சனி, 20 ஆகஸ்ட், 2011

ஆட்டுக்குட்டி



               நான்காம் வகுப்பு தமிழ் புத்தகம் என்பதாய் ஞாபகம்.அனேகமாக அது கடைசிப்பாடமாக இருக்கலாம்.பாடத்தின் பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.வெற்றுத்திண்ணை...
                         அந்த கதையில் வள்ளி என்று ஒரு கதா பாத்திரம்.கதை என்ன வென்றால் வள்ளியின் அப்பா ஒரு குடிகாரர்.(குடிகாரன் என்று சொன்னால் குடிமகன்கள் யாரவது கோபித்து கொள்ள போகிறார்களோ என்ற பயம் தான்...)வீட்டிலிருக்கும் அண்டா குண்டா சட்டி பானை எல்லாவற்றையும் வைத்து தினந்தோறும் குடிப்பதுதான் வேலை.

                                     இது இப்படி இருக்க வள்ளி ஒரு ஆட்டுக்குட்டி வளர்த்து வந்தாள்.தினந்தோறும் ஆட்டுக்குட்டியோடு கொஞ்சி விளையாடுவதுதான் வேலை.பள்ளி விட்டு வந்ததும் முதல் வேலையாக ஆட்டுக்குட்டிக்கு தேவையான தீனி போடுவாள்.விடுமுறை நாட்களை ஆட்டுக்குட்டியோடுதான் கழிப்பாள்.திடீரென்று ஒரு நாள் வள்ளியின் அப்பா அவளை சந்தைக்கு அழைத்துக்கொண்டு போகிறார்.கூடவே ஆட்டுக்குட்டியையும் கூட்டிக்கொண்டு போகிறார்கள்.குடிப்பதற்கு பணம் இல்லாததால் திருவாளர் குடிமகன் அவர்கள் ஆட்டுக்குட்டியை சந்தையில் விற்றுவிட வெறுங்கையோடு வீடு திரும்புகிறார்கள்.மறுநாள் வள்ளி பள்ளிக்கு கிளம்பும் போது திண்ணையை பார்க்கிறாள்.ஆட்டுக்குட்டி இருந்த திண்ணை வெற்றுத்திண்ணையாக காட்சி அளிக்கிறது.

              இந்த பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு ஆட்டுக்குட்டி போக எனது ஆர்வக்கோளாறு காரணமாக ஆட்டுக்குட்டியை தூக்கி வந்து மேசை மேல் வைத்து கட்டிபிடித்து கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி விட்டேன்.வள்ளியின் அப்பா மாதிரி இருக்க கூடாது.வள்ளி போல ஆட்டுக்குட்டி மற்றும் வளர்ப்பு பிராணிகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று ஆழமான உபதேசம் வேறு!அத்தோடு விட்டேனா?பிள்ளைகளே வாருங்கள் ஒவ்வொருவராக வந்து ஆட்டுக்குட்டியை தொட்டு தடவிப்பாருங்கள் என்று வரிசையில் நிற்க வைக்க மாணவர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!எனக்கு மன நிறைவோடும்,மாணவர்களுக்கு மகிழ்சியோடும் அந்த பாடவேளை இனிதே முடிந்தது!

                  சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பள்ளிக்கு போனால் தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னால் ஒரு குடிமகன் ஏகவசனத்தில் என்னை அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.எவண்டா அவன் விழுப்புரம் வாத்தி?வெளிய வாடா!என்று.சாதரணமாகவே எனக்கு கை கால் உதறும்.தண்ணி போட்டு விட்டு என்னை கூப்பிடுகிறானே?சண்டாளப்பாவி!எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று புலம்பிக்கொண்டே தலைமை ஆசிரியரிடம் வழக்கம் போல் தஞ்சம் புகுந்தேன்!

                                பையூரிலிருந்து சேத்தூருக்கு போகும் வழி கரடு முரடாகவே இருக்கும்.ஏரிக்கரை மீது போகும் ஒற்றையடி பாதை வழியாகவே சென்றாக வேண்டும்!பாதையெங்கும் கற்களும்,முட்களுமாகவே நிறைந்திருக்கும்.வழியில் ஒரு சிறு பாலமும் உண்டு.விடுமுறை தினங்களில் விளையாடுவதற்காக போன பள்ளி பிள்ளைகள் ஆடு மாடு மேய்வதை பார்த்திருக்கிறார்கள்.உடனே நான் சொன்னது தானா நினைவுக்கு வர வேண்டும்?அதற்கேற்ற மாதிரி ஆடு ஒன்று குட்டிகள் போட்டிருக்க,வாங்கடா ஆட்டு குட்டியை கொஞ்சலாம் என்று ஆட்டுக்குட்டிகளை துரத்தியிருக்கிறார்கள்.

                 மிரண்டு போய் ஓடிய ஆட்டு குட்டிகளில் ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டிருக்கிறது! மற்ற குட்டிகள் கல்லிலும் முள்ளிலும் மாட்டி காயப்பட்டிருக்கிறது!பயந்து போன மாணவர்கள்  சத்தங்காட்டாமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்கள்!இது எப்படியோ சம்மந்தப்பட்ட ஆட்டுக்குட்டி உரிமையாளருக்கு தெரிந்து போக,வாத்தியார்தான் ஆட்டுக்குட்டியை பிடித்து கொஞ்ச சொன்னார் என்று என்னை கை காட்டி விட்டார்கள் பிள்ளைகள்! 

                                        இறந்து போன ஆட்டுக்குட்டிக்கும் காயம் பட்ட ஆட்டு குட்டிகளுக்கும் நட்டஈடாக தண்டம் அழுதபின் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது!அன்றுதான் கற்றுக்கொண்டேன்.சொல்வதை மிகைப்படுத்தி சொல்லக்கூடாது.


3 கருத்துகள்:

sangeetha சொன்னது…

நகைச்சுவை நல்லாத்தான் இருக்கு
ஆனால் கொஞ்சம் சிரிப்பு வர மாதிரி எழுதுப்பா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சீனு - சிரிக்க முயன்றேன் -இயலவில்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

radhakrishnan சொன்னது…

சீனு சார்.,
தங்கள் ஆர்வம் வியப்பளிக்கிரது.
ஆர்வக்கோளாறு விபரீதமாக அல்லவா
போகிறது.சற்று அடக்கி வாசிக்க வேண்டும் போலும்
வாழ்த்துக்கள்