புதன், 30 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-220

என்னவளே
எத்தனையோ கவிதைகள்
கண்களை மூடி
கேட்டு ரசித்திருக்கிறேன்!

அடடா
இத்தனை சிறிய கவிதையா?
செல்லிட பேசியில்
உன்னுடைய "ம்"...

செவ்வாய், 29 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-219

என்னவளே
பசியால் அழும் குழந்தைக்கு
பால் போட்டு தா என்றால்
முறைக்கிறாள் ஒரு தாய்!

அடடா
அவள் ஐஸ்வர்யா ராய்க்கு
என்ன குழந்தையென்று
வலையில் தேடிக்கொண்டிருக்கிறாள்!

குறுஞ்செய்திகள்-218

என்னவளே
என்னை அடையாளப்படுத்தும்
எத்தனையோ வாய்ப்புகளை
உருவாக்கினார் என் தந்தை!

அடடா
இன்னாரின் மகனென்று
அறிமுகப்படுத்தும் நிலையிலேயே
இப்போது வரைக்கும் நான்!

திங்கள், 28 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-217

என்னவளே
எதிரே இருப்பவர் புன்னகைத்தால்
புன்னகைதானே வர வேண்டும்
இப்படி அழுகை வருகிறதே!

அடடா
புன்னகை முகம் மாறாமல்
தம்பியின் புத்தாண்டு புகைப்படம்
தோற்றம் மறைவை தாங்கியபடி!

சனி, 26 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-216

என்னவளே
சுவாசக் கூட்டின்
ஆர்ப்பரிக்கும் நரம்புகளை
அமைதியாக்குகிறது மருந்து!

அடடா
அளவுக்கு அதிகமானால்
அமுதமே நஞ்சானது போல்
உயிரே அதற்கு விருந்து!

வெள்ளி, 25 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-215

என்னவளே
வாய் திறந்து
பேசினால்
ஓரிரு வார்த்தைகள்!

அடடா
பேசாமல்
மெளனமாகவே
இருந்து விடலாம்!

குறுஞ்செய்திகள்-214

என்னவளே
எல்லா சண்டைகளின்
முடிவுகளிலும்
தேய்ந்து மறைகிறது கோபம்!

அடடா
இப்படி எத்தனையோ முறை
என்ன சொல்லி என்ன?
எப்போதும் போல் ஏற்றுக்கொள்!

புதன், 23 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-213

என்னவளே
எப்படியோ கிடைக்கிறது
இலவசமாகவேணும்
உண்ணுவதற்கான சோறு!

அடடா
எத்தனை நாளைக்கு
எனத்தான் தெரியவில்லை
கரம்பாயிருக்கிறது களம்!

குறுஞ்செய்திகள்-212

என்னவளே
கூட்டில் வசிக்காமல்
அலைந்து திரியும்
குயில் முகம் எதற்கு?

அடடா
கூட்டை சுமப்பது
சுகமெனக்கருதி
நகரும் நத்தை முகம் அழகு!

வெள்ளி, 18 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-211

என்னவளே
கடன் வாங்கித்தான்
செய்ய வேண்டுமென்றால்
கேட்க மாட்டேன் என்கிறாய்!

அடடா
கணக்கில் கூட
கடன் வாங்க மாட்டேனென்றால்
கழித்தலை எப்படிச் செய்வது?

வியாழன், 17 நவம்பர், 2011

மழலை உலகம் மகத்தானது!


குழந்தைகள் உலகில் பெரியவர்களுக்கு இடமில்லை!அதில் உள்நுழைவதற்கு இரண்டு நிபந்தனைகள்.ஒன்று நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்.அல்லது நீங்கள் குழந்தையைப் போல் மாற வேண்டும்.

குழந்தைகள் கல்வி உரிமை தினம்(11.11.2011),குழந்தைகள் தினம்(14.11.2011),குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் (16.11.2011), சர்வதேச குழந்தைகள் தினம்(20.11.2011) என்று பத்து நாட்களுக்குள்ளாகவே பல்வேறு தினங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே!
இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?
குழந்தைகளை கொண்டாடுங்கள் என்ற அவரது வரிகளை சாதாரணமாக புறம் தள்ளி விட முடியாது!

குழந்தைகளை புரிந்து கொள்வதும்,அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து வழிக்கு கொண்டு வருவதும் எல்லோராலும் முடியாது!
என் நண்பர் ஞானவேல் அவர்களின் மகன் மகேஸ்வரன் திடீரென்று வயிற்றை பிடித்துக்கொண்டு அய்யோ அம்மா வயிறு வலிக்கிறதே என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விழுந்து புரளுவான்.வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக்கொள் என்று சொன்னால் சரி என்று சொல்லிவிட்டு இவர் இந்த பக்கம் வந்த உடன் அவன் அந்த பக்கமாக எழுந்து விளையாடிக் கொண்டிருப்பான்.அவனுக்கு பள்ளிக்கு மட்டம் போட வேண்டும் எனும் போதெல்லாம் வயிற்று வலி வந்து விடும்!மருத்துவரிடம் போகலாம் என்றாலும் சளைக்காமல் வருவான்.இப்போது வரைக்கும் அவர் குழம்பிக்கொண்டே இருக்கிறார்.அவனுக்கு உண்மையில் வயிற்று வலியா?இல்லை சும்மா நடிக்கிறானா?என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை!

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான ஒன்றல்ல!குழந்தைகள் தானாகவே வளர்ந்து விடுவார்கள்.தானாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்வார்கள் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் விட்டு விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுத்தர வேண்டியது பள்ளியின் வேலை.நமது வேலை இல்லை என்று பொறுப்பை தட்டி கழித்து ஆசிரியர்கள் மேல் போட்டு விடுகிறார்கள்.ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் காலையில் ஒரு மூன்று மணி நேரம் மாலையில் ஒரு இரண்டு மணி நேரம் என மொத்தம் ஐந்து மணி நேரம்தான் ஆசிரியரின் நேரடிப்பார்வையில் குழந்தைகள் இருக்கிறார்கள்.அதிலும் ஒரே ஆசிரியர் இருக்க வாய்ப்பில்லை.பாடவாரியாக ஆசிரியர் மாறிக்கொண்டே இருப்பார்.இப்படி இருக்க முழுப்பொறுப்பையும் ஆசிரியர்கள் மேல் திணிப்பது எந்த வகையில் நியாயம்?

பெற்றோர்கள் முன் உதாரணமாக இல்லாமல் குழந்தைகளை திருத்துவது என்பது மிக கடினமானதென்றே தோன்றுகிறது.என் மூன்று வயது மகள் திவ்யஸ்ரீயிடம்,மணி பத்தாகிறது காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும் போய் படு!என்று சொன்னால் நீயும் தானே சீக்கிரம் எழவேண்டும்.இந்த அப்பாவுக்கு வேற வேலையே இல்ல!எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டரையே நோண்டுவாரு!வந்து படுப்பா!என்கிறாள்.முன்பெல்லாம் என் மூத்த மகள் ஸ்ரீதேவி படுக்கையை ஈரம் பண்ணுவாள். அடித்தும்,திட்டியும் பலனில்லை!தினமும் நள்ளிரவில் எழுப்பி ஒருமுறை மெனக்கெட்டு போய்விட்டு வந்து படுக்கும்படி செய்தவுடன் இப்போதெல்லாம் அந்த பிரச்சனையே இல்லை!

குழந்தைகள் பொதுவாக நான்கு விஷயங்களை வெறுப்பதாக நான் கருதுகிறேன்.
1.நம் விருப்பங்களை அவர்கள் மேல் திணிப்பது
2.எப்போதும் அவர்களை குறை சொல்வது
3.மற்ற குழந்தைகளுடன் அவர்களை ஒப்பீடு செய்வது
4.மிகுந்த கண்டிப்புடன் அவர்களிடம் நடந்து கொள்வது

ஒரு கவிதை:
என்னவளே
வருங்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க
கல்வியை விடவும் சிறந்ததாக
வேறு ஏதேனும் இருக்கிறதா? என்றேன்

ஆமாம்
கல்வியை விடவும் சிறந்ததாக
கற்றுக்கொடுக்க வேறொன்று உள்ளது
அதன் பெயர் விழுமியங்கள்! என்றாய்!


குறிப்பு:
எனது நண்பர்  என்கிற விசு அவர்கள் ஒரு தொடர் பதிவை தொடரச்சொல்லி இருந்தார்.இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.
உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள்.மழலை உலகம் இன்னும் விரியட்டும்.

