ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

கரும் பலகை



     அந்த மாணவியின் பெயர் ஞாபகத்தில் இல்லை.வகுப்பு மூன்றாவது.அந்த பெண்ணின் அக்கா வேம்பரசி அப்போது எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் அப்பா கலியபெருமாள் ஆசிரியர்கள் மீது மரியாதை உள்ளவர்.அடிக்கடி பள்ளிக்கு வந்து பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை நலம் விசாரிப்பவர்.ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் கூட பெண் பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.ஊரில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு படிவங்களை நிரப்ப அவர் உதவி செய்வதை நானே நேரில் பல முறை பார்த்திருக்கிறேன்.மிகவும் வறுமையான குடும்பம் எனினும் ஒரு போதும் வறுமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெற்றிலை பாக்கை குதப்பி கொண்டே காவிப்பற்கள் தெரிய சிரிக்கும் அவர் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது.
     சரி சரி விஷயத்துக்கு நேரா வா!என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.கொஞ்சம் பொறுங்கள்.எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை!அதான் இப்படி!(ஹி...ஹி...ஹி...)எல்லா வகுப்புகளுக்கும் சுவர் கரும்பலகைகள் இருந்தன.மூன்றாம் வகுப்பைத்தவிர! நான் தான் மூன்றாம் வகுப்புக்கு வகுப்பாசிரியர்.சுவர் கரும்பலகை இல்லாததால் மாற்று ஏற்பாடாக தலைமை ஆசிரியர் சட்டத்தில் நிறுத்தி வைக்கும் சாய்வு கரும்பலகையை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.சாய்வு கரும்பலகையும் நல்ல வசதியாகத்தான் இருந்தது அதை நிறுத்தி வைக்கும் சக்கை ஒழுங்காக இருந்தவரை!சக்கை உடைந்து போனதால் கரும்பலகையை சட்டத்தில் இருந்து அகற்றி விட்டு சுவரில் சாத்தி வைத்து எழுதிக்கொண்டிருந்தேன்.
     நான் கொஞ்சம் உயரம் என்பதால் குனிந்து குனிந்து எழுத வேண்டியதாக இருந்தது!பல நேரங்களில் முட்டி போட்டு எழுத வேண்டியதாக இருந்தது!
(எங்கள முட்டி போட சொல்ற இல்ல?நல்லா முட்டி போடு என்று மாணவர்கள் உள்ளுக்குள் சந்தோஷப் பட்டிருப்பார்களோ?)எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!இதிலே இன்னொரு கூத்தும் நடக்கும். நான் இந்த பக்கம் எழுதினால் அந்த பக்கம் இருப்பவர்கள் மறைக்கிறது என்றும் அந்த பக்கம் எழுதினால் இந்த பக்கம் இருப்பவர்கள் மறைக்கிறது என்றும் மாறி மாறி புகார் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! தீராத தலைவலியாக இருந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
     திடீரென்றுதான் அந்த யோசனை எனக்கு பளிச்சிட்டது! நாமே ஏன் சட்டத்தை சரி செய்து கரும்பலகையை தூக்கி உயர வைத்து எழுதக்கூடாது?என்ற எண்ணம் வ்ந்த உடன் என்னையே ஒரு முறை பாராட்டிக்கொண்டு மளமளவென்று செயலில் இறங்க ஆரம்பித்தேன்! ஒரு ஓரமாய் சாத்தி வைத்திருந்த சட்டத்தை கொண்டு வந்து சுவரில் சாத்தி வைத்துவிட்டு டேய்! ஓடிப்போய் ரெண்டு குச்சி ஒடைச்சிக்கிட்டு வாங்கடா என்று கட்டளை இட்டேன்!குச்சிகள் வந்தவுடன் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு குச்சியை சொருகி,மாணவர்கள் உதவியுடன் கரும் பலகையை தூக்கி உயரே வைத்தேன்!முன் வரிசையில் முதல் ஆளாக வேம்பரசியின் தங்கை அமர்ந்திருந்தாள்.ஒரு வழியாக கரும்பலகை எல்லோர் பார்வைக்கும் தெரிந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியாக கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்!
     கரும்பலகையில் ஒரு வார்த்தை கூட எழுதியிருக்க மாட்டேன்!அதற்குள் அந்த விபரீதம் நடந்தது!கரும் பலகை வழுக்கி அந்த மாணவியின் காலில் விழுந்தது!(படு பாவிப்பசங்க ஓணாங்குச்சியையா ஒடைச்சி கிட்டு வந்து தருவானுங்க!)நிலமையை உணர்ந்து அவளை தூக்க ஒரே ரத்தம்!பெருவிரலை எவ்வளவு அழுத்தி பிடித்தும் ரத்தம் நிற்கவே இல்லை!(காயம் மோதிர விரலில்)குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டே வ்ந்து என்னை திட்டுவதற்காக வாயெடுத்த அவளின் அம்மா ரத்தத்தை பார்த்து தொபக்கடீரென்று மயக்கம் போட அவரை எழுப்புவதே பெரும் பாடாய் ஆகிவிட்டது!(பயபுள்ளைங்க அதுக்குள்ள வீட்டுக்கு தகவல் குடுத்துடுச்சே!)
     அந்த மாணவியின் அப்பா ரொம்ப நல்லவரானதால்(மிகச்சரியாக நகரப்பேருந்திலிருந்து அப்போதுதான் இறங்கி பள்ளிக்கு வந்தார்)
பிரச்சனை பெரிதாகவில்லை!விழுப்புரம் அழைத்து சென்று கட்டு கட்டி எக்ஸ்ரே எடுத்து பார்த்து(என் செலவில் தான்)அவளின் கால் சரியானது!
அன்றுதான் கற்றுக்கொண்டேன் எதையும் முன் ஜாக்கிரதையோடு செய்ய வேண்டும்!


1 கருத்து:

cheena (சீனா) சொன்னது…

அனின் சீனுவாசன் - இந்நிகழ்வு ஏன் நகைச்சுவையில் வருகிறது - தவறல்லவா ? சிந்திக்கவும். நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா