வெள்ளி, 17 ஜூன், 2011

குளியல் நிகழ்வும் குவியல் நினைவும்

ஏரியின் நீர்ப்பரப்பில்
மிதந்திருக்கும்
சோப்பு நுரை
அங்கும் இங்கும்
அலை கழிகிறது

ஈரக்கருங்கல்லில்
மிச்சமிருக்கிறது
காயாத தேய்ந்த மஞ்சள்

தலைகலைத்து
உதிர்த்துபோட்ட
காய்ந்த முல்லைச்சரம்
கரையோரம்

காற்றோடு
கலந்து வரும்
மகிழம் பூ வாசத்தை
மீறியதாய்
சிகைக்காய்த்தூள் வாசம்

பாதங்கள் விட்டுப்போன
காலடிச்சுவடுகள்
படர்ந்த ஆலமரம் நோக்கி
பசும்புல் தரைவரைக்கும்

யாவும் பார்த்து
நீ மரத்தின் மறைவில்
ஆடை மாற்றி வருவாயென
காத்திருக்கிறேன்.






கருத்துகள் இல்லை: