ஞாயிறு, 22 மே, 2011

கடைசிக்கடிதம்!

அன்பே சொல்...
எப்போதிலிருந்து
துவங்கியது-
நம் பிரிவுக்கான மௌனம்?


உயிரே சொல்...
எப்போதிலிருந்து
நிச்சயமானது-
நம் உறவுக்கான மரணம்?


காலை வேளையில்
கண்டும் காணாத 
ஓரப்பார்வைகளின்
கரிசனங்கள் இல்லை!


மாலை வேளையில்
காற்று வாங்கும்
மாமரத்தடிகளில்
தரிசனங்கள் இல்லை!


எப்போதும் நீ விரும்பும்
குட்டித்தூக்கத்தை
இப்போது-
தொலைத்து விட்டாயாமே?


உனது நாட்குறிப்பேட்டில்
ஆசையாய் எழுதி வைத்த
என் பெயரை-
கலைத்து விட்டாயாமே?

எந்த கேள்வி யார் கேட்டாலும்
ஓரிரு வார்த்தைகளில் 
பதில் சொல்ல-
கற்றுக்கொண்டாயாமே ?


எந்த உதவி யார் செய்தாலும்
காரணம் யாரென
உறுதி படுத்தி-
பெற்றுக்கொண்டாயாமே?


குளிப்பதாய் சொல்லி
குளியலறைக்கு சென்று
குளிக்காமல்-
திரும்புகிறாயாமே?

தலையணைக்குள்
முகம் புதைக்கும்
தனிமைகளை-
விரும்புகிறாயாமே?


வேதனையோடு வினவுகிறேன்
ஏன் இப்போதெல்லாம்
சந்தோஷ முல்லைகள்
உன் வதன தோட்டத்தில் பூப்பதில்லை?


எனக்குள்ளே முனவுகிறேன்
ஏன் இப்போதெல்லாம்
உன் காதுகளில்
என் பேச்சு மட்டும் கேட்பதில்லை?


அடிக்கடி
அழுகை உனக்கு
சொந்தமாகிறதாமே?


என்னை பார்த்தால்
உந்தன் புத்தி
மந்தமாகிறதாமே?
 
என்னைப்பற்றிய
பேச்சுக்களை
வெகு ஜாக்கிரதையாக
தவிர்த்து விடுகிறாயாமே?


அப்படியும் பேசினால்
வேண்டுமென்றே
வேறொரு கதையை
அவிழ்த்து விடுகிறாயாமே?


என்னோடு சேர்த்து
எதை எதையோ
மறந்து விட்டதாக
பொய் மாளிகை கட்டிக்கொள்ள
யார் உனக்கு
அஸ்த்திவாரம் போட்டார்கள்?


உனக்கும் எனக்கும்
ஒருபோதும்
ஒத்துவராதென
பசுமரத்தாணி போல்
யார் உனக்கு
பதியவைக்கப் பார்த்தார்கள்?


புல்லாங்குழலை
முறித்தென்ன?
அதன் கீதம்
செவிக்கு
சொந்தமான பின்னே?


ஜாதிமுல்லையை
கசக்கியென்ன?
அதன் வாசம்
மூக்கின்
மூச்சான பின்னே?


என் செல்லமே
பிரிதல் எனபது
உனக்கும் எனக்குமான
ஒரு புரிதல்
என்றே எண்ணுகிறேன்!


எப்போதும் நீ
ரசித்து பார்க்கும்
அழகிய நட்சத்திரமாய்
எட்டி நின்றே
நான் மின்னுகிறேன்!


என் நெஞ்சை காப்பாற்றும்
நெருப்பாக
உன்னை ஊதி ஊதி
எப்போதும் வைத்திருக்கிறேன்!


உன் காலை காப்பாற்றும்
செருப்பாக
என்னை மாற்றிதர
இப்போதும் காத்திருக்கிறேன்!


நீ
என்னுள்
எழுகின்ற வெப்பம்!


என்
அன்புப்பசியை
அடக்கிய அப்பம்!


நிஜமான
நினைவுகள்
மரிப்பதில்லை!


நிஜமான
கண்ணீர்
கரிப்பதில்லை!


உன்னைப்பற்றிய
நினைவுகள்
கொடுக்கும் சுகங்கள்தான்
இந்த மண்ணின்
சொர்கங்களோ?


