செவ்வாய், 22 மார்ச், 2016

மெட்டுப்பாடல்-36

சகியே உன்னை மறந்து விட்டேன்
வாழும் பொழுதிலே இறந்து விட்டேன்
புதிதாய் இன்று பிறந்து விட்டேன்-அந்த
பழைய நினைவுகளை துறந்து விட்டேன்
உந்தன் முகவரி தொலைப்பதற்கு
எத்தனை தவங்கள் புரிவதடி?
மறதியை படைத்த இறைவனுக்கு
நன்றி நன்றி நன்றியடி!

துல்லியமாக அந்த நொடி
நினைத்துப் பார்த்தேன் நினைவில் இல்லை
மெல்லியதாக மீசை முடி
அரும்பிய நாட்கள் அது உறுதி!
அந்த நாள் முதல் இன்று வரை
உந்தன் பெயரைக் கேட்ட உடன்
சட்டென்று மின்னல் வெட்டுவதை நான்
எங்கனம் எங்கனம் ஒளித்து வைப்பேன்?

திடும் என பாம்பினை பார்த்தவுடன்
படக்கென்று துள்ளிக் குதித்ததுண்டா?
சுடும் ஒரு பொருளினை தொட்டவுடன்
வெடுக்கென்று விரல்களை இழுத்ததுண்டா?
அறிவியல் உலகம் இதன் பெயரை
அனிச்சை செயல் என்று சொல்கிறது!
அனிச்சை செயலைப் போல் உன்நினைவு
தானாய் நிகழ்ந்து கொல்கிறது!

(எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடல் மெட்டு)




கருத்துகள் இல்லை: