வியாழன், 17 நவம்பர், 2011

மழலை உலகம் மகத்தானது!


குழந்தைகள் உலகில் பெரியவர்களுக்கு இடமில்லை!அதில் உள்நுழைவதற்கு இரண்டு நிபந்தனைகள்.ஒன்று நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்.அல்லது நீங்கள் குழந்தையைப் போல் மாற வேண்டும்.

குழந்தைகள் கல்வி உரிமை தினம்(11.11.2011),குழந்தைகள் தினம்(14.11.2011),குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் (16.11.2011), சர்வதேச குழந்தைகள் தினம்(20.11.2011) என்று பத்து நாட்களுக்குள்ளாகவே பல்வேறு தினங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே!
இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?
குழந்தைகளை கொண்டாடுங்கள் என்ற அவரது வரிகளை சாதாரணமாக புறம் தள்ளி விட முடியாது!

குழந்தைகளை புரிந்து கொள்வதும்,அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து வழிக்கு கொண்டு வருவதும் எல்லோராலும் முடியாது!
என் நண்பர் ஞானவேல் அவர்களின் மகன் மகேஸ்வரன் திடீரென்று வயிற்றை பிடித்துக்கொண்டு அய்யோ அம்மா வயிறு வலிக்கிறதே என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விழுந்து புரளுவான்.வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக்கொள் என்று சொன்னால் சரி என்று சொல்லிவிட்டு இவர் இந்த பக்கம் வந்த உடன் அவன் அந்த பக்கமாக எழுந்து விளையாடிக் கொண்டிருப்பான்.அவனுக்கு பள்ளிக்கு மட்டம் போட வேண்டும் எனும் போதெல்லாம் வயிற்று வலி வந்து விடும்!மருத்துவரிடம் போகலாம் என்றாலும் சளைக்காமல் வருவான்.இப்போது வரைக்கும் அவர் குழம்பிக்கொண்டே இருக்கிறார்.அவனுக்கு உண்மையில் வயிற்று வலியா?இல்லை சும்மா நடிக்கிறானா?என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை!

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான ஒன்றல்ல!குழந்தைகள் தானாகவே வளர்ந்து விடுவார்கள்.தானாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்வார்கள் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் விட்டு விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுத்தர வேண்டியது பள்ளியின் வேலை.நமது வேலை இல்லை என்று பொறுப்பை தட்டி கழித்து ஆசிரியர்கள் மேல் போட்டு விடுகிறார்கள்.ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் காலையில் ஒரு மூன்று மணி நேரம் மாலையில் ஒரு இரண்டு மணி நேரம் என மொத்தம் ஐந்து மணி நேரம்தான் ஆசிரியரின் நேரடிப்பார்வையில் குழந்தைகள் இருக்கிறார்கள்.அதிலும் ஒரே ஆசிரியர் இருக்க வாய்ப்பில்லை.பாடவாரியாக ஆசிரியர் மாறிக்கொண்டே இருப்பார்.இப்படி இருக்க முழுப்பொறுப்பையும் ஆசிரியர்கள் மேல் திணிப்பது எந்த வகையில் நியாயம்?

பெற்றோர்கள் முன் உதாரணமாக இல்லாமல் குழந்தைகளை திருத்துவது என்பது மிக கடினமானதென்றே தோன்றுகிறது.என் மூன்று வயது மகள் திவ்யஸ்ரீயிடம்,மணி பத்தாகிறது காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும் போய் படு!என்று சொன்னால் நீயும் தானே சீக்கிரம் எழவேண்டும்.இந்த அப்பாவுக்கு வேற வேலையே இல்ல!எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டரையே நோண்டுவாரு!வந்து படுப்பா!என்கிறாள்.முன்பெல்லாம் என் மூத்த மகள் ஸ்ரீதேவி படுக்கையை ஈரம் பண்ணுவாள். அடித்தும்,திட்டியும் பலனில்லை!தினமும் நள்ளிரவில் எழுப்பி ஒருமுறை மெனக்கெட்டு போய்விட்டு வந்து படுக்கும்படி செய்தவுடன் இப்போதெல்லாம் அந்த பிரச்சனையே இல்லை!

குழந்தைகள் பொதுவாக நான்கு விஷயங்களை வெறுப்பதாக நான் கருதுகிறேன்.
1.நம் விருப்பங்களை அவர்கள் மேல் திணிப்பது
2.எப்போதும் அவர்களை குறை சொல்வது
3.மற்ற குழந்தைகளுடன் அவர்களை ஒப்பீடு செய்வது
4.மிகுந்த கண்டிப்புடன் அவர்களிடம் நடந்து கொள்வது

ஒரு கவிதை:
என்னவளே
வருங்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க
கல்வியை விடவும் சிறந்ததாக
வேறு ஏதேனும் இருக்கிறதா? என்றேன்

ஆமாம்
கல்வியை விடவும் சிறந்ததாக
கற்றுக்கொடுக்க வேறொன்று உள்ளது
அதன் பெயர் விழுமியங்கள்! என்றாய்!


குறிப்பு:
எனது நண்பர்  என்கிற விசு அவர்கள் ஒரு தொடர் பதிவை தொடரச்சொல்லி இருந்தார்.இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.
உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள்.மழலை உலகம் இன்னும் விரியட்டும்.

11 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

பெற்றோர்கள் முன்னுதாரணமாக இல்லாவிட்டால் குழந்தைகளை மாற்றுவது கடினம் என்ற உங்கள் கருத்து ஏற்புடையதே. மழலை உலகம் விரிவடைவதைக் கண்டு மிக மகிழ்கிறேன் நான். நல்லதொரு சிந்தனைப் பகிர்வைத் தந்தீர். நன்றி.

K.s.s.Rajh சொன்னது…

என்னையும் இந்த தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார்கல் இன்று எழுதியிருக்கின்றேன்

ரசிகன் சொன்னது…

//குழந்தைகள் உலகில் பெரியவர்களுக்கு இடமில்லை!அதில் உள்நுழைவதற்கு இரண்டு நிபந்தனைகள்.ஒன்று நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்.அல்லது நீங்கள் குழந்தையைப் போல் மாற வேண்டும்.//

பொன்னெழுத்துக்கள்.


//பெற்றோர்கள் முன் உதாரணமாக இல்லாமல் குழந்தைகளை திருத்துவது என்பது மிக கடினமானதென்றே தோன்றுகிறது.//

திருந்துங்கப்பா...


//குழந்தைகள் பொதுவாக நான்கு விஷயங்களை வெறுப்பதாக நான் கருதுகிறேன்.
1.நம் விருப்பங்களை அவர்கள் மேல் திணிப்பது
2.எப்போதும் அவர்களை குறை சொல்வது
3.மற்ற குழந்தைகளுடன் அவர்களை ஒப்பீடு செய்வது
4.மிகுந்த கண்டிப்புடன் அவர்களிடம் நடந்து கொள்வது//

இதை சரி செய்தாலே பெரியவர் உலகம் பேரானந்தம் மிக்கதாக மாறும்.


நல்ல கட்டுரை தந்தீர்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

சே.குமார் சொன்னது…

நல்லதொரு பகிர்வு. வாழ்த்துக்கள்.

பாலா சொன்னது…

அழைத்ததற்கு நன்றி நண்பரே. கண்டிப்பாக எழுதுகிறேன்.

suryajeeva சொன்னது…

ரசிகன் என்னையும் எழுதச் சொன்னார்... ஆனா எனக்கு தான் எழுத நேரமில்லாம இருக்கு... பாக்கிறேன்.. நாளைக்கு எழுத முடியுமான்னு

சந்திரகௌரி சொன்னது…

குழந்தைகள் தனி உலகத்தில் பெரியவர்கள் புகுந்து குழப்புவதனலேதான் பெரிய பிரச்சினைகள் எழுகின்றன. பெரியவர்கள் தமது எண்ணங்களை அவர்கள் மேல் புகுத்துவது. தமது பேராசைகளை அவர்கள் மூலம் நிறைவேற்றப் பார்ப்பது இவைகளே பிள்ளைகள் வழி தவருவதர்க்குக் காரணங்கள் ஆகின்றன. தம்மை மறந்து பிள்ளைகள் எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டு வழி நடத்தும் பெற்றோர்கள் எத்தனை பேர் எமது உலகில் உண்டு? என்னையும் பதிவு தொடர அழைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. தொடர்கின்றேன்.

Lakshmi சொன்னது…

குழந்தைகள் வெறுக்கும் நாலு விஷயங்களை தெளிவா சொல்லி இருக்கீங்க இதை படிக்கும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

ஷைலஜா சொன்னது…

நல்ல சிந்தனை சீனிவாசன் அவர்களே..இப்போதான் வாசித்தேன்

அம்பலத்தார் சொன்னது…

அடேங்கப்பா. என்ன சீனுவாசன் சார் குறுஞ்செய்திகளைஉம்தாண்டி பெரிய பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிட்டிங்க

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். இன்று தான் தங்களின் தளத்திற்கு வருகிறேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."