திங்கள், 14 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-210

என்னவளே
தன் வேலைகளை
தானே செய்ய முடிவெடுத்து
செயல் படுத்தினாராம் காந்தி!

அடடா
துணிகளை துவைக்கும்
துணிவில்லாததால்தான்
அரையாடைக்கு மாறியிருப்பாரோ?

ஞாயிறு, 13 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-209

என்னவளே
சினத்தில் சிவக்கும்
உன் வதனத்தை
எதனுடன் ஒப்பிடுவேன்?

அடடா
சேற்றில் மலரும்
செந்தாமரை என்று
சொன்னால் பொருந்துமோ?

குறுஞ்செய்திகள்-208

என்னவளே
பூக்களை எதிர்பார்த்து
பூப்பறிக்க ஆசையாய்
பூந்தொட்டி நாடி சென்றேன்!

அடடா
வேர்களுக்கு நீர் விடாது
வெயிலில் வாட விட்டால்
வெறுந்தொட்டி தானே இருக்கும்?

சனி, 12 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-207

என்னவளே
மன நெருக்கடிகளின்
துயரங்களுக்கு ஆளாக்கி
ஏன் தவிக்க வைக்கிறாய்?என்றேன்

அடடா
குரூரங்களை பொறுத்து
பிரியங்களை காட்டுவதாய்
எனக்கு நடிக்க வராது! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-206

என்னவளே
என்னுடைய செயல்பாடுகள்
பிரக்ஞை பூர்வமற்று
நிகழ்கின்றதோ?

அடடா
இல்லையென்றால்
உன் மீது கூட
கோபம் வருமா?

செவ்வாய், 8 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-205

என்னவளே
பள்ளிக்கு அருகில் பெட்டிக்கடை
பேப்பர் பேனா பென்சில் எதுவுமில்லை
தீர்ந்து போய் விட்டதாம்!

அடடா
போதைப்பாக்கும்
புகையிலைப்பொருட்களும்
தடைசெய்யப்பட்டும் தாராளம்!

திங்கள், 7 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-204

என்னவளே
முத்தம் என்பது
ஒரு அழகான பூ என்றால்
நம்ப மறுக்கிறாய்!

அடடா
வேண்டுமானால் நீ
பூ என்று சொல்லிப் பார்
முத்தம் பூக்கிறதா?

சனி, 5 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-203

என்னவளே
ஒரு மூன்றெழுத்து மந்திரம்
என் எல்லா வலிகளையும்
தீர்த்து வைத்து விடுகிறது!

அடடா
அதனால்தான் என்னையறியாமல்
என் உதடுகள் உச்சரிக்கிறது
அந்த மந்திரம் அம்மா!

வியாழன், 3 நவம்பர், 2011

குறுஞ்செய்திகள்-202

என்னவளே
ஒவ்வொரு நொடியும்
நாம் இறந்து கொண்டிருக்கிறோம்
என்பது உண்மயா? என்றேன்

அடடா
ஒவ்வொரு நொடியும்
வாழாமல் இறப்பவர்களுக்குத்தான்
அந்த கவலை! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-201

என்னவளே
மருந்தகத்தில் இருப்பவன்
என்ன வேண்டுமானாலும்
நினைத்துக் கொள்ளட்டும்!

அடடா
அதற்காக வெட்கப்பட்டால்
அடிவயிற்றில் நெருப்புடன்
அவதிப்படப்போவது யார்?

செவ்வாய், 1 நவம்பர், 2011

ஆறுவது சினம்

பஞ்சு ஆசாரி இருக்காரா?

அவன் எங்க போயி இருக்கான்னு எனக்கு தெரியாது.

எப்போ வருவாரு?

தெரியாது.

செல்லுக்கு போன் பண்ணா எடுக்க மாட்றாருங்க

நீ யாரு?

நான் சாலை அகரம் பள்ளி கூடத்து வாத்தியார்.

முன்னமே சொல்ல கூடாதா சார்! உள்ள வாங்க. உட்காருங்க. பஞ்சு எம் பையன் தான், என்ன விஷயம் சார்?

இடம் இல்லைன்னு சன் ஷேடு வைக்காம வீடு கட்டிட்டோம். இப்போ மழை பெஞ்ச தண்ணி உள்ள வருது. ஜன்னலுக்கு கதவு போட்டு தரேன்னு ரெண்டாயிரம் ரூபா வாங்கிட்டு வந்தார். ஆளையே காணோம். போன் பண்ணா எடுக்க மாட்றாருங்க

என்னை ஒரு வார்த்த கேட்டுட்டு குடுத்துருக்க கூடாதா? குடிகார பய. உங்க காச வாங்கிட்டு போயி குடிச்சிட்டிருப்பான். அவங்க அம்மாவ கூப்பிடறேன் சொல்லிட்டு போங்க. தோ வர்றா பாரு. உம் புள்ள என்னா பண்ணான்னு கேளு.

வீட்டுல ஒரு சின்ன வேலைங்க. உடனே செஞ்சு தரேன்னு காசு வாங்கிட்டு போனார். பத்து நாளாச்சு. ஆளையே காணோம்.

இன்னா சார் நீங்க. வேலையை செய்யறத்துக்கு முன்னால யாராச்சும் காசு குடுப்பாங்களா?

முருகா தியேட்டர் எதிர ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வேலை நடக்குது. அங்க தான் இருப்பன். போயி பாருங்க. என்று சொன்னாள் அந்த அம்மா.

சார் அவன் எங்க பையன் தான். ஆனா ஆள் சரியில்ல. வீட்டு பக்கமே வர மாட்டன். அவன் பசங்க ரெண்டும் கோலியனூர் சிவ சக்தி ஸ்கூல்ல ஆறாவதும், நாலாவதும் படிக்குது. ரெண்டும் எங்க பேர்ல உசுரா இருக்குதுங்க. ஆயா, தாத்தா ன்னு எங்களையே தான் சுத்தி சுத்தி வரும். நாங்க தான் பணம் கட்டி படிக்க வைக்கிறோம். இது வரிக்கும் அதுங்க செலவுக்கு ஒத்த ரூபா குடுத்தவன் கிடையாது. நான் புடிக்கிற வேல ஒன்னு கூட செய்ய மாட்டன். அவனே புடிக்கிற வேலைய தான் செய்வான். அதுவும் அவனுக்கு புடிச்சிருந்தா தான் செய்வான். ஆனா கடை, சாமான் எல்லாம் என்னுது. பெத்தவங்க மனச நோக வைக்கிறானே இவனெல்லாம் ஒரு மனுசனா? அவனால எங்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்ல. நாங்க சொன்னோம்னு சொல்லாத. நீ பாட்டுக்கும் போய் நேரா நில்லு. வச்சா காச வை, இல்ல கையோட வந்து வேலையை செய்ன்னு கூடவே புடிச்சுட்டு போங்க. இல்லைன்னா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்னு சொல்லுங்க. ஊட்டுக்கு அடங்காத புள்ள ஊருக்காவது அடங்குதா பாப்போம்.

"நம்பி தான் வேலையை கொடுக்குறோம். இப்படி பண்றாரே. சரிங்க" என சொல்லி விட்டு வண்டியை கிளப்பினேன்.

மரத்தடியில் நின்று சிகரெட் ஊதிக் கொண்டிருந்தார் பஞ்சு ஆசாரி. என்னை பார்த்ததும் பாதி சிகரெட்டை அப்படியே போட்டு விட்டு "வணக்கம் சார். கோவிச்சுக்காதீங்க. ஒரு அர்ஜென்ட் வேலை. அதான் வர முடியல. நாளைக்கு கண்டிப்பா வர்றேன்". என்றார். 

அது வரை அடக்கி வைத்திருந்த கோபம், அவரை பார்த்ததும் பொங்கி வந்தது. "எங்கிட்ட எனன சொல்லிட்டு காச வாங்கிட்டு வந்த? அட, காச விடு. போன் பண்ணா எடுத்து பதில் சொல்ல முடியாதா உன்னால."

