வியாழன், 30 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-32

என் குற்றம் குறைகளை
மன்னிக்கின்றதோடு 
நிறுத்திக்கொள்ள கூடாதா?

உன் அன்பையும் பரிவையும் 
பரிசாகத்தந்து 
சங்கடப்படுத்துகிறாயே!

குறுஞ்செய்திகள்-31

இந்த உலகத்திலேயே 
மிருதுவான தலையணை 
எது என்று கேட்டாய்

அவரவரின் முழங்கை
என்று சரியாகத்தானே 
நான் சொன்னேன் 

அதற்காக இப்படியா 
உன் மடியிலிருந்து 
என்னை தூக்கி எறிவது? 

புதன், 29 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-30

என்னை ஒரு 
நிலைக்கண்ணாடியாக 
மாற்றிக்கொள்ள முடிந்தால் 
மகிழ்ச்சி அடைவேன்!

நீ சிரித்தால் சிரிப்பதற்கும் 
நீ அழுதால் அழுவதற்கும் 
எனக்கு ஏதுவாக 
இருக்கும் அல்லவா?


குறுஞ்செய்திகள்-29

பேசும் உதடுகளையும் 
இமைக்கும் கண்களையும் 
கொண்டிருந்தேன் நான்!

பேசும் கண்களையும் 
இமைக்கும் உதடுகளையும் 
தந்து விட்டாய் நீ!

குறுஞ்செய்திகள்-28

இந்த உலகத்தில் 
யாருமே 
நல்லவர்கள் இல்லை 
என்று சொல்லாதே!

ஐயோ! அப்படி சொன்னால் 
உன்னையும் 
சேர்த்தல்லவா 
அது குறிக்கிறது? 

குறுஞ்செய்திகள்-27

யாரோ சொன்னார்கள் 
சும்மா இருக்கும் மனம் 
சாத்தானின் இருப்பிடமாம்!


எனக்கு கவலையில்லை 
எப்போதும் நீதான்
ஆக்ரமித்து கொள்கிறாயே!

குறுஞ்செய்திகள்-26

இவ்வளவு நாளாயிற்று
இன்னும் கூட 
இதற்கெல்லாம்
விடை தெரிய வில்லை! 

உன்னால் மட்டும் 
எப்படித்தான் 
இவ்வளவு அக்கறை 
எடுத்துக்கொள்ள முடிகிறதோ? 

உனக்கு மட்டும் 
ஏன்தான் 
இவ்வளவு கோபம் 
பொத்து கொண்டு வருகிறதோ?

செவ்வாய், 28 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-25

ஒரு முறை
கடவுள் இல்லையென்று 
இப்போதாவது தெரிகிறதா?
என்று அழுதாய்!

ஒரு முறை
கடவுள் இருக்கிறாரென்று 
இப்போதாவது தெரிகிறதா?
என்று சிரித்தாய்!

ஒவ்வொரு முறையும் 
உனக்கு நான் சொன்னேன்-
இப்போதில்லை!எனக்கு 
ஏற்கனவே தெரியும்! 



ஞாயிறு, 26 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-24

விழியின் ஓரம் 
கசிகிற கண்ணீர்துளிகள்
உன்னை 
காட்டிக்கொடுத்து விட்டது! 

பிரிவின் ஏக்கம் 
தாங்குகிற இதயம் 
இருப்பதாய்
இன்னும் ஏன் நடிக்கிறாய்? 

குறுஞ்செய்திகள்-23

உனக்கு 
இவ்வளவு அழகாக 
கோலம் போடத்தெரியும் 
என்பதை மறைத்து விட்டாயே! 

உன்னுடைய 
புதிய எழுதாத 
பந்துமுனை பேனாவின் 
கிறுக்கல்கள் காட்டி கொடுத்துவிட்டதே!

குறுஞ்செய்திகள்-22

தெரியாமல் இடித்துவிட்டால் 
இப்படித்தான் இருந்ததென்று
மீண்டும் இடிக்கிறாய்!

தெரியாமல் மிதித்துவிட்டால் 
இப்படித்தான் இருந்ததென்று 
மீண்டும் மிதிக்கிறாய்!

தெரிந்தே முத்தமிட்டாலும்
இப்படித்தான் இருந்ததென்று 
மீண்டும் 
முத்தமிட மறுக்கிறாயே?

வியாழன், 23 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-21

இது எப்படி
உன்னால் முடிகிறது? 

சண்டை உன்னால் 
வரும்போதும் சரி

சண்டை என்னால்
வரும்போதும் சரி 

சமாதானம் என்னையே  
செய்ய வைக்கிறாயே? 

குறுஞ்செய்திகள்-20

யாருக்கேனும் 
காத்திருக்கும் போதெல்லாம் 
என் மணித்துளிகள் 
வீணாகி விடுகின்றன!
என்ன கொடுமை இது!

உனக்காக 
காத்திருக்கும் போதெல்லாம்
என் மணித்துளிகள் 
அர்த்தமுள்ளதாகி விடுகின்றன!
என்ன இனிமை இது!

குறுஞ்செய்திகள்-19

யாரையும் நம்பாதே!
என்னையும் சேர்த்துதான்
என்று அடிக்கடி சொல்கிறாய்! 

எனக்கோ குழப்பம்!
இப்போது நீ சொல்வதை
நம்புவதா? வேண்டாமா? 


குறுஞ்செய்திகள்-18

உன்னிடம்
எதிர்பார்ப்பை அதிகமாக்கி 
கொண்டே போவதில் 
எனக்கு
கொஞ்சமும் கவலை இல்லை!

ஒரு வேளை
ஏமாற்றத்தை சந்திக்க
நேர்ந்தாலும் கூட
அதற்காக 
நான் சந்தோஷப்படுவேன்! 

ஏமாற்றத்தை தரவும் 
உனக்கு
தெரியுமென்பது
எவ்வளவு 
அதிசயமான விஷயம்! 






குறுஞ்செய்திகள்-17

முன்னை போல்
நீ இல்லை 
எதுவும் 
சில காலம்தான் 
என்று அங்கலாய்கிறாய்!

பணி நிமித்தமாகக்கூட
வெளியில் 
செல்லக்கூடாதென்றால்
நான் 
என்னதான் செய்வது? 

குறுஞ்செய்திகள்-16

இப்போது எனக்கு
திடீரென்று 
சந்தேகம் வருகிறது!

துணிகளை உலரவைக்கும் 
கம்பிக்கொடிக்கு
உயிர் இருக்கிறதோ?

பூக்களை பறிக்கும்
லாவகத்தோடு
துணிகளை சேகரிக்கிறாயே!

புதன், 22 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-15

நீ எனக்கு 
எப்போதும் 
சுலபமான வேலைகளை
மட்டுமே 
கொடுத்திருக்கிறாய்!


நீ எனக்கு
எப்போதும் 
சந்தோஷமான வேலைகளை
மட்டுமே 
கொடுத்திருக்கிறாய்!

நீ ஏன் 
உன் அழகிய விரல்களுக்கு
சொடக்கெடுப்பதை 
நகம்வெட்டுவதை 
என்னிடம் தரக்கூடாது?

குறுஞ்செய்திகள்-14

பார்க்காத போதும்
ஒரு அழகான சிரிப்பை 
உதிர்த்து விட்டு 
போவதற்கும்

கேட்காத போதும்
ஒரு அன்பான வார்த்தை
பேசி விட்டு
போவதற்கும்

எத்தனையோ முறை
முயற்சித்தும் முடியவில்லை!
எனக்கும் கொஞ்சம்
கற்றுக்கொடேன்!


குறுஞ்செய்திகள்-13

உனக்காக என்ன செய்ய வேண்டும்?
என்று கேட்டேன்
உன்னால் அதை செய்ய முடியாது
என்று சொன்னாய்

பரவாயில்லை முயற்சி செய்கிறேன் சொல்
என்று கெஞ்சினேன்
என்னைப்பற்றி கவிதை எழுத முடியுமா?
என்று சிரித்தாய்

என்னால் அதை செய்ய முடியாது
என்பது உண்மைதான் 
கவிதையை பற்றி கவிதை எழுதுவது
அவ்வளவு சுலபமானதா? 


