கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

மனதாரா வாழ்த்துங்கள்

மனதாரா வாழ்த்துங்கள் இது இவரின் முதல் விருது ....இந்த ஆசிரியையின் பெயர் க.சங்கீதா .ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியையாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொய்யப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்!
கற்பித்தலில் புதுமை விரும்பியான இவர் ஆங்கில இலக்கணத்தை ஆர்வமூட்டும் வகையில் போரடிக்காமல் பாட்டு மூலமாகவே கற்பித்துவருகிறார்!
ஆங்கிலத்தில் PARTS OF SPEECH மற்றும் TENSE போன்றவற்றை சொந்த நடையில் பாடல் இயற்றி அவற்றின் மூலம் கற்பிப்பதோடு எல்லாத்தலைப்புகளுக்கும் முயற்சிப்பது இவரது சிறப்பு!
தன்னுடைய மாணவர்கள் மட்டுமல்லாது பிற மாணவர்களும் ஆசிரியர்களும் பயன் பெறும் வகையில் தன்னுடைய படைப்பாற்றல் திறனை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்!
2012ஆம் ஆண்டு டெட் TET (TEACHERS ELIGIBILITY TEST) மூலம் ஆசிரியப் பணிக்கு தேர்வாகி வந்த இவர், தான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்திற்காக தயாரித்து படித்த ஆடியோ மெட்டீரியல்களை இலவசமாக பிறரும் பயன்படுத்தும் வண்ணம் பிளாக்கர்(BLOGGER) எனப்படும் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டதால் பார்வையற்றோர் முதல் போட்டித் தேர்வுக்கு தயாராவோர் வரை இலவசப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பலன் அடைந்துள்ளனர்!
ஆங்கிலம் மட்டுமல்லாது மாணவர்கள் தமிழைத் தவறின்றி எழுதவும் உச்சரிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில் ப்ளாஷ் அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட எழுதிப்படிப்போம் வாங்க என்ற குறுந்தகட்டில் தமிழ் எழுத்துகளை அழகாக உச்சரிப்பு செய்து தம் பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளார்!
பள்ளி விழாக்களில் சினிமா மெட்டுகளில் சொந்த வரிகளைக் கொண்டு பாடல் எழுதி மாணவர்களைப் பாட வைப்பதோடு ஆர்வமுடன் அவர்களை கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைக்கின்றார்!
தொடக்கநிலை வகுப்புகளுக்கான அடிப்படைக்கணிதம் என்னும் வீடியோ வகுப்புகளுக்கு எண்கள்,கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல்,பின்னம்,அளவைகள் மற்றும் வடிவியல் ஆகிய எட்டுப் பாடங்களுக்கும் சிறப்பான அறிமுக உரையை வழங்கியதோடு மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்! இவரின் பின்னம் பாடல் நடிப்பு பலராலும் பாராட்டுப் பெற்ற ஒன்றாகும்!
கணக்கு செய்து கற்போம் வாங்க! என்னும் முகநூல் பக்கத்தில் உள்ள பெரும்பாலான வீடியோக்களுக்கு BACKGROUND VOICE கொடுத்து கணிதத்தை மாணவர்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்க உதவி வருகிறார்!
ப்ளாஷ் அனிமேஷன் முறையில் தயாரிக்கப்பட்ட வாய்ப்பாடு குறுந்தகடு 20x20 வாய்ப்பாட்டை எளிமையாக படிக்கத்தூண்டும் வகையில் இவரின் பின்னணிக்குரலில் இலவச பதிவிறக்க வசதியோடு வெளியிடப் பட்டுள்ளது!
கணினி பிரித்துப் பூட்டலாம் வாங்க! என்னும் முகநூல் பக்கத்தில் ஹார்டுவேர் அசம்பிளிங் செய்வது எப்படி என்ற வீடியோவும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது எப்படி என்ற வீடியோவும் இவராலேயே மிகப் பிரபலம் அடைந்தன!
டிசைன் பார் சேஞ்ச் என்ற போட்டிக்காக பள்ளியிலே மரக்கன்றுகளை பாதுகாப்பாக நட்டு வளர்த்ததும், பயன்படுத்திய ஏ4 தாள்களை மீள் சுழற்சி முறையில் பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்தியதும் பள்ளி அளவில் மாணவர்களால் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது!
இவ்வாசிரியரின் முயற்சிகளைப் பாராட்டி மேலும் அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாக கனிந்த இதயங்கள் அமைப்பின் சார்பில் திருமதி. Shyamala Krishnamoorthy அம்மா ஆசிர்வாத்த்துடன்.. இவ்விருது வழங்கப்படுகிறது!
மெல்லக்கற்போரை இலக்காக வைத்து அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுவரும் இவ்வாசிரியையை
ஆசிரியர் தினத்தில் நீங்களும் பாராட்டலாமே…(இந்த ஆசிரியையின் ஒரு சில வீடியோ இணைத்துள்ளேன்)
K.SANGEETHA M.A.M.Phil.(ENG), M.A.(ECO), B.Ed.,
B.T.ASSISTANT (ENG),
GOVERNMENT HIGH SCHOOL, POYYAPAKKAM,
VILLUPURAM DISTRICT – 605103