உன்னைப்பற்றிய
கனவுகள்
கொடுக்கும் சுகங்கள்தான்
அந்த விண்ணின்
சொர்கங்களோ?


நெஞ்சு கூட்டுக்குள்
நிரந்தரமாய்
நீ இருக்க
பிரிவுகளுக்காய்
அழுவதில் அர்த்தம் இல்லை!


ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்ட
பிறகும் கூட
பிரிவுகளுக்காய்
புலம்புவதில் நியாயம் இல்லை!


பிரிவு என்பது
சுதந்திரம்
அதில் பிரியம் என்றுமே
நிரந்தரம் ஆனால்!


பிரிவு என்பது
ஒரு வரம்
அது பிரியத்தின்
அடையாளம் ஆனால்!


நீ தள்ளி
இருக்கையில்தான்
தவிக்க முடிகிறது!


நீ தூர
இருக்கையில்தான்
துடிக்க முடிகிறது!


எனவேதான்
உன் நினைவுகளில்
நனையவே
தனிமை தேடுகிறேன்!


நீயே வந்து
தட்டும் போதும்
இதயத்தின்
கதவை மூடுகிறேன்!


நீ
தொலைவில் இருக்கையில்
வார்த்தைகள் முட்டுகிறது!


உன்னை
அருகில் பார்க்கையில்
உதடுகள் ஒட்டுகிறது!

நம்மை நமக்கே
பிரிவுதான்
புரிய வைக்கிறது!


உயிரின் உணர்வை
பிரிவுதான்
தெரிய வைக்கிறது!


என்றிலிருந்து என்று
ஞாபகம் இல்லை!
உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கு பிடிக்கிறது!


என்றிலிருந்து என்று
சொல்ல முடியாது!
உனக்கு பிடிக்காததெல்லாம்
விட்டுவிட தோன்றுகிறது!


உன் தனிமைகளில்
என்ன யோசிப்பாயென
நான் யோசிக்கிறேன்!


உன் வெறுமைகளில்
எதனை நிரப்புவதென
கடவுளை யாசிக்கிறேன்!


உன்னை பிரிந்து
நான் வாழ்கிறேனா?
யார் அப்படி
சொல்லிப்போனது?


உன்னை மறந்து
நான் இருக்கிறேனா?
அதனை நீ
நம்புகிறாயா?


எந்த பாடலையும்
தாளத்துடன்-
இசைத்து கேட்கிறேன்!


சுற்றி நடக்கும்
வேடிக்கையை-
ரசித்து பார்க்கிறேன்!


வேளை தவறாமல்
வயிற்றை-
பசித்து  நிரப்புகிறேன்!


காற்றில் வரும்
நறு மணத்தை
விரும்பி நுகர்கிறேன்!


கண்ணாடி பார்த்து
தலை வாரி
அலங்கரிக்கிறேன்!


எல்லோரும் போல்
சிரித்து
பேசிக்கொண்டிருக்கிறேன்!


நீ இல்லாமலேயே
உன் நினைவுகள்
என்னை நிறைத்திருப்பதால்!


நீ
என்ற சொல்லின்
அர்த்தம்
எனக்கு தெரியும்!


நான்
என்ற சொல்லின்
அர்த்தம்
உனக்கு தெரியும்!


நாம்
என்ற சொல்லின்
அர்த்தம்
நமக்கே தெரியாது!


உன்னை என்றுமே
எனக்குள்
இருத்தி வைக்க
ஆசைபடுகிறேன்!


சுமக்க முடியாத
உன் ஞாபகங்களை
நான் இன்னும்
சேகரிக்கிறேன்!


பிரிவு என்பதை
சொல்லத்தான் வேண்டும்
அதற்கான வார்த்தைக்கு
நான் எங்கு போவேன்?


பிரபஞ்சத்தில்
நீயும் நானும் நிறைந்திருக்க
காலத்தின் இச்சிறு பிரிவு
நம்மை என்ன செய்யும்?


உடல்
எப்போதும் அழிந்து விடும்!
அது பிரிவை
நமக்கு தருகிறது!


மனம்
நினைவுகளின் பிறப்பிடம்!
அது உன்னிடம்
இருந்தே தொடங்குகிறது!


என்னில்
சில வரிகளை மட்டுமே
நீ படித்திருக்கிறாய்!
நான் இன்னமும்
முழுமை அடையாத
ஒரு புத்தகம்!


என்னிடமிருந்து
விலகிப்போக
நீ எத்தனிக்கிறாய்!
அது உன்னை
எனக்குள் சிறைவைக்கும்
தீவிர முயற்சி!


ஏன்
என் அன்புக்கு
பெயர் வைக்க சொன்னாய்?


தென்றல் மொழி
பூவுக்கு
புரியாதா?


ஆதவன் தீண்டல்
தாமரைக்கு
தெரியாதா?


வாசிக்கும் கரங்கள்
ராகம்
அறியாதா?


நேசிக்கும் உள்ளத்துக்கு
அன்பு
தெரியாதா?


புரிந்தும் புரியாமல்
நடிக்கின்ற
ஊடலா?


புல்லின்
அனுமதி கேட்டா
பனித்துளி
படுத்து உறங்குகிறது?


உன்னிடம்
அனுமதி கேட்டா
மனம்
மயங்கி கிறங்குகிறது?


கடலோடு
அலை
சங்கமிப்பது
யாரை கேட்டு?


மனதோடு
மனம்
சங்கமிப்பது
யாரை கேட்டு?


உன்னால் என்னை
புரிந்து கொள்ள
முடியும் என்றால்
எனக்காக
விட்டு கொடு!


என்னால்தான்
உன் இரவுகள்
விடியவில்லை என்றால்
என்னையே
விட்டு விடு!


வாழ்வின்
வசந்தங்களோடு
வாழ்க்கை முடிவதில்லை!


வசந்தமில்லா
வாழ்க்கையை
வாழ்வதில் பயனில்லை!


காற்றோடு
வாசம் வீசும்
பூக்கள் கூட
வாடித்தான்
ஆகவேண்டும்!


விடியலோடு
உல்லாசமாயிருக்கும்
உலகும் கூட
அஸ்தமித்துதான்
ஆகவேண்டும்!


உனக்கும்
எனக்குமான
உறவுகளுக்கு
பெயரிட விரும்பவில்லை!


பெயரிடப்பட்ட
உறவுகள்
சீக்கிரத்தில்
செத்து போய்விடும்!


அன்பு என்பது
உறவுகள் என்னும்
சிறைகளுக்குள்
ஒருபோதும்
சிக்காதது!


அன்பு என்பது
ஒருவரின் வேதனை
விக்கல்களுக்கு
நீர் கேட்டு
விக்காதது!


உன்னை
எப்படி
நான்
அழைப்பது?


நீ
ஒரு
சுகமான
அவஸ்த்தை!


நீ
ஒரு
அவஸ்த்தையான
சுகம்!


உன்னுடன்
பேசிய வார்த்தைகள்
தொலைந்தா
போய்விடும்?


உன்னுடன்
பழகிய நினைவுகள்
மறந்தா
போய்விடும்?


உன்னை விடவும்
உன்
அன்புகள் சுமந்த
இனிமையான தருணங்களை
நினைத்து கொண்டிருப்பது
எனக்கு சுகமாயிருக்கிறது!


என்
பேச்சுகள்
உன்னை
கவர்ந்திருக்கலாம்!


என்
நிறைகள்
உன்னை
நிறைத்திருக்கலாம்!


என்னைப்பற்றிய
உன்
கற்பனை கலந்த
இனிப்பான கனவுகளை
கலைத்து விடுவதில்
எனக்கும் விருப்பமில்லை!


யோசித்துப்பார்!
எத்தனை முறை
என் இதயத்தை
குத்தி கிழித்திருப்பாய்!


சிந்தித்துப்பார்!
எத்தனை முறை
கண்ணீர் சிந்தி
அழ வைத்திருப்பாய்!


என் குறைகள்
என்னவென்று
நீ
அறியாமலேயே!


என்
தேவைகளுக்கு
நீ
சேவை செய்வதா?


நிச்சயமாய்
நீ
நேசிக்கப்பட
வேண்டும்!


கண்டிப்பாய்
நீ
பூசிக்கப்பட
வேண்டும்!


நீ
ஆட்டுவிக்க
பிறந்திருக்கிறாய்!


நீ
போற்றப்பட
பிறந்திருக்கிறாய்!


பூவுலகின்
சொர்கங்கள்
உனக்கு சொந்தம்!


ஏணிவைத்தாலும்
எட்டாது
உன்னோடு பந்தம்!


எனக்காக என்ன
செய்வாய்?
எப்போதும் என்னிடத்தில்
கிண்டலுடன் கேலி!


உன் தோட்டத்தில்
பூக்கும்
சந்தோஷ பூக்களுக்கு
நானும் ஒரு வேலி!


நம் சிநேகம்
பருவத்தில்
ஏற்படுகின்ற
இனக்கவர்ச்சிஎன்று
நினைத்து விடாதே!


எதிரெதிர்
பாலினத்திற்கு
ஏற்படுகின்ற
ஈர்ப்புஎன்று
எண்ணி விடாதே!


அது
என்னுடைய
உயிரின்
வெளிப்பாடு!


அது
என்னுடைய
அன்பின்
அவதாரம்!


முதிர்ச்சி அன்னையால்
தாலாட்டப்படாத
முறிந்து போகும்
சிறகுகளோடு
நான்!


என் இதயம்
கசிந்துருகி
வழிந்து ஓடும்
கண்ணீர் துளிகளில்
நீ!


காயங்களுக்குதான்
மருந்தின் அருமை
தெரியும்!


பசித்தவனுக்குதான்
விருந்தின் அருமை
தெரியும்!


நான்
இன்பங்களுக்காக
மட்டுமல்ல
துன்பங்களுக்காகவும்
ஏங்குகிறேன்!


நான்
விரும்பப்பட
மட்டுமல்ல
வெறுக்கப்படவும்
ஏங்குகிறேன்!


உன்
பிரிவுகள் கூட
எனக்கு
பிரியமனதுதான்!


என்
சோகங்கள் கூட
எனக்கு
சுகமானதுதான்!


உன்னை எனதாக்கி
என்னில்
உன் குறைகளுக்காய்
நான் ஏமாந்து போனால்
அதை என்னால்
தாங்கிக்கொள்ள
இயலும்!


என்னை உனதாக்கி
உன்னில்
என் குறைகளுக்காய்
நீ ஏமாந்து போனால்
அதை என்னால்
தாங்கிக்கொள்ள
இயலாது!


ஒவ்வொரு
கணத்திலும்
உன்னை
நினைத்து
கொண்டிருப்பதில்
பேரானந்தப்படுகிறேன்!


என்னில்
எப்போதுமே
நீ
நிறைந்திருக்க
வேண்டுமென
பேராசைப்படுகிறேன்!


உன்னை
மணக்க
முடியாததால்
நான்
உன்னை விடவும்
அதிகமாக
அல்லல்படுவேன்
என்பது உண்மை!


உன்னை
மறக்க
முடியாததால்
நான்
உன்னை விடவும்
அதிகமாக
சந்தோஷப்படுவேன்
என்பது சத்தியம்!


காதல் என்பது
வெறும்
ஊடல் மட்டும்
இல்லை!


காதல் என்பது
வெறும்
கூடல் மட்டும்
இல்லை!


இரு மனங்களின்
சேர்க்கையை
தடுத்துவிடும்
தைரியம்-எந்த
சக்திக்கும் இல்லை!


இரு மனைகளின்
சேர்க்கைக்கு
திருமணந்தான்
வேண்டும்-என்ற
அவசியமும் இல்லை!


நேசிப்பு என்பது
கட்டுப்பாடுகள்
அற்ற சுதந்திரத்தை
தருவது!


நேசிப்பு என்பது
உள்ளத்தின்
அடி ஆழத்திலிருந்து
எழுவது!


அது
இயற்கையானது!


அது
நிஜமானது!


அது
சத்தியமானது!


அது
உண்மையானது!


நாம்
என்பது
நிரந்தரமல்ல!
ஆனால்
நம்
நினைவுகள்
நிரந்தரமற்று
போவதுமல்ல!


உனக்கென்று
எப்போதும்
ஒரு
தனித்தன்மை
உண்டு!


என்னில்
பாதிப்பை
ஏற்படுத்தியது
நீ!


என்னில்
பதிவை
ஏற்படுத்தியது
நீ!


நீ
என் மீது
கோபம் கொள்வதில்
எனக்கு
கோபமில்லை!
ஆனால்
அதனால் நீ
காயப்பட்டு விடாதே!

நீ என் மீது
வெறுப்பை சிந்துவதில்
எனக்கு
விருப்பமில்லை!
ஏனெனில்
என்னில் நீ
எப்போதும் இருப்பதால்!


