செவ்வாய், 1 நவம்பர், 2011

ஆறுவது சினம்

பஞ்சு ஆசாரி இருக்காரா?

அவன் எங்க போயி இருக்கான்னு எனக்கு தெரியாது.

எப்போ வருவாரு?

தெரியாது.

செல்லுக்கு போன் பண்ணா எடுக்க மாட்றாருங்க

நீ யாரு?

நான் சாலை அகரம் பள்ளி கூடத்து வாத்தியார்.

முன்னமே சொல்ல கூடாதா சார்! உள்ள வாங்க. உட்காருங்க. பஞ்சு எம் பையன் தான், என்ன விஷயம் சார்?

இடம் இல்லைன்னு சன் ஷேடு வைக்காம வீடு கட்டிட்டோம். இப்போ மழை பெஞ்ச தண்ணி உள்ள வருது. ஜன்னலுக்கு கதவு போட்டு தரேன்னு ரெண்டாயிரம் ரூபா வாங்கிட்டு வந்தார். ஆளையே காணோம். போன் பண்ணா எடுக்க மாட்றாருங்க

என்னை ஒரு வார்த்த கேட்டுட்டு குடுத்துருக்க கூடாதா? குடிகார பய. உங்க காச வாங்கிட்டு போயி குடிச்சிட்டிருப்பான். அவங்க அம்மாவ கூப்பிடறேன் சொல்லிட்டு போங்க. தோ வர்றா பாரு. உம் புள்ள என்னா பண்ணான்னு கேளு.

வீட்டுல ஒரு சின்ன வேலைங்க. உடனே செஞ்சு தரேன்னு காசு வாங்கிட்டு போனார். பத்து நாளாச்சு. ஆளையே காணோம்.

இன்னா சார் நீங்க. வேலையை செய்யறத்துக்கு முன்னால யாராச்சும் காசு குடுப்பாங்களா?

முருகா தியேட்டர் எதிர ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வேலை நடக்குது. அங்க தான் இருப்பன். போயி பாருங்க. என்று சொன்னாள் அந்த அம்மா.

சார் அவன் எங்க பையன் தான். ஆனா ஆள் சரியில்ல. வீட்டு பக்கமே வர மாட்டன். அவன் பசங்க ரெண்டும் கோலியனூர் சிவ சக்தி ஸ்கூல்ல ஆறாவதும், நாலாவதும் படிக்குது. ரெண்டும் எங்க பேர்ல உசுரா இருக்குதுங்க. ஆயா, தாத்தா ன்னு எங்களையே தான் சுத்தி சுத்தி வரும். நாங்க தான் பணம் கட்டி படிக்க வைக்கிறோம். இது வரிக்கும் அதுங்க செலவுக்கு ஒத்த ரூபா குடுத்தவன் கிடையாது. நான் புடிக்கிற வேல ஒன்னு கூட செய்ய மாட்டன். அவனே புடிக்கிற வேலைய தான் செய்வான். அதுவும் அவனுக்கு புடிச்சிருந்தா தான் செய்வான். ஆனா கடை, சாமான் எல்லாம் என்னுது. பெத்தவங்க மனச நோக வைக்கிறானே இவனெல்லாம் ஒரு மனுசனா? அவனால எங்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்ல. நாங்க சொன்னோம்னு சொல்லாத. நீ பாட்டுக்கும் போய் நேரா நில்லு. வச்சா காச வை, இல்ல கையோட வந்து வேலையை செய்ன்னு கூடவே புடிச்சுட்டு போங்க. இல்லைன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சொல்லுங்க. ஊட்டுக்கு அடங்காத புள்ள ஊருக்காவது அடங்குதா பாப்போம்.

"நம்பி தான் வேலையை கொடுக்குறோம். இப்படி பண்றாரே. சரிங்க" என சொல்லி விட்டு வண்டியை கிளப்பினேன்.

மரத்தடியில் நின்று சிகரெட் ஊதிக் கொண்டிருந்தார் பஞ்சு ஆசாரி. என்னை பார்த்ததும் பாதி சிகரெட்டை அப்படியே போட்டு விட்டு "வணக்கம் சார். கோவிச்சுக்காதீங்க. ஒரு அர்ஜென்ட் வேலை. அதான் வர முடியல. நாளைக்கு கண்டிப்பா வர்றேன்". என்றார். 

அது வரை அடக்கி வைத்திருந்த கோபம், அவரை பார்த்ததும் பொங்கி வந்தது. "எங்கிட்ட எனன சொல்லிட்டு காச வாங்கிட்டு வந்த? அட, காச விடு. போன் பண்ணா எடுத்து பதில் சொல்ல முடியாதா உன்னால."

