புதன், 2 அக்டோபர், 2013

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழை அரியணை ஏற்றிடுவோம்-அதன்
தொன்மையை நாளும் போற்றிடுவோம்!
மூச்சென தமிழ்ப்பணி ஆற்றிடுவோம்-அதை
முயற்சிக்க மறந்தால் தோற்றிடுவோம்!

ஆயிரமாயிரம் மொழிகள் இருப்பினும்
தமிழின் அழகுக்கு ஈடுஇல்லை!
அன்னைத் தமிழுக்கீடாய் எவரும் கொடுத்திட
உலகில் எதுவும் வேறுஇல்லை!

அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

சங்கங்கள் வளர்த்தவள் வாழியவே!
சிந்தையில் நிறைந்தவள் வாழியவே!
அன்புடை அகத்தாள் வாழியவே!
போருடை புறத்தாள் வாழியவே!
அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

காப்பியம் கொண்டவள் வாழியவே!
கணினியை கண்டவள் வாழியவே!
செம்மொழி ஆனவள் வாழியவே!
மின்மொழி ஆனவள் வாழியவே!                  
அவள் கால்கள் கடந்து போகும் பாதை
அது முடிவேயின்றி இன்னும் நீளட்டுமே!
இந்த மண்ணில் முத்தமிழ் என்றென்றுமே
நித்தம் நிலைபெற்று நம்மை ஆளட்டுமே!

(ஆனந்த யாழை மீட்டுகிறாய்-தங்க மீன்கள் பாடல் மெட்டு)