என்னால்
அன்புகள்
அசிங்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள
முடியாது!


என்னால்
உறவுகள்
கொச்சைப்படுவதை
தாங்கிக்கொள்ள
முடியாது!


உன்னை
பாதுகாக்கும்
பக்குவம்
எனக்கு
போதாதென்று
தோன்றுகிறது!


உன்
அதீத
அன்பே
எனக்கு
கவலையை
அளிக்கிறது!


உன்னுடைய
இடத்தை
நிறைவு செய்ய
யாராலும்
இயலாது!


உன்னுடைய
இடத்தை
உனக்கு வழங்கவே
என்னால்
இயலாது!


நாம்
மிக மிக
விரும்புகின்ற
ஒரு நபர்
நம்முடன்
இருப்பதைவிட
நலமாய் இருப்பதே
உண்மையான
அன்பு!


நாம்
மிக மிக
விரும்புகின்ற
ஒரு பொருள்
ஆண்டு
அனுபவிப்பதை விட
அடையாதிருப்பதே
சுகத்திலும்
சுகம்!


என்னைப்பற்றி
நீ
என்னவென்று
நினைக்கிறாயோ
எனக்கு
தெரியவில்லை!


என் நேசிப்பை
நீ
எந்தளவு
உணர்ந்தாயோ
எனக்கு
தெரியவில்லை!


உனக்குப்பிடித்த
இந்த உலகத்தில்
நானும் வாழ்கின்ற
சந்தோஷம்
மகிழ்ச்சியாக
இருக்கிறது!


உன்னை
நேசித்தது
நிஜம்!


உன்னை
நேசிப்பது
நிஜம்!


உன்னை
நேசிக்கப்போவதும்
நிஜம்!


அதில்
யாருடைய
குறுக்கீடும்
தடை செய்வதாய்
நான்
கருதவில்லை!


உருவம்
அருகில்
இருக்கும்போது
மட்டும் தோன்றுகின்ற
அன்பு
நிஜமானதல்ல!


நான்
சந்தோஷப்படுத்துகிற
நபர்
இல்லைதான்!
ஆனாலும்
சங்கடங்கள்
தராத நபர்!
என்னுள்ளே
சந்தோஷிக்கும்
நபர்!


இந்த
உலகம்
மிகப் பெரியது!


உண்மையான
அன்புகள்
காற்றில் கலந்தவை!


உண்மையான
நேசங்கள்
இயற்கையில் இணைந்தவை!


மீண்டும்மீண்டும்
பூத்து
சிரித்துகொண்டேதானிருக்கும்!


மனிதர்கள்
மரணிப்பார்கள்!
மரணங்கள்
மரணிப்பதில்லை!


அன்பர்கள்
அழிவார்கள்!
அன்புகள்
அழிவதில்லை!


கடைசியாக
ஒரே ஒரு
வேண்டுகோள்
மட்டும்!


என்னைப்பற்றிய
உன் நினைவுகளை
யாரிடமும்
சொல்லி விடாதே!


உயர்வாக இருந்தால்
உடைந்து போவேன்!
தாழ்வாக இருந்தால்
தாங்க மாட்டேன்!


நலமாக இரு!
முடிந்தால்
என் அன்பையும்
நினைவில் இருத்தி வை!


நமக்குள்
மீண்டும் ஒரு
சந்திப்பு நிகழாது-
என்ற நம்பிக்கையோடு
விடை பெற்றுக்கொள்வோம்!

4 கருத்துகள்:

sritech academy சொன்னது…

I Like It Very Much . Really Superb!

ரசிகன் சொன்னது…

:-(

Bharath Computers சொன்னது…

HA HA HA. What happened? anything wrong.

kavithai (kovaikkavi) சொன்னது…

இதை ஆர்வமாக வாசிக்க ஆரம்பித்தேன் பாதியில் விட்டு விட்டேன், களைப்பினால்.எனக்குப் புரியவில்லை சகோதரா! ஏன் இத்னை நீளம்?? இதை பிரித்தப் பிரித்து எழுpதியிருந்தால் சுவைத்து அனுபவித்திருக்கலாமோ என்று எண்ணம் தோன்றுகிறது. மற்றவை பின்னர் பார்ப்பேன்.
வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/