செவ்வாய், 25 டிசம்பர், 2012

ஓய்வாசனம்


செய்முறை:

யோகாசனங்களைச் செய்து முடித்துவிட்டு அப்படியே மல்லாந்து படுக்கவேண்டும். தலைக்கோ, காலுக்கோ தலையணை எதுவும் வைத்துக்கொள்ளக் கூடாது. யோகாசனங்களைச் செய்த அதே விரிப்பில் மல்லாந்து படுத்துக் கண்களை மூடி உடம்பைத் தளர்வாக வைத்திருக்க வேண்டும்.. சுவாசத்தை  இயல்பான நிலையில் வைத்து சுவாசத்தை கவனிக்க வேண்டும்.

வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் அமைதியாக படுத்திருக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களோ, இன்னும் கொஞ்சம் கூடுதலாகவோ அவரவர் சௌகரியப்படி ஓய்வெடுத்துக் கொண்டு எழுந்து கொள்ளலாம்.

பயன்கள்:

யோகாசனங்களைச் செய்கின்றபோது விரைவாக ஓடிய இரத்தம் இப்போது சுகமான ஆறுதலைப் பெறுகின்றது. பயிற்சியினால் வினைபட்ட உள்ளுறுப்புக்களும், வெளியுறுப்புக்களும் சாந்தி பெறுகின்றன. முக்கியமாக சுவாசமும் இதயத்துடிப்பும் சமப்படுகின்றன. இதயநோய் உள்ளவர்களுக்கு இவ்வாசனம் நல்லதொரு மருந்தாகும். இதனால் இதயம் வளம்பெற்று இதயத்துடிப்பும் சீர்படுத்தப்படுகிறது. யோகாசனப் பயிற்சிக்குப் பின்னர் செய்யும் ஓய்வாசனத்தால் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் நலம்பெறுகின்றன.


ஹலாசனம்


செய்முறை:  

சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும்.அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில் வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்க வேண்டும்.

கால்களை நேராக ஒட்டியவாறு இருக்க வேண்டும். மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுப்பிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி சரீரத்தின் மேல் வளைத்து சுவாசத்தை வெளியே விட்டு கட்டை விரல்களை தலைக்குப் பின் கொண்டு வந்து தரையைத் தொட முயற்சிக்கவும். நாடி நெஞ்சைத் தொட வேண்டும்.ஒரு முறைக்கு ஒரு நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம். ஆசன நிலையில் சாதாரண மூச்சு.    

பயன்கள்: 

முதுகுத் தண்டுவடம் பலம் பெறும். நாடி மண்டலங்கள் அனைத்தும் நன்கு வேலை செய்யும். முதுமை ஒழிந்து இளமை மேலிடும். சோம்பல் ஒழியும். இடுப்பு, முதுகு, கழுத்து பலம் பெறும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையின்றி வாலிபத்தில் ஆண்குறியைத் தவறாகப் பயன்படுத்தி வீரியம் பெற்று இளமை பெற இவ்வாசனம் மிகவும் பயன்படும். பெண்கள் கருவுற்ற இரண்டு மாதம் வரை செய்யலாம். பின் செய்யக்கூடாது. நீரிழிவு நோய் வெகு விரைவில் குணமாகும்.

சர்வாங்காசனம்


செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்தநிலையில் இரு கால்களையும் இணையாக தலைக்கு மேல் செங்குத்தாக தூக்க வேண்டும்.. இரு கால்களையும் தலைக்கு பின்னால் கொண்டு போய்விடுங்கள். அதனால் இடுப்புபகுதி தூக்கியவாறு இருக்கும். இடுப்பு பகுதியை தூக்கியபின் இரு உள்ளங்கைகளையும் நடுமுதுகில் வையுங்கள்.

கால்களை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி செங்குத்தாக நேர்க்கோட்டில் நிறுத்தவும். உங்களின் கண்கள் மேலிருக்கும் இரு கால்கட்டை விரல்களை பார்த்தபடி இருக்க வேண்டும். கீழ்த்தாடைப்பகுதி நெஞ்சில் ஒட்டியிருக்க வேண்டும். கழுத்து பிடரி சரியாய் தரையில் படிய அமையுங்கள். ஆசனத்தின் போது சுவாசம் இயல்பாய் இருக்க வேண்டும்.

பயன்கள்:

பிடரியிலுள்ள நாளமில்லா பிட்யூட்டரி சுரப்பியை நோக்கி புது ரத்தம் பாய்வதால், உடம்பில் சுறுசுறுப்பு வந்துசேரும். தைராய்டு, தைமஸ் ஆகியவற்றின் சுரப்பும் அருமையாக இருப்பதால், சரியான வளர்சிதை மாற்றம் அமையும். தைராய்டு குறைபாடுகள் அகலும்.