வியாழன், 21 நவம்பர், 2013

போட்டோஷாப்பின் ஒரு பயன்பாடு!

EMIS இல் மாணவர்களின் புகைப்படங்களை 200 க்கு 200 PIXEL மற்றும் 30KB அளவுக்கு மாற்றம் செய்ய அதிகம் நேரம் செலவாகிறது.
போட்டோஷாப் மென்பொருளில் இதை எளிமையாகச் செய்ய ஒரு வசதி இருக்கிறது.
முதலில் டெஸ்க்டாப்பில் EMIS, EMIS RESIZE என இரண்டு போல்டர்களை உருவாக்கிக் கொள்ளவும்.
EMIS எனும் போல்டரில் மாற்றம் செய்யப்பட வேண்டிய போட்டோக்களை வைத்துக் கொள்ளவும்.
போட்டோஷாப்பை ஓப்பன் செய்து அதில் உள்ள OPEN வழியாக EMIS போல்டரில் உள்ள ஏதேனும் ஒரு போட்டோவைத் திறக்கவும்.
பின்பு Windows மெனுவில் Actions என்பதை தேர்ந்தெடுக்கவும்.
கீழே ஐந்தாவதாக வரும் create new action என்பதை தேர்ந்தெடுக்கவும்.
உங்களுடைய New action க்கு RESIZE எனப் பெயர் கொடுக்கவும்.
பின்பு Record பட்டனை அழுத்தவும்.
பின்பு Image மெனுவில் Image size என்பதை தேர்ந்தெடுக்கவும்.
Constrain Proportions என்பதில் உள்ள டிக்கை எடுத்து விடவும்.
Width,Height,Resolution ஆகியவற்றை 200க்கு செட் செய்து கொள்ளவும்.
பின்பு Save As கொடுத்து EMIS RESIZE என்ற டெஸ்க்டாப் போல்டரில் அதை சேமிக்கவும்.பின்பு Stop playing /recording என்பதை கிளிக் செய்து உங்களுடைய action நிறுத்தவும்.
அவ்வளவுதான் 99 சதவீத வேலையை நீங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள்!
இனிமேல் File மெனுவில் Automate இல் Batch பட்டனை கிளிக் செய்து Action இல் RESIZE என்பதை செலக்ட் செய்து உங்களுக்கு தேவையான EMIS போல்டரை செலக்ட் செய்து ஓ.கே கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் உங்கள் அனைத்து படங்களும் EMIS RESIZE என்ற போல்டரில் தேவையான படிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்!
நன்றி: நண்பர் திரு அசதா அவர்களின் வழிகாட்டுதலுக்கு!

மேலதிக விவரங்களுக்கு என்னுடையhttps://www.facebook.com/kseenu.vasan என்ற முகநூல் முகவரியைப் பார்க்கவும்.
 (1

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

டெங்குவுக்கு மருந்து உண்டா?



டெங்குவுக்கு மருந்து உண்டா?
டெங்குவுக்கு என்று தனியாக மருந்து எதுவுமில்லை.ஆனால் அதைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
டெங்கு யாருக்கு வரும்?
டெங்கு உள்ள நபரைக் கடித்த கொசு நம்மை கடித்தால் டெங்கு நமக்கும் வரும்.
டெங்குவின் அறிகுறிகள் என்ன?
சாதாரண ஜுரத்துடன் தலைவலி, இடுப்பு வலி, உடல் அசதி குறைந்தது எட்டு நாட்களுக்கு இருக்கும்.பின்னர் தானாகவே ஜுரம் படிப்படியாக குறைந்து விடும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு உடலில் சிவப்பு நிற கொப்புளங்கள், கண்களில் கடுமையான வலி, பல் ஈறுகளில் இரத்த கசிவு,சிறுநீர் மற்றும் மலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
டெங்குவை எப்படி கண்டு பிடிப்பது?
இரத்த பரிசோதனை நிலையத்தில் NS1, IgG, IgM பரிசோதனை செய்து டெங்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.
டெங்குவை உறுதி செய்த பின் அடுத்து என்ன செய்வது?
அடுத்து செய்து கொள்ள வேண்டிய பரிசோதனை platelet count ஆகும். இது ஒருவருக்கு சாதரணமாக 1.5 இலட்சம் முதல் 4.5 இலட்சம் வரை இரத்தத்தில் இருக்க வேண்டும்.
platelet count இரத்தத்தில் குறைவாக இருந்தால் என்ன செய்வது?
1.5 இலட்சத்துக்கும் குறைவாக platelet இருந்தாலும் பயப்படத்தேவை இல்லை. போதுமான ஓய்வு,அதிக அளவு அடிக்கடி தண்ணீர், பழச்சாறு, இளநீர், நீர் ஆகாரங்கள், சத்தான உணவு, போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் platelet மீண்டும் அதிகரிக்கும்.
டெங்கு எப்போது சரியாகும்?
platelet count தினமும் இருவேளை கவனித்து வர வேண்டும்.40,000 க்கும் குறைவாக செல்லும் போது platelet தனியாக பிரித்து இரத்தத்தில் செலுத்தும் வசதியுள்ள மருத்துவமனையில் சேருவதைத்தவிர வேறு வழி இல்லை.வைரஸ் தாக்கம் இருக்கும் வரை எத்தனை முறை platelet தனியாக பிரித்து இரத்தத்தில் செலுத்தினாலும் platelet குறைந்து கொண்டேதான் இருக்கும்.ஆனால் நாம் தொடர்ந்து ஊட்டச்சத்தையும். Platelet யும் அளித்துக் கொண்டே இருந்தால் நோயின் தீவிரம் குறைந்து platelet count கூட ஆரம்பிக்கும்.பின் டெங்கு சரியாகும்.
பப்பாளிச்சாறு, மலை வேம்பு, நில வேம்பு பயன் தருமா?
நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு எதுவுமே தேவையில்லை. டெங்கு உறுதியான பின் தொடர்ந்து platelet count கண்காணிப்பது மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியும்.

வியாழன், 17 நவம்பர், 2011

மழலை உலகம் மகத்தானது!


குழந்தைகள் உலகில் பெரியவர்களுக்கு இடமில்லை!அதில் உள்நுழைவதற்கு இரண்டு நிபந்தனைகள்.ஒன்று நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்.அல்லது நீங்கள் குழந்தையைப் போல் மாற வேண்டும்.

குழந்தைகள் கல்வி உரிமை தினம்(11.11.2011),குழந்தைகள் தினம்(14.11.2011),குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் (16.11.2011), சர்வதேச குழந்தைகள் தினம்(20.11.2011) என்று பத்து நாட்களுக்குள்ளாகவே பல்வேறு தினங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே!
இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?
குழந்தைகளை கொண்டாடுங்கள் என்ற அவரது வரிகளை சாதாரணமாக புறம் தள்ளி விட முடியாது!

குழந்தைகளை புரிந்து கொள்வதும்,அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து வழிக்கு கொண்டு வருவதும் எல்லோராலும் முடியாது!
என் நண்பர் ஞானவேல் அவர்களின் மகன் மகேஸ்வரன் திடீரென்று வயிற்றை பிடித்துக்கொண்டு அய்யோ அம்மா வயிறு வலிக்கிறதே என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விழுந்து புரளுவான்.வீட்டில் இருந்து ஓய்வெடுத்துக்கொள் என்று சொன்னால் சரி என்று சொல்லிவிட்டு இவர் இந்த பக்கம் வந்த உடன் அவன் அந்த பக்கமாக எழுந்து விளையாடிக் கொண்டிருப்பான்.அவனுக்கு பள்ளிக்கு மட்டம் போட வேண்டும் எனும் போதெல்லாம் வயிற்று வலி வந்து விடும்!மருத்துவரிடம் போகலாம் என்றாலும் சளைக்காமல் வருவான்.இப்போது வரைக்கும் அவர் குழம்பிக்கொண்டே இருக்கிறார்.அவனுக்கு உண்மையில் வயிற்று வலியா?இல்லை சும்மா நடிக்கிறானா?என்பதை கண்டு பிடிக்கவே முடியவில்லை!

குழந்தை வளர்ப்பு என்பது எளிதான ஒன்றல்ல!குழந்தைகள் தானாகவே வளர்ந்து விடுவார்கள்.தானாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொள்வார்கள் என்று பெரும்பான்மையான பெற்றோர்கள் விட்டு விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுத்தர வேண்டியது பள்ளியின் வேலை.நமது வேலை இல்லை என்று பொறுப்பை தட்டி கழித்து ஆசிரியர்கள் மேல் போட்டு விடுகிறார்கள்.ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் காலையில் ஒரு மூன்று மணி நேரம் மாலையில் ஒரு இரண்டு மணி நேரம் என மொத்தம் ஐந்து மணி நேரம்தான் ஆசிரியரின் நேரடிப்பார்வையில் குழந்தைகள் இருக்கிறார்கள்.அதிலும் ஒரே ஆசிரியர் இருக்க வாய்ப்பில்லை.பாடவாரியாக ஆசிரியர் மாறிக்கொண்டே இருப்பார்.இப்படி இருக்க முழுப்பொறுப்பையும் ஆசிரியர்கள் மேல் திணிப்பது எந்த வகையில் நியாயம்?

பெற்றோர்கள் முன் உதாரணமாக இல்லாமல் குழந்தைகளை திருத்துவது என்பது மிக கடினமானதென்றே தோன்றுகிறது.என் மூன்று வயது மகள் திவ்யஸ்ரீயிடம்,மணி பத்தாகிறது காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும் போய் படு!என்று சொன்னால் நீயும் தானே சீக்கிரம் எழவேண்டும்.இந்த அப்பாவுக்கு வேற வேலையே இல்ல!எப்ப பாத்தாலும் கம்ப்யூட்டரையே நோண்டுவாரு!வந்து படுப்பா!என்கிறாள்.முன்பெல்லாம் என் மூத்த மகள் ஸ்ரீதேவி படுக்கையை ஈரம் பண்ணுவாள். அடித்தும்,திட்டியும் பலனில்லை!தினமும் நள்ளிரவில் எழுப்பி ஒருமுறை மெனக்கெட்டு போய்விட்டு வந்து படுக்கும்படி செய்தவுடன் இப்போதெல்லாம் அந்த பிரச்சனையே இல்லை!

குழந்தைகள் பொதுவாக நான்கு விஷயங்களை வெறுப்பதாக நான் கருதுகிறேன்.
1.நம் விருப்பங்களை அவர்கள் மேல் திணிப்பது
2.எப்போதும் அவர்களை குறை சொல்வது
3.மற்ற குழந்தைகளுடன் அவர்களை ஒப்பீடு செய்வது
4.மிகுந்த கண்டிப்புடன் அவர்களிடம் நடந்து கொள்வது

ஒரு கவிதை:
என்னவளே
வருங்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க
கல்வியை விடவும் சிறந்ததாக
வேறு ஏதேனும் இருக்கிறதா? என்றேன்

ஆமாம்
கல்வியை விடவும் சிறந்ததாக
கற்றுக்கொடுக்க வேறொன்று உள்ளது
அதன் பெயர் விழுமியங்கள்! என்றாய்!


குறிப்பு:
எனது நண்பர்  என்கிற விசு அவர்கள் ஒரு தொடர் பதிவை தொடரச்சொல்லி இருந்தார்.இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.
உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள்.மழலை உலகம் இன்னும் விரியட்டும்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

கரும் பலகை



     அந்த மாணவியின் பெயர் ஞாபகத்தில் இல்லை.வகுப்பு மூன்றாவது.அந்த பெண்ணின் அக்கா வேம்பரசி அப்போது எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்.அவர்களின் அப்பா கலியபெருமாள் ஆசிரியர்கள் மீது மரியாதை உள்ளவர்.அடிக்கடி பள்ளிக்கு வந்து பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள் என்பதை நலம் விசாரிப்பவர்.ஆண் பிள்ளைகள் இல்லாவிட்டாலும் கூட பெண் பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.ஊரில் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு படிவங்களை நிரப்ப அவர் உதவி செய்வதை நானே நேரில் பல முறை பார்த்திருக்கிறேன்.மிகவும் வறுமையான குடும்பம் எனினும் ஒரு போதும் வறுமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெற்றிலை பாக்கை குதப்பி கொண்டே காவிப்பற்கள் தெரிய சிரிக்கும் அவர் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது.
     சரி சரி விஷயத்துக்கு நேரா வா!என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.கொஞ்சம் பொறுங்கள்.எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை!அதான் இப்படி!(ஹி...ஹி...ஹி...)எல்லா வகுப்புகளுக்கும் சுவர் கரும்பலகைகள் இருந்தன.மூன்றாம் வகுப்பைத்தவிர! நான் தான் மூன்றாம் வகுப்புக்கு வகுப்பாசிரியர்.சுவர் கரும்பலகை இல்லாததால் மாற்று ஏற்பாடாக தலைமை ஆசிரியர் சட்டத்தில் நிறுத்தி வைக்கும் சாய்வு கரும்பலகையை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.சாய்வு கரும்பலகையும் நல்ல வசதியாகத்தான் இருந்தது அதை நிறுத்தி வைக்கும் சக்கை ஒழுங்காக இருந்தவரை!சக்கை உடைந்து போனதால் கரும்பலகையை சட்டத்தில் இருந்து அகற்றி விட்டு சுவரில் சாத்தி வைத்து எழுதிக்கொண்டிருந்தேன்.
     நான் கொஞ்சம் உயரம் என்பதால் குனிந்து குனிந்து எழுத வேண்டியதாக இருந்தது!பல நேரங்களில் முட்டி போட்டு எழுத வேண்டியதாக இருந்தது!
(எங்கள முட்டி போட சொல்ற இல்ல?நல்லா முட்டி போடு என்று மாணவர்கள் உள்ளுக்குள் சந்தோஷப் பட்டிருப்பார்களோ?)எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!இதிலே இன்னொரு கூத்தும் நடக்கும். நான் இந்த பக்கம் எழுதினால் அந்த பக்கம் இருப்பவர்கள் மறைக்கிறது என்றும் அந்த பக்கம் எழுதினால் இந்த பக்கம் இருப்பவர்கள் மறைக்கிறது என்றும் மாறி மாறி புகார் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! தீராத தலைவலியாக இருந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
     திடீரென்றுதான் அந்த யோசனை எனக்கு பளிச்சிட்டது! நாமே ஏன் சட்டத்தை சரி செய்து கரும்பலகையை தூக்கி உயர வைத்து எழுதக்கூடாது?என்ற எண்ணம் வ்ந்த உடன் என்னையே ஒரு முறை பாராட்டிக்கொண்டு மளமளவென்று செயலில் இறங்க ஆரம்பித்தேன்! ஒரு ஓரமாய் சாத்தி வைத்திருந்த சட்டத்தை கொண்டு வந்து சுவரில் சாத்தி வைத்துவிட்டு டேய்! ஓடிப்போய் ரெண்டு குச்சி ஒடைச்சிக்கிட்டு வாங்கடா என்று கட்டளை இட்டேன்!குச்சிகள் வந்தவுடன் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு குச்சியை சொருகி,மாணவர்கள் உதவியுடன் கரும் பலகையை தூக்கி உயரே வைத்தேன்!முன் வரிசையில் முதல் ஆளாக வேம்பரசியின் தங்கை அமர்ந்திருந்தாள்.ஒரு வழியாக கரும்பலகை எல்லோர் பார்வைக்கும் தெரிந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியாக கைகளை தட்டி ஆரவாரம் செய்தார்கள்!
     கரும்பலகையில் ஒரு வார்த்தை கூட எழுதியிருக்க மாட்டேன்!அதற்குள் அந்த விபரீதம் நடந்தது!கரும் பலகை வழுக்கி அந்த மாணவியின் காலில் விழுந்தது!(படு பாவிப்பசங்க ஓணாங்குச்சியையா ஒடைச்சி கிட்டு வந்து தருவானுங்க!)நிலமையை உணர்ந்து அவளை தூக்க ஒரே ரத்தம்!பெருவிரலை எவ்வளவு அழுத்தி பிடித்தும் ரத்தம் நிற்கவே இல்லை!(காயம் மோதிர விரலில்)குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டே வ்ந்து என்னை திட்டுவதற்காக வாயெடுத்த அவளின் அம்மா ரத்தத்தை பார்த்து தொபக்கடீரென்று மயக்கம் போட அவரை எழுப்புவதே பெரும் பாடாய் ஆகிவிட்டது!(பயபுள்ளைங்க அதுக்குள்ள வீட்டுக்கு தகவல் குடுத்துடுச்சே!)
     அந்த மாணவியின் அப்பா ரொம்ப நல்லவரானதால்(மிகச்சரியாக நகரப்பேருந்திலிருந்து அப்போதுதான் இறங்கி பள்ளிக்கு வந்தார்)
பிரச்சனை பெரிதாகவில்லை!விழுப்புரம் அழைத்து சென்று கட்டு கட்டி எக்ஸ்ரே எடுத்து பார்த்து(என் செலவில் தான்)அவளின் கால் சரியானது!
அன்றுதான் கற்றுக்கொண்டேன் எதையும் முன் ஜாக்கிரதையோடு செய்ய வேண்டும்!


சனி, 20 ஆகஸ்ட், 2011

ஆட்டுக்குட்டி



               நான்காம் வகுப்பு தமிழ் புத்தகம் என்பதாய் ஞாபகம்.அனேகமாக அது கடைசிப்பாடமாக இருக்கலாம்.பாடத்தின் பெயர் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது.வெற்றுத்திண்ணை...
                         அந்த கதையில் வள்ளி என்று ஒரு கதா பாத்திரம்.கதை என்ன வென்றால் வள்ளியின் அப்பா ஒரு குடிகாரர்.(குடிகாரன் என்று சொன்னால் குடிமகன்கள் யாரவது கோபித்து கொள்ள போகிறார்களோ என்ற பயம் தான்...)வீட்டிலிருக்கும் அண்டா குண்டா சட்டி பானை எல்லாவற்றையும் வைத்து தினந்தோறும் குடிப்பதுதான் வேலை.

                                     இது இப்படி இருக்க வள்ளி ஒரு ஆட்டுக்குட்டி வளர்த்து வந்தாள்.தினந்தோறும் ஆட்டுக்குட்டியோடு கொஞ்சி விளையாடுவதுதான் வேலை.பள்ளி விட்டு வந்ததும் முதல் வேலையாக ஆட்டுக்குட்டிக்கு தேவையான தீனி போடுவாள்.விடுமுறை நாட்களை ஆட்டுக்குட்டியோடுதான் கழிப்பாள்.திடீரென்று ஒரு நாள் வள்ளியின் அப்பா அவளை சந்தைக்கு அழைத்துக்கொண்டு போகிறார்.கூடவே ஆட்டுக்குட்டியையும் கூட்டிக்கொண்டு போகிறார்கள்.குடிப்பதற்கு பணம் இல்லாததால் திருவாளர் குடிமகன் அவர்கள் ஆட்டுக்குட்டியை சந்தையில் விற்றுவிட வெறுங்கையோடு வீடு திரும்புகிறார்கள்.மறுநாள் வள்ளி பள்ளிக்கு கிளம்பும் போது திண்ணையை பார்க்கிறாள்.ஆட்டுக்குட்டி இருந்த திண்ணை வெற்றுத்திண்ணையாக காட்சி அளிக்கிறது.

              இந்த பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு ஆட்டுக்குட்டி போக எனது ஆர்வக்கோளாறு காரணமாக ஆட்டுக்குட்டியை தூக்கி வந்து மேசை மேல் வைத்து கட்டிபிடித்து கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சி விட்டேன்.வள்ளியின் அப்பா மாதிரி இருக்க கூடாது.வள்ளி போல ஆட்டுக்குட்டி மற்றும் வளர்ப்பு பிராணிகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று ஆழமான உபதேசம் வேறு!அத்தோடு விட்டேனா?பிள்ளைகளே வாருங்கள் ஒவ்வொருவராக வந்து ஆட்டுக்குட்டியை தொட்டு தடவிப்பாருங்கள் என்று வரிசையில் நிற்க வைக்க மாணவர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்!எனக்கு மன நிறைவோடும்,மாணவர்களுக்கு மகிழ்சியோடும் அந்த பாடவேளை இனிதே முடிந்தது!

                  சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பள்ளிக்கு போனால் தலைமை ஆசிரியர் அறைக்கு முன்னால் ஒரு குடிமகன் ஏகவசனத்தில் என்னை அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.எவண்டா அவன் விழுப்புரம் வாத்தி?வெளிய வாடா!என்று.சாதரணமாகவே எனக்கு கை கால் உதறும்.தண்ணி போட்டு விட்டு என்னை கூப்பிடுகிறானே?சண்டாளப்பாவி!எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்கிறதோ என்று புலம்பிக்கொண்டே தலைமை ஆசிரியரிடம் வழக்கம் போல் தஞ்சம் புகுந்தேன்!

