தமிழ்த்தாயை
அழைக்காத வாயில்லையே!
தமிழ்த்தாயை
அழைக்காது வாழ்வில்லையே!
இன்றும் என்றும்
தமிழ்ப்போல
பொன்றா புகழ்க்கொண்ட
வேற்று மொழி ஏது?
சங்கங்கள் வளர்த்தவள்
நீ சிந்தையிலே நிறைந்தவள் நீ
காப்பியனை ஈன்றவளும்
நீதானம்மா
அன்புடைய அகத்தாள்
நீ போருடைய புறத்தாள் நீ
உலகத்தின் பொதுமறையே
நீதானம்மா
காவியங்கள்
கொண்டவள் நீ கணினியையும் கண்டவள் நீ
தீதும் நன்றும்
உரைத்தவளே நீதானம்மா
செம்மொழியாய்
ஆனவள் நீ மின்மொழியாய் ஆனவள் நீ
உலகத்தின் முதல்
மொழியே நீதானம்மா
உன்னாலே வளர்ந்தோமே!
எழுத்தும் நீ
சொல்லும் நீ பொருளும் நீ யாப்பும் நீ
அணியோடு அழகாக
இருக்கின்றாய் நீ
மேகலை நீ சிலம்பும்
நீ வளையும் நீ குண்டலம் நீ
மணியோடு காப்பியமாய்
இருக்கின்றாய் நீ
அமுதாக இயலோடும்
இசையோடும் நாடகத்தை
இப்போதும் தந்தபடி
இருக்கின்றாய் நீ
அறத்துக்கும்
பொருளுக்கும் மகிழ்வுக்கும் அலங்காரம்
எப்போதும் செய்தபடி
இருக்கின்றாய் நீ
உன்னாலே சிறந்தோமே!
(அம்மா என்றழைக்காத
உயிரில்லையே என்ற பாடல் மெட்டு)