வெள்ளி, 12 ஏப்ரல், 2013

வெளிப்படுத்துதல்


குறிக்கோளை நோக்கிய எண்ணம்
கொண்டவருக்கே வெற்றிக் கிண்ணம்!
கட்டை விரல் உயர்த்து
அகிலமே வியக்கும் வண்ணம்!
நாம் தெளிவான மனநிலையும்
வலுவான சிந்தனையும்
கொண்டிருந்தால் ஜெயிப்பது திண்ணம்!

சாதனைக்கதைகள் சிலருக்கே தெரியும்!
கேட்டுப்பார்த்தால் உண்மை புரியும்!
உற்றுக் கேட்க கேட்க
லட்சியம் தணலாய் எரியும்!
நாம் வாயினை மூடிவைத்து
காதுகளைத் திறந்தால்தான்
நமது உலகம் இன்னும் விரியும்!

இவன் என்ன சொல்லுவது?
நாம் என்ன கேட்டுக் கொள்வது?
என்று நினைப்பது சிறுமை!
நினைப்பை மாற்றினால் அருமை!
நாம் குற்றம்குறை பாராமல்
நம்கருத்தை பகிர்ந்து கொண்டு
மீள்கருத்தை ஏற்றால் பெருமை!

உள்ளம் என்றால் லட்சியம் வேண்டும்!
லட்சியம்தானே நம்மைத் தூண்டும்!
லட்சிய உள்ளத்தினை
இன்னல்கள் எவ்வாறு தீண்டும்?
நாம் நினைத்ததை தொடங்கிடவும்
தொடங்கியதை முடித்திடவும்
லட்சியத்தில் உறுதி வேண்டும்!

இல்லாதோர் இன்னல் கண்டு
கண்களிலே கண்ணீர் வார்ப்போம்!
ஒன்றிணைந்து கைகள் கோர்ப்போம்!
நலிந்தோர்க்கெல்லாம் நன்மை சேர்ப்போம்!
நாம் தேவையான நேரத்தில்
தேவையான உதவி செய்து
இன்னலை தீர்க்கப் பார்ப்போம்!

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான வரிகள் பல... பாராட்டுக்கள்...

/// நாம் குற்றம்குறை பாராமல்
நம்கருத்தை பகிர்ந்து கொண்டு
மீள்கருத்தை ஏற்றால் பெருமை! ///

தொடர வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை...
இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்..