்பதில்லை
வான் வரை வளர்ந்தாலும்
உன்னை மனமது மறப்பதில்லை
என்னுயிர் பிரிந்தாலும்
காதல் தந்த கண்ணீர் இனிக்குதடி
*
இதயத்தில் பறக்குதடி இன்னிசை குயில் கூட்டம்
குயில் கூட்டம் நெஞ்செங்கும் கூவுதடி உன் பேர் மட்டும்

மனம் போல் அலைகின்றேன் விண்ணில் மேகமாய்
மழைப் போல் தொலைகின்றேன் மண்ணில் வேகமாய்

என்னை எனக்கே யார் என்று
காதல் சொல்லியது
எந்தன் தேடல் நீ என்று
காதில் சொல்லியது
காதல் தந்த கண்ணீர் இனிக்குதடி
*
(குறிப்பு:இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை என்ற பாடல் மெட்டு)

கருத்துகள் இல்லை: