குறுஞ்செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுஞ்செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 மார்ச், 2013

குறுஞ்செய்திகள்-260

என்னவளே
அரசனின் ஆணவ ஒலியும்
அடிமையின் முனகல் ஒலியும்
ஒன்று போலவா கேட்கும்?

அடடா
அரசன் சொல்லும் ”ம்” க்கும்
அடிமை சொல்லும் “ம்” க்கும்
எத்தனை வித்தியாசம்?

குறுஞ்செய்திகள்-259

என்னவளே
நீ ஒரு குழந்தையைப் போல
மூச்சு விடாமல் பேசுவது
எத்தனை அழகு?

அடடா
சலிப்பூட்டும் படியான
அதே கதைகளை மீண்டும்
கேட்க வைக்கிறது காதல்!

புதன், 20 பிப்ரவரி, 2013

குறுஞ்செய்திகள்-258

என்னவளே
தாகத்துக்கு நீர்
என் சோகத்துக்கு நீ !
அடடா
நீர் இன்றி பயிர் வாடும்
நீ இன்றி உயிர் வாடும் !

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

குறுஞ்செய்திகள்-257


என்னவளே
முன்பெல்லாம்
என்னை எதிர்பார்த்து
ஓர் மூலையில் நீ நிற்பாய்!

அடடா
இப்போதெல்லாம்
உன்னை எதிர்பார்த்து
ஓர் மூலையில் நான் நிற்கிறேன்!

திங்கள், 11 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-256


என்னவளே
பிறமொழி தெரிந்தும்
பிள்ளைகளின் திறமை
வளராதது ஏன்? என்றேன்

அடடா
ஆறாவது அறிவுக்கு
இன்னொரு பெயர் உண்டு
அது தாய்மொழி! என்கிறாய்

செவ்வாய், 5 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-255


என்னவளே
காஞ்சிபுரம் திருவானைக்காவல்
திருக்காளத்தி சிதம்பரத்தைவிட
திருவண்ணாமலைக்கே முதலிடம்!

அடடா
ஏன் என்று கேட்டால்
தீதான் முதல் விஞ்ஞானம்
அண்ணாமலையானுக்கு அரோகரா!

திங்கள், 4 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-254


என்னவளே
பெருக்கல் வாய்ப்பாடும் வீட்டுப்பாடமும்
எவன்தான் கண்டுபிடித்தானோ?
புலம்புகிறாள் மூத்தமகள்

அடடா
அம்புலிமாமா பாலமித்ரா
மாயாவி ஜேம்ஸ்பாண்ட்தான்
நான்படித்ததாய் எனக்கு ஞாபகம்!

குறுஞ்செய்திகள்-253


என்னவளே
நட்பை விடவும் உயர்ந்த
ஏதேனுமொரு உறவு உள்ளதா?
என்று உன்னிடம் கேட்டேன்

அடடா
நட்பு என்பது இல்லாமல்
ஏதேனுமொரு உறவு உள்ளதா?
என்று திருப்பி கேட்கிறாய்

ஞாயிறு, 3 ஜூன், 2012

குறுஞ்செய்திகள்-252


என்னவளே
மலைமீது ஏறுகையில்
மஞ்சள் பூசி பொட்டு வைத்த
வேப்பமரத்தை கேலியாக பார்த்தேன்!

அடடா
மலையிலிருந்து இறங்குகையில்
மகிழ்வுந்து கவிழ்வதை தடுத்து
வேப்பமரம் கடவுளாகி சிரிக்கிறது!

வியாழன், 31 மே, 2012

குறுஞ்செய்திகள்-251


என்னவளே
மதுவும் மாதுவும்தான்
மனிதனைக் கெடுக்கும்
போதை என்று சொன்னேன்

அடடா
அவைகளை விடவும்
கொடுமையான போதை
புகழ் போதை! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-250


என்னவளே
முன்பெல்லாம் அமைதிதேடி
நகர நரகத்திலிருந்து தப்பித்து
கிராமம் நோக்கி செல்வேன்!

அடடா
இப்போது என்கிராமமும்
தன்முகம் தொலைத்துவிட்டு
நரகமாக அல்லவா மாறிவருகிறது! 

குறுஞ்செய்திகள்-249


என்னவளே
நீ நினைத்ததைப்போல
நான் இல்லாத ஏக்கத்தை
எப்படித்தான் தாங்குகிறாயோ?

அடடா
மீண்டும் நிகழமுடியா
இறந்தகாலம் வெளிப்படுகிறது
நீண்ட உன் பெருமூச்சினில்!

சனி, 26 மே, 2012

குறுஞ்செய்திகள்-248


என்னவளே
ஊர் போய் திரும்புகையில்
சொர்கத்தை பார்த்த மாதிரி
ஆனந்தம் ஏன்? என்கிறாய்

அடடா
தொடக்கக்கல்வி பயின்ற
பள்ளிக்கூடத்தை விட
சொர்க்கம் இருக்கிறதா என்ன?

வியாழன், 24 மே, 2012

குறுஞ்செய்திகள்-247


என்னவளே
பெருமழைக்காலம் தவிர்த்து
பெரும்பாலும் நீரில்லாமல்
வற்றியே கிடக்கிறது ஆறு!

அடடா
ஆற்றுத்திருவிழாவின் போது
அணையைத் திறந்தால்
அதுவே போதும் நமக்கு!

புதன், 23 மே, 2012

குறுஞ்செய்திகள்-246


என்னவளே
எப்போதும் கணினி
இடையிடையே தொலைக்காட்சி
பாவம் இளந்தலைமுறை!

அடடா
பஸ் ஆட்டம் மிஸ் ஆட்டம்
ஐஸ் ஆட்டம் கல் ஆட்டம்
எவ்வளவு இழந்துவிட்டார்கள்?

குறுஞ்செய்திகள்-245


என்னவளே
இனிமையானது எது?
கொடுமையானது எது?
விடைசொல் என்று கேட்டேன்

அடடா
இரண்டுக்கும் விடை தனிமை!
நாமே தேர்ந்தெடுத்த தனிமை!
பிறர் பரிசாக கொடுத்த தனிமை!

குறுஞ்செய்திகள்-244


என்னவளே
நடக்கையில் உரையாடுவது
இரு இடங்களுக்கு இடையே
இடைவெளியை பாதியாக்குகிறது!

அடடா
சண்டையில் உரையாடுவது
இரு மனங்களுக்கு இடையே
இடைவெளியை இரட்டிப்பாக்குகிறது!

குறுஞ்செய்திகள்-243


என்னவளே
பெற்றோர்க்கு பிள்ளைகளாக
இருக்கும் வரை அவர்களையே
நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

அடடா
நாம் பெற்றோரானதும்
நம் பெற்றோர்களை
மறந்து அல்லவா விடுகிறோம்?

செவ்வாய், 22 மே, 2012

குறுஞ்செய்திகள்-242


என்னவளே
நத்தை இறைச்சி தின்றால்
மூலம் சரியாகுமென்பது
உண்மையா? என்று கேட்டேன்

அடடா
எந்த இறைச்சியையும்
தின்னாமல் விட்டாலே
மூலம் சரியாகிவிடும்! என்கிறாய்

குறுஞ்செய்திகள்-241


என்னவளே
அடூர் கோபால கிருஷ்ணனை
திடீரென்று புரட்டிப்போட்டது
பதேர் பாஞ்சாலி திரைப்படம்!

அடடா
சும்மா இருந்த என்னை
இல்லறத்தில் இழுத்துப் போட்டது
தரகர் தந்த உன் புகைப்படம்!