"சட்டம் எல்லாம் வாங்கி வச்சிட்டேன் சார். கண்டிப்பா இந்த வேலை முடிஞ்சதும் நான் வந்துர்றேன் நீங்க போங்க சார்." என்றார். பொய் சொல்கிறார் என முகத்திலேயே தெரிந்தது. வீட்டுக்கு போனால் பொண்டாட்டி திட்டுவாள். எனன செய்வது எனப் புரியாமல் "இல்ல, நீங்க என் கூட வாங்க. லண்டன் ஹார்ட்வேர் கடைக்கு போவோம். ஜன்னலுக்கு கதவு அப்புறமா போட்டு தாங்க. இப்போதைக்கு ரெண்டு ஆங்கிள் வாங்கி சுவத்துல அடிச்சுட்டு மேல சிமென்ட் சீட் போட்டு முடுக்கிடலாம். உங்களால எங்க வீட்டுல சண்டை. இத கூட உருப்படியா செய்ய முடியலன்னு தினம் பிரச்சினை. நாங்க ரெண்டு பெரும் பேசிக்கறதே இல்லை." கொட்டி தீர்த்தேன். "சரி வாங்க" என அரை குறை மனதுடன் வண்டி பின்னால் அமர்ந்தார்.

பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு போய், பக்கத்து வீட்டில் ஏணி கடன் வாங்கி, ஆங்கிளை அடித்து, சிமென்ட் சீட் போடுவதற்குள் அரை நாள் ஓடி விட்டது. கம்ப்யூட்டர் செண்டரிலிருந்து சீக்கிரம் கொண்டு வந்து விடுங்க சார் என அவர் போன் மேல் போன் போட்டுக் கொண்டிருந்தார். வேலையை முடிக்கும் வரை அவரிடம் முகம் கொடுத்து பேச பிடிக்கவில்லை. வேலை முடிந்ததும் "என்ன கொஞ்சம் கம்ப்யூட்டர் செண்டர்ல விட்டுடுங்க சார்" எனக் கேட்டார். கொடுத்த காசுக்கே வேலை செய்யல, இதுக்கு வேற கூலி கேப்பானோ என மனதுக்குள் நினைத்துக் கொண்டே "சரி வாங்க" என்று சொல்லி வண்டியை கிளப்பினேன். கொஞ்ச தூரம் போயிருப்போம். "சார், லவ் பண்றது தப்பா!" என்று கேட்டார். இவன் என்ன பீடிகை போடுகிறான் என நினைத்துக் கொண்டு இல்லை என்றேன்.

"அப்பா சொந்தக்காரப் பொண்ணை கட்டிக்க சொன்னார். நான் முடியாது, இவளை தான் கட்டிக்குவேன்னு அடம் புடிச்சு எம் பொண்டாட்டிய கட்டிகிட்டேன். அவள எங்க வீட்டுல இருந்தவங்களுக்கு சுத்தமா புடிக்கல. இதனாலேயே அடிக்கடி பிரச்சினை வந்துச்சு. எப்பவுமே சண்டை தான். ஒரு நாள் கோவத்துல அப்பா அவள அடிக்க போக, தூக்கு போட்டுக்கிட்டு செத்துட்டா. அப்போ நான் வெளியூர்ல வேலைக்கு போயிருந்தேன். நான் அவ முகத்த கூட பாக்க முடியல. எல்லாம் முடிஞ்சு போச்சு. என்னால அவள மறக்க முடியல.செத்துடலாமுன்னு டிரை பண்ணேன், முடியல. ரெண்டு புள்ளைங்களும் அப்பா அம்மா கூட தான் இருக்குதுங்க. அவள மறக்க முடியாம தான் குடிக்கிறேன். உங்கள ஏமாத்தனும்னு  எண்ணமில்ல. தப்பா நெனச்சுக்காதீங்க. வேலை செஞ்சுட்டு சும்மா போக கூடாது.ஒரு பத்து ரூபாய் இருக்குமா என்றார்.

"மழை தண்ணி வீட்டுக்குள்ள வராதுன்னு நெனைக்கிறேன். பைபர் டோர் போடா குடுத்த காசுக்கு அப்புறமா கொசுவல அடிச்சு குடுத்துடுங்க. குடிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்க. புள்ளைங்கள பாத்துக்கோங்க." என்று சொல்லி கையில் ஐநூறு ரூபாயை திணித்து விட்டு கிளம்பினேன். பஞ்சு ஆசாரி மேல் இருந்த கோபம் பஞ்சாய் பறந்திருந்தது.

5 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

அருமையான கரு, ஆனால் முடிவை இன்னும் செம்மையாக செதுக்கி இருக்கலாம்... கொஞ்சம் அங்கங்கே லாஜிக் இடிக்கிறது...

பாலா சொன்னது…

கதை அருமையாக இருக்கிறது. யதார்த்தமாகவும் இருக்கிறது.

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

நல்லா எழுதிருக்கிஙக, நல்ல கதை

Meena சொன்னது…

நல்ல கதை. நிஜத்திலும் இப்படிப் பட்டவர்கள் இருப்பாரோ குடிக்கிற ஜனங்களில்?

Unknown சொன்னது…

அருமை