குறுஞ்செய்திகள்-12

அடிச்சாலும் புடிச்சாலும்
அன்பு மட்டும் குறையாத
மனம் வேண்டும்!

திட்டினாலும் கொட்டினாலும்
தீர்ந்து போகாத அன்பு
தினம் வேண்டும்!

கண்டிப்பாக நடக்கும்!
அடிப்பதும் புடிப்பதும்
திட்டுவதும் கொட்டுவதும்
நீயாயிற்றே விடுவாயா?


குறுஞ்செய்திகள்-11

பிசாசே...
ஒரு மணி நேரமாக
சொல்வதையெல்லாம்
"ம்"கொட்டி கேட்டு விட்டு
மறுபடியும்
உனக்கு என்னவெல்லாம்
பிடிக்குமென்றா கேட்கிறாய்?
என கோபித்துக்கொண்டாய்.

என்ன செய்வது நான்?
உனக்கு என்னவெல்லாம்
பிடிக்கும் என்பதை விட
உன்னைத்தானே எனக்கு
அதிகம் பிடித்திருக்கிறது!



செவ்வாய், 21 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-10

காத்திருந்தால்
விரும்பியது கிடைக்கும் 
என்பதையும்

கஷ்டப்பட்டால்
நினைத்தது நடக்கும்
என்பதையும்

காத்திருக்காமலும்
கஷ்டப்படாமலும்
எப்படி சோதித்தறிவது?

காத்திருக்கவும் 
கஷ்டப்படவும் 
என்னை நீ
அனுமதித்ததில்லை!
       



குறுஞ்செய்திகள்-9

நீ என்ன...

வருடம் ஒரு முறை
மட்டும் நினைக்க
பிறந்த நாளா?

மாதம் ஒரு முறை
மட்டும் நினைக்க
சம்பளத்தேதியா?

வாரம் ஒரு முறை
மட்டும் நினைக்க
ஞாயிறு விடுமுறையா?

தினம் ஒரு முறை
மட்டும் நினைக்க
நாட்காட்டியா?

ஒவ்வொரு நொடியும்
உன் நினைவுடனே
நானிருப்பதில்
உனக்கென்ன பிரச்சனை?





குறுஞ்செய்திகள்-8

என் எண்ணங்களை
வெளிப்படுத்த 
எழுத்துகளுக்கு
வலிமையில்லாத போதும்

என் உணர்வுகளை
வெளிப்படுத்த 
வார்த்தைகளுக்கு
வசதியில்லாத போதும்

உன்னால் மட்டும்
என்னை புரிந்து கொள்ள
முடிகிறதே!
அது எப்படி?

திங்கள், 20 ஜூன், 2011

குறுஞ்செய்திகள்-7

என்னை மரணத்திலிருந்து
மகிழ்ச்சிக்கு
இட்டுசெல்ல
முடியும் என்றால்

எனக்குள் நீங்காத
நினைவுகளை
விட்டுசெல்ல
முடியும் என்றால்

அந்த ஒரு நபர் 
நீயாக மட்டுமே
இருக்க முடியும்
என்று உனக்கு
தெரியாதா?


குறுஞ்செய்திகள்-6

முடியும் வரை போராடு!
வெற்றி நோக்கி
நீ செல்வாய்!

முடியாத போதும் போராடு!
உன்னை நோக்கி
வெற்றி வரும்!

ஆனால்
கண்டிப்பாக 
ஜெயிப்பது உறுதி!

குறுஞ்செய்திகள்-5

கஷ்டமே அதிகம் என்றால் 
எப்படி இருக்க முடியும்?என்று
ஒருபோதும் நினைக்காதே!

உன்னால் மட்டுமே
அவைகளை சமாளித்து
இருக்க முடியும்!

அதனால்தான் அவைகள்
உன்னிடம் 
கொடுக்கப்பட்டிருக்கின்றன!


குறுஞ்செய்திகள்-4

சில நேரங்களில் 
சில வலிகளை
மனசும் உடம்பும்
பொறுத்துதான் 
ஆக வேண்டும்!

கஷ்டப்படுவதை
தவிர்க்க நினைத்தால்
இஷ்டப்படுவதை
அடைய முடியாது!



குறுஞ்செய்திகள்-3

அழுபவர் 
சந்தோஷமாக
இல்லை என்று 
யார் சொன்னது?

அழுது பார்! 
அழுகையும் 
நிம்மதி தருவதை
நீ உணர்வாய்!

குறுஞ்செய்திகள்-2

உன்னை எனக்கு 
அறிமுகம் செய்து வைத்த 
காலத்திற்கும்

என்னை எனக்கு
அறிமுகம் செய்து வைத்த
உனக்கும்

நன்றி என்ற ஒற்றை
வார்த்தையிலா
கைமாறு செய்ய முடியும்?

குறுஞ்செய்திகள்-1

எப்போதுமே
என்னால் நிறைகிறது
உங்கள் 
செல்லிடப்பேசியின் 
செய்திப்பெட்டி!

காலை வணக்கம் 
சொல்ல வந்தேன்
உங்கள் 
கைபேசியின்
கதவு தட்டி!

ஞாயிறு, 19 ஜூன், 2011

இருத்தல்...

ஒரு பிரிவின் முடிவு
என்னவாக இருக்கும்?

மனிதர்கள் பிறப்பதும்
இறப்பதுமாக இருக்கிறார்கள்

ஏதேனும் சப்தங்கள்
எங்கேனும் ஓயாது ஒலிக்கிறது

இரவுகளில் வருகிறது
தவறிவிடாமல் கனாக்கள்

நாளையும் கிழக்கேதான்
சூரியன் முளைக்கும்!




உனக்கு எல்லாம் சுலபமாய் இருக்கிறதா?

எனக்கு பிடிக்காவிட்டாலும் கூட
என்ன வேண்டுமானாலும் செய்துகொள்
எது தேவையானாலும் எடுத்துக்கொள்
ஏன்எனில் உனக்கு பிடித்திருக்கிறதுதானே?

ஒரு சின்ன எதிர்ப்பை சொல்வதும்
தப்பாகி விடக்கூடும்
பின்பு நீ அழுவதை பார்த்திருக்க
என்னால் ஆகாது...



தொலைந்து போன ஒலிகள்

ஒரு தை மாதத்தின் முகூர்த்த வேளையில்
மணக்கோலத்தில் பார்த்தது
விடைபெற்றுக்கொள்ளக்கூட திரணியற்று
உடைந்த இதயத்தோடு திரும்பினேன்

இப்போதெல்லாம்
மழைக்கால மாலையின் ஈரக்காற்றில்
புகுந்து வரும் மெலிதான பெண் குரலோ
உன் வரவின் செய்தி சொல்லி
வாசல் தாண்டும் கொலுசு சப்தமோ
கேட்பதில்லை

நிலா இரவை கனவின் ஊடேயும் 
வெறுமை வாழ்வை 
மௌனத்தால் நிரப்பியும்
நலமாய் இருப்பாய் என்ற
நம்பிக்கையில் கழிக்கிறேன்!


வெள்ளி, 17 ஜூன், 2011

குளியல் நிகழ்வும் குவியல் நினைவும்

ஏரியின் நீர்ப்பரப்பில்
மிதந்திருக்கும்
சோப்பு நுரை
அங்கும் இங்கும்
அலை கழிகிறது

ஈரக்கருங்கல்லில்
மிச்சமிருக்கிறது
காயாத தேய்ந்த மஞ்சள்

தலைகலைத்து
உதிர்த்துபோட்ட
காய்ந்த முல்லைச்சரம்
கரையோரம்

காற்றோடு
கலந்து வரும்
மகிழம் பூ வாசத்தை
மீறியதாய்
சிகைக்காய்த்தூள் வாசம்

பாதங்கள் விட்டுப்போன
காலடிச்சுவடுகள்
படர்ந்த ஆலமரம் நோக்கி
பசும்புல் தரைவரைக்கும்

யாவும் பார்த்து
நீ மரத்தின் மறைவில்
ஆடை மாற்றி வருவாயென
காத்திருக்கிறேன்.






