சனி, 18 ஆகஸ்ட், 2012

முக்கோணம்



ஆசையாக பென்சில் எடுத்து
ஒரு புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

அருகருகே அமையுமாறு
இரண்டு புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

நேர்க்கோட்டில் அமையுமாறு
மூன்று புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
வரவேயில்லை!முக்கோணம் வரவேயில்லை!

நேர்க்கோட்டில் அமையாமல்
மூன்று புள்ளி வைத்து நானும்
முக்கோணத்தை வரைந்து பார்த்தேன்
ஆகா!வந்துவிட்டது!முக்கோணம் வந்துவிட்டது!

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஹைக்கூ-4


ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஓ...இன்று சுதந்திர தினம்!

சனி, 11 ஆகஸ்ட், 2012

திசைப்பாடல்


கொக்கரக்கோ சேவல் ஒண்ணு
சத்தமாக கூவுதம்மா
சத்தமாக கூவியதால்
நித்திரையும் கலைந்ததம்மா!

கிழக்காலே சூரியனும்
காலையிலே தோணுதம்மா
காலையிலே தோணுகையில்
தாமரைப்பூ பூக்குதம்மா!

மேற்காலே சூரியனும்
மாலையிலே மறையுதம்மா
மாலையிலே மறைகையில்
அல்லிமலர் பூக்குதம்மா!

வடக்காலே இமயமும்
வானுயர நிக்குதம்மா
வானுயர நிக்குமது
இந்தியாவைக் காக்குதம்மா!

தெற்காலே குமரியில்
முக்கடலின் சங்கமமம்மா
முக்கடலின் சங்கமத்தில்
வள்ளுவரின் சிலையம்மா!

வெள்ளி, 27 ஜூலை, 2012

வடிவியல் உருவங்கள்




வண்ண நிலவோ வட்டம்
வட்டத்தை பாதியாக்கும்  விட்டம்!

வரைவேன் சதுரக் கட்டம்
வானத்தில் பறப்பது பட்டம்!

எழுதும் பலகை செவ்வகம்
எதிர் எதிர் பக்கங்கள் சமம்!

முக்கோணத்தின் கோணங்கள் மூன்று
அக்கோணங்களை  கூட்டினால் நூற்றுஎண்பது!

அடடா என்ன அருமையடா
வடிவியல் உருவங்கள் ஒவ்வொன்றும்!


ஞாயிறு, 15 ஜூலை, 2012

ஹைக்கூ-3






இப்படியா பெயர் வைப்பது?
கல்விராசர் என்று வைக்காமல்
கர்மவீரருக்கு காமராசர் என்று!