செவ்வாய், 24 மே, 2011

மெட்டுப்பாடல்கள்-1

என்னவென்று சொல்ல -நினைவுகள்
கழுத்தை நெரித்து கொல்ல!
விழிகள் பிதுங்கி நிற்கிறேன்-அடியே
மொழிகள் தொலைந்து நிற்கிறேன்!
என்னை இழந்து நிற்கிறேன்-அதிலே
உன்னை சுமந்து நிற்கிறேன்!
*
நிலவு இரவுகளில் உலவும் தென்றல் அது
உந்தன் பெயரை சொல்லி பாடுதே!
ஓரப்பார்வைகளில் ஈர மல்லிகைகள்
எந்தன் நெஞ்சில் மலர்ந்தாடுதே!

இதய ஏடுகளில் எண்ண தூரிகைகள்
உன்னை உன்னை படம் போடுதே!
உயிரை உருக்கும் உந்தன் மார்பின் வெப்பம் அது
என்னை என்னை புடம் போடுதே!

மலர்க்கரம் தன்னில் முகத்தினை ஏந்து
மாறுதல் நிகழ்ந்து விடும்!
மறுகணம் என்னில் துன்பங்கள் தொலைந்து
ஆறுதல் தவழ்ந்து வரும்!
*
மாமரக் கிளைகளில் மரத்தின் இலைகளில்
மறைந்த கிளியை நெஞ்சம் தேடுதே!
காற்றில் கலந்து வரும் கிளியின் மொழிகள் அதை
கேட்டு கேட்டு கண்கள் மூடுதே!

ஆதிகாலம் தொட்டு சூரிய காந்தி மொட்டு
கிழக்கு முகத்தை தினம் நாடுதே!
ஆயினும் அது ஒரு ஆகாத தவறென
வழக்கு நடக்க மனம் வாடுதே!

முன்பனி காலத்தில் முழுமதி நேரத்தில்
முத்தமிட்ட நாட்கள் எங்கே?
யாரது இந்த வேளையில் என்று
சத்தமிட்ட ஆட்கள் எங்கே?
*
(குறிப்பு:எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை என்ற பாடல் மெட்டு )

1 கருத்து:

sangeetha சொன்னது…

உனக்கு இப்படியெல்லாம் கூட எழுத தெரியுமா?
ஆச்சரியம் + அருமை