மழைக்கால படிமம்


நேற்றிரவு பெருமழையால் 
எங்கும் வெள்ளக்காடாய் 
வழிகிற பரப்புகளுக்கு
எதிர்பார்ப்புகள் பொய்த்த ஆழங்கள்.

கல்யாணத்திற்கான
பந்தக்குழி பள்ளம் 
செந்நீர் தேங்கிய
கடக்கால் பள்ளம்
முழுசும் நிரம்பிய
கிணற்று பள்ளம் 
யாவும் பாதகமில்லை.

முன்பொருநாள் முழங்காலளவு
தண்ணீரோடும் பெண்ணையாற்றில்
மணல் பள்ளத்தில் மூழ்கிப்போன 
சிறுவனின் மரணம் மனப்பள்ளத்தில்
மூழ்காமல் மிதக்கிறது!


புதன், 15 ஜூன், 2011

தினமும் வெளுக்கும் ஆகாயம்

இருப்பைக்கலைக்கும் உயிரோட்டமான
ஆற்றின் படித்துறையிலிருந்து
ஒவ்வொருவராய்  வெளியேறுகையின் இறுதியில்
என் வேண்டுதலின் முடிவு தெரியாத
உன் வருகை பார்த்து மௌனியாய்
உடமையாக நீ விட்டுச்சென்ற
வாசம் சுமக்கும் வளியினை ஸ்பரிசித்தபடி
நினைவுச்சுவடுகளை தொடர்ந்தவாறு...

எனதன்பே சுவட்டின் எச்சங்கள்
முன்னாலுள்ள பட்டாம் பூச்சிகளாய்
சிறகடித்து பறக்கும்
அவற்றின் சிறகுகளை சிதைத்து விடும்
உறவுக்கான ஒப்பத்தை வெட்டியெறிந்து
என் உயிர்ப்பை இறந்து விடாதபடி
புன்னகைத்து பிரிவாய் என்றிப்படியே
காத்திருப்பின் கணங்களை நீட்டியபடி...

(மறைந்த என் தம்பி கு.செல்வக்குமார் நினைவாக)

மெட்டுப்பாடல்கள்-12

ஞாபகங்களே நெஞ்சை அள்ளுதே
உந்தன் நினைவு உயிரை கிள்ளுதே

கனவில் பாய் விரிக்கிறேன்
இதுவும் நானேதானா?
தனிமையில் தினம் சிரிக்கிறேன்
இதுவும் நானேதானா?
சில அதிசயங்கள் எனக்குள்ளே ஏன் நிகழ்ந்தது?
*
எந்தன் பெயர் என்னவென்று மறக்கின்றேனே- கண்ணே
இறக்கை ஒன்றும் இல்லாமல் நான் பறக்கின்றேனே
உன்னை கண்டால் மானை போல தாவுகின்றேனே-கண்ணே
உன் பெயரை நெஞ்சுக்குள்ளே கூவுகின்றேனே

பெண்ணாக பூமியில் வந்த தங்க நிலவோ
எந்நாளும் நானே தங்க வந்த நிழலோ
இரவோடு என்னை தீண்டும் இன்ப ஒளியோ
உறவோடு கொஞ்சி பேசும் காதல் கிளியோ
காதல் இதயத்தில் கங்கை வெள்ளங்கள் கலந்தோடுதே
*
உந்தன் மார்பில் மலரை போல பூத்திருக்கிறேன்-கண்ணே
உந்தன் தோளோடு தோள் சேர காத்திருக்கிறேன்
உந்தன் முகம் நாணும் போது பார்த்திருக்கிறேன்-கண்ணே
கனவில் அதை காணும் போது வேர்த்திருக்கிறேன்

கண்ணே நீ கொடியில் பூத்த வைர இலையோ
இல்லை கடலோடு தப்பி வந்த முத்து அலையோ
கண்ணே உன் செந்தேகம் தங்க உலையோ
கண்ணே அதில் நான் கொதிக்க என்ன விலையோ
காதல் கண்களில் மின்மினிப்பூச்சிகள் பறந்தோடுதே
*
(குறிப்பு:சொல்லாமலே யார் பார்த்தது நெஞ்சோடுதான் பூ பூத்தது என்ற பாடல் மெட்டு)






மெட்டுப்பாடல்கள்-11

நெஞ்சோடு கவலை இல்லை- எனக்கு
வஞ்சிக்கொடி நீ இருந்தால்
பஞ்சோடு நெருப்பாக - எரிவேன்
கொஞ்சி பேசும் நீ பிரிந்தால் - என்னை
கொஞ்சி பேசும் நீ பிரிந்தால்
*
தாரம் தருகிற கட்டில் அன்பும்
தாயே தருகிற தொட்டில் அன்பும்
பூக்கிறதே உன்னால் பூக்கிறதே

இதயம் பாடும் நெஞ்சின் ஆசை
உதயம் ஆகும் காதல் ஓசை
கேட்கிறதே உன்னால் கேட்கிறதே

நிலவு ஒளிரும் வானத்தில்
ஒளியாய் நாமும் மாறிடுவோம்
வாசம் வீசும் தோட்டத்தில்
மலராய் நாமும் மாறிடுவோம்
பறவை பாடும் கானத்தில்
இசையாய் நாமும் மாறிடுவோம்
*
விண்ணில் சொர்க்கம் நட்சத்திர வானம்
மண்ணில் சொர்க்கம் பெண்ணுடைய நாணம்
கண்டு கொண்டேன் உன்னால் கண்டு கொண்டேன்

பயிர்கள் அத்தனையும் மண்ணுக்குள்ளே அடக்கம்
உயிர்கள் அத்தனையும் பெண்ணுக்குள்ளே அடக்கம்
தந்து விட்டேன் என்னை தந்து விட்டேன்

பொங்கி ஆடும் கடலினிலே
அலையை போலே வாழ்ந்திடுவோம்
பசுமை நிறைந்த திடலினிலே
பனியை போலே வாழ்ந்திடுவோம்
இயற்கை எழுதும் மடலினிலே
கவிதை போலே வாழ்ந்திடுவோம்
*
(குறிப்பு:கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-10

எங்கே எங்கே உன் வாசம்
அங்கே அங்கே என் சுவாசம்
நீ பக்கம் வந்தால் நான் போகி
நீ தள்ளி சென்றால் நான் யோகி
*
பூமுகம் பார்த்து பேசிட நினைத்தேன்
இருந்தும்  இமைகள் இறங்குதடி
சுமைகளை தாங்கும் கொடியினை கண்டேன்
இதயம் வருந்தி கலங்குதடி

பார்த்தால் போதும் ஆனந்தம் கொடுக்கும்
சுந்தரி உந்தன் இளமையடி
மார்கழி மாதம் வானத்தில் வசிக்கும்
ராத்திரி நிலவின் குளுமையடி

தென்றல் உனது வார்த்தைகள் கேட்டே
பூமி முழுவதும் வீசுமடி
வீசும் தென்றல் காற்றில் எங்கும்
பொன்மகள் உந்தன் வாசமடி
*
பாற்கடல் அதனை கடைந்து எடுத்து
தேவர்கள் படைத்திட்ட அதரமடி
மலரே உந்தன் அதரத்தின் ஓரம்
அமுதின் துளிகள் சிந்துமடி

சிறகுகள் முளைத்து வானத்தில் பறக்கும்
இந்திரா லோகத்து தேவியடி
தேவியின் பார்வை தீண்டும் போது
மோச்சத்தை அடையும் ஆவியடி

உயிராய் வந்து தரையினில் நடக்கும்
பாரதி தாசனின் கவிதையடி
ராக தேவன் இளைய ராஜா
சிம்பொனி உந்தன் வார்த்தையடி
*
(குறிப்பு:அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-9

வெண்ணிலவே என்  வெண்ணிலவே
நான் தன்னிலை இழந்தேனே
உன் நினைவில் நான் என் நினைவை
ஒரு கனவாய் மறந்தேனே