"சட்டம் எல்லாம் வாங்கி வச்சிட்டேன் சார். கண்டிப்பா இந்த வேலை முடிஞ்சதும் நான் வந்துர்றேன் நீங்க போங்க சார்." என்றார். பொய் சொல்கிறார் என முகத்திலேயே தெரிந்தது. வீட்டுக்கு போனால் பொண்டாட்டி திட்டுவாள். எனன செய்வது எனப் புரியாமல் "இல்ல, நீங்க என் கூட வாங்க. லண்டன் ஹார்ட்வேர் கடைக்கு போவோம். ஜன்னலுக்கு கதவு அப்புறமா போட்டு தாங்க. இப்போதைக்கு ரெண்டு ஆங்கிள் வாங்கி சுவத்துல அடிச்சுட்டு மேல சிமென்ட் சீட் போட்டு முடுக்கிடலாம். உங்களால எங்க வீட்டுல சண்டை. இத கூட உருப்படியா செய்ய முடியலன்னு தினம் பிரச்சினை. நாங்க ரெண்டு பெரும் பேசிக்கறதே இல்லை." கொட்டி தீர்த்தேன். "சரி வாங்க" என அரை குறை மனதுடன் வண்டி பின்னால் அமர்ந்தார்.

பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு போய், பக்கத்து வீட்டில் ஏணி கடன் வாங்கி, ஆங்கிளை அடித்து, சிமென்ட் சீட் போடுவதற்குள் அரை நாள் ஓடி விட்டது. கம்ப்யூட்டர் செண்டரிலிருந்து சீக்கிரம் கொண்டு வந்து விடுங்க சார் என அவர் போன் மேல் போன் போட்டுக் கொண்டிருந்தார். வேலையை முடிக்கும் வரை அவரிடம் முகம் கொடுத்து பேச பிடிக்கவில்லை. வேலை முடிந்ததும் "என்ன கொஞ்சம் கம்ப்யூட்டர் செண்டர்ல விட்டுடுங்க சார்" எனக் கேட்டார். கொடுத்த காசுக்கே வேலை செய்யல, இதுக்கு வேற கூலி கேப்பானோ என மனதுக்குள் நினைத்துக் கொண்டே "சரி வாங்க" என்று சொல்லி வண்டியை கிளப்பினேன். கொஞ்ச தூரம் போயிருப்போம். "சார், லவ் பண்றது தப்பா!" என்று கேட்டார். இவன் என்ன பீடிகை போடுகிறான் என நினைத்துக் கொண்டு இல்லை என்றேன்.

"அப்பா சொந்தக்காரப் பொண்ணை கட்டிக்க சொன்னார். நான் முடியாது, இவளை தான் கட்டிக்குவேன்னு அடம் புடிச்சு எம் பொண்டாட்டிய கட்டிகிட்டேன். அவள எங்க வீட்டுல இருந்தவங்களுக்கு சுத்தமா புடிக்கல. இதனாலேயே அடிக்கடி பிரச்சினை வந்துச்சு. எப்பவுமே சண்டை தான். ஒரு நாள் கோவத்துல அப்பா அவள அடிக்க போக, தூக்கு போட்டுக்கிட்டு செத்துட்டா. அப்போ நான் வெளியூர்ல வேலைக்கு போயிருந்தேன். நான் அவ முகத்த கூட பாக்க முடியல. எல்லாம் முடிஞ்சு போச்சு. என்னால அவள மறக்க முடியல.செத்துடலாமுன்னு டிரை பண்ணேன், முடியல. ரெண்டு புள்ளைங்களும் அப்பா அம்மா கூட தான் இருக்குதுங்க. அவள மறக்க முடியாம தான் குடிக்கிறேன். உங்கள ஏமாத்தனும்னு  எண்ணமில்ல. தப்பா நெனச்சுக்காதீங்க. வேலை செஞ்சுட்டு சும்மா போக கூடாது.ஒரு பத்து ரூபாய் இருக்குமா என்றார்.

"மழை தண்ணி வீட்டுக்குள்ள வராதுன்னு நெனைக்கிறேன். பைபர் டோர் போடா குடுத்த காசுக்கு அப்புறமா கொசுவல அடிச்சு குடுத்துடுங்க. குடிச்சு உடம்ப கெடுத்துக்காதீங்க. புள்ளைங்கள பாத்துக்கோங்க." என்று சொல்லி கையில் ஐநூறு ரூபாயை திணித்து விட்டு கிளம்பினேன். பஞ்சு ஆசாரி மேல் இருந்த கோபம் பஞ்சாய் பறந்திருந்தது.