எந்தன் காதலியே நான் உயிர் பூவாய்
உந்தன் காதலில் மலர்ந்தேனே
விழி வீச்சில் நான் உயிர் தொலைத்து
உந்தன் மடியினில் விழுந்தேனே
கிளி பேச்சில் பின் உயிர் கிளைத்து
ஒரு நொடியினில் எழுந்தேனே
*
ஆறறிவில் எந்தன் ஐந்தறிவை
உந்தன் அழகுக்கு தந்தேனடி
மீதமுள்ள எந்தன் ஓரறிவும்
உந்தன் நினைவுக்கே சொந்தமடி

பூமகளே உன்னை பிரிந்திருந்தால்
நிமிடம் யுகமாய் நீளுதடி
நெஞ்சோடு நீயும் சேர்ந்திருந்தால்
யுகமும் நிமிடமாய் மாறுதடி

பூவெல்லாம் உன் வாசத்தை
கடனாய் கேட்குதடி
இந்த பூமியே உன் சுவாசத்தால்
புது ஜென்மம் எடுக்குதடி
*
தாலாட்டு பாடும் பூங்காற்று
தினம் உன் பெயர் சொல்லுதடி
இதயத்தின் சுவர்களில் ரத்தத்தினால்
மனம் உன் பெயர் எழுதுதடி

தாமரையே நீ முகம் மலர்ந்தால்
எனக்குள் சூரியன் உதிக்குதடி
கோபம் கொண்டு நீ முகம் சுளித்தால்
நெஞ்சில் பூகம்பம் வெடிக்குதடி

வானமே வந்து வாழ்த்திடும்
தெய்வீக காதலடி
அந்த காதலே தன்னை வியந்திடும்
ஒரு காவியம் ஆகுமடி
*
(குறிப்பு:என்னவளே அடி என்னவளே என் இதயத்தை தொலைத்து விட்டேன் என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-8

நினைவே என் நினைவே
என்னை நீங்காதே
முள்ளில் ரோஜாவாய் பூத்தாய்

நீயின்றி நிலவில்லை
நீயின்றி மலரில்லை
நீயின்றி போனால்
ஊனோடு உயிரில்லை
நெஞ்சோடுதான் நீங்காமலே நீ வா
*
பொன் விரல்கள் பூத்தொடுக்க
நார் எனவே நானிருந்தேன்
உன் விழிகள் போர் தொடுக்க
அடிமையாக தானிருந்தேன்

தினம் தோறும் நீ சிரிக்க
தவம் செய்து காத்திருந்தேன்
உயிர் மலரை நீ பறிக்க
மௌனமாய் பார்த்திருந்தேன்

விண்ணோடு சேர முகிலுக்கு தயக்கமா?
கண்ணோடு சேர இமைகளுக்கு தயக்கமா?
நெஞ்சோடுதான் நீங்காமலே நீ வா
*
நீ போகும் பாதை எல்லாம்
தென்றலுக்கு சொல்லி வைத்தேன்
பூம்பாதம்  நோகுமென்று
பூக்களை அள்ளி இரைத்தேன்

உனக்கொரு இன்பமென்றால்
மானாக துள்ளி குதித்தேன்
உனக்கொரு துன்பமென்றால்
நூலாக மெல்ல இளைத்தேன்

மண்ணோடு சேர மழைத்துளி ஏங்குதே
உன்னோடு சேர உயிர்த்துளி  ஏங்குதே
நெஞ்சோடுதான் நீங்காமலே நீ வா
*
(குறிப்பு:காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-7

நட்சத்திர பூக்களெல்லாம் வானுக்கு சொந்தம் அன்றோ?
வாடாத பொன்மலரே நானுனக்கு சொந்தம் அன்றோ?

ஈரமுள்ள நெஞ்சில் எல்லாமே
காதல் இருக்கும்
காதலரின் கண்கள் சிந்திடும்
கண்ணீர் இனிக்கும்

நதியினை கடலது வெறுக்குமோ?
உயிரினை உடலது வெறுக்குமோ?
*
பூவுக்குள்ளே தேன் இருந்தால்
வண்டுக்கு சொந்தம் அன்றோ?
பூமிக்குள்ளே நீர் இருந்தால்
வேருக்கு சொந்தம் அன்றோ?
யாருக்கு யாருன்னு முடிச்ச யாரு போடுவது?
எங்கேன்னு எங்கேன்னு அவனை நானும் தேடுவது?

இது காதல் செய்து வைத்த விளையாட்டு
மறுக்காமல் ஏற்று கொண்டு தலையாட்டு
கண்ணோடு இமை ஊடல் கொண்டு
எந்நாளும் தள்ளி போவதில்லை

காதல் ஒருபோதும் இல்லாமல் போகாது
பூலோகம் எந்நாளும் பூப்பூத்திடும்
*
மழைத்துளிகள் பெய்யும் முன்னே
மேகத்தின் சொந்தம் அன்றோ?
மழைத்துளிகள் பெய்த பின்னே
மண்ணுக்கு சொந்தம் அன்றோ?
பொண்ணுங்க எல்லோரும் மழைத்துளிய போல தானுங்க
பொறந்த வீட விட்டுவிட்டு புகுந்தவீடு போக வேணுங்க

இது காதல் செய்து வைத்த விளையாட்டு
மறுக்காமல் ஏற்று கொண்டு தலையாட்டு
கண்ணோடு இமை ஊடல் கொண்டு
எந்நாளும் தள்ளி போவதில்லை

காதல் ஒருபோதும் இல்லாமல் போகாது
பூலோகம் எந்நாளும் பூப்பூத்திடும்
*
(குறிப்பு:சின்ன முள்ளு காதலி அல்லோ?பெரிய முள்ளு காதலன் அல்லோ? என்ற பாடல் மெட்டு)

மெட்டுப்பாடல்கள்-6

உன் பேரை சொல்லித்தானே
என் இதயம் துடிக்கும்
உன் பேரை மறந்து விட்டால்
என் இதயம் வெடிக்கும்

பூவே நீயும் சொல்லுகின்ற
ஒரே ஒரு வார்த்தை போதும்
உலகத்தையே காலடியில்
கொண்டு வந்து சேர்ப்பேன்
*
வஞ்சிக்கொடி வீசும் பார்வையில் தானே
பஞ்சு உள்ளம் பத்திக்கிருச்சு
கொஞ்சி அவள் பேசும் வார்த்தையில் தானே
இன்ப வெள்ளம் பொத்துகிருச்சு

சிறகு என்றும் பறவைக்கென்று
சிட்டு நீயும் எனக்கென்று எனக்கென்று
தொட்டு கொள்ள எதுக்கடி கணக்கொன்று

மேகம் பூமிக்கு மழையினை தந்திட
வானம் மறுக்கிறதா?
பெண்மை ஆணுக்கு அழகினை தந்திட
நாணம் மறுக்கிறதே

இது எந்த ஊரு நியாயமடி?
இது என்ன என்ன நீதியடி?
நெஞ்சு எண்ணி எண்ணி வேகுதடி
உள்ள அன்னந்தண்ணி போகலடி
*
நீல வண்ண கடலு என்னைக்குமே
தண்ணி வத்தி போவதில்லை
பூவே உந்தன் நினைவு என்னைக்குமே
என்னை விட்டு போவதில்லை

பக்கத்துல வந்துவிடு
வெக்கத்துக்கு விடை சொல்லி அனுப்பிடு
வெத்தலைக்கு சுன்னாம்பென இருந்திடு

உன்னுடைய கூந்தலில் என்னுடைய உசிர
பறிச்சு சூடிக்கிட்ட
உன்னுடைய காதல உள்ளத்துல மறைச்சு
ஏண்டி மூடிக்கிட்ட

இது எந்த ஊரு நியாயமடி?
இது என்ன என்ன நீதியடி?
நெஞ்சு எண்ணி எண்ணி வேகுதடி
உள்ள அன்னந்தண்ணி போகலடி
*
(குறிப்பு:கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் என்ற பாடல் மெட்டு)