                                பையூரிலிருந்து சேத்தூருக்கு போகும் வழி கரடு முரடாகவே இருக்கும்.ஏரிக்கரை மீது போகும் ஒற்றையடி பாதை வழியாகவே சென்றாக வேண்டும்!பாதையெங்கும் கற்களும்,முட்களுமாகவே நிறைந்திருக்கும்.வழியில் ஒரு சிறு பாலமும் உண்டு.விடுமுறை தினங்களில் விளையாடுவதற்காக போன பள்ளி பிள்ளைகள் ஆடு மாடு மேய்வதை பார்த்திருக்கிறார்கள்.உடனே நான் சொன்னது தானா நினைவுக்கு வர வேண்டும்?அதற்கேற்ற மாதிரி ஆடு ஒன்று குட்டிகள் போட்டிருக்க,வாங்கடா ஆட்டு குட்டியை கொஞ்சலாம் என்று ஆட்டுக்குட்டிகளை துரத்தியிருக்கிறார்கள்.

                 மிரண்டு போய் ஓடிய ஆட்டு குட்டிகளில் ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டிருக்கிறது! மற்ற குட்டிகள் கல்லிலும் முள்ளிலும் மாட்டி காயப்பட்டிருக்கிறது!பயந்து போன மாணவர்கள்  சத்தங்காட்டாமல் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்கள்!இது எப்படியோ சம்மந்தப்பட்ட ஆட்டுக்குட்டி உரிமையாளருக்கு தெரிந்து போக,வாத்தியார்தான் ஆட்டுக்குட்டியை பிடித்து கொஞ்ச சொன்னார் என்று என்னை கை காட்டி விட்டார்கள் பிள்ளைகள்! 

                                        இறந்து போன ஆட்டுக்குட்டிக்கும் காயம் பட்ட ஆட்டு குட்டிகளுக்கும் நட்டஈடாக தண்டம் அழுதபின் ஒரு வழியாக பிரச்சனை முடிவுக்கு வந்தது!அன்றுதான் கற்றுக்கொண்டேன்.சொல்வதை மிகைப்படுத்தி சொல்லக்கூடாது.


செவ்வாய், 12 ஜூலை, 2011

அ போடு...



    ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பதாம் வருஷம் முகையூர் ஒன்றியம் பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த சமயம்.தலைமை ஆசிரியர் கலியபெருமாள் என்னை முதல் வகுப்பு ஆசிரியை மரிய செல்வம் மருத்துவவிடுப்பில் சென்று விட்டதால் என்னை வகுப்பெடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

                                  நானும் மிக ஆர்வமாக வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆவலாக இருந்தேன்.முதல் வகுப்பு மாணவர்கள் மற்ற வகுப்பு மாணவர்களைப் போல் இல்லை.அவர்கள் இப்போதுதான் பள்ளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.பள்ளி சூழ்நிலை இன்னும் பழகவில்லை.பார்த்து நடந்து கொள்ளென்று தலைமை ஆசிரியர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

                               மற்ற ஊர்களில் பால்வாடி,அங்கன்வாடி மையங்கள் தனியாக இருக்கும். பள்ளிக்கு வருவதற்கு முன்னரே எளிய பாடல்களை தெரிந்து கொண்டும் எழுத்துக்களை கற்றுக்கொண்டும் மாணவர்கள் வருவார்கள்.ஆனால் பையூரில் அதற்கு வழி இல்லை.முதல் வகுப்பிலிருந்துதான் அவர்களுக்கு பள்ளி அனுபவம் தொடங்கும்படி இருந்தது.

                       முதல்வகுப்புக்கு பாடம் நடத்துவது எனக்கு பெரும் சவாலாகவே இருந்தது. பாதி பிள்ளைகள் என்னைக்கண்டாலே பயந்து அழ ஆரம்பித்தன. அவர்களுடன் சுமூகமாக ஒன்றுவதற்கே பெரும் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது.ஒரு வழியாக மிட்டாய் கொடுத்து என் வயப்படுத்தி வைத்திருந்தேன்.பிள்ளைகளுக்கு “அபோட சொல்லிக்கொடுத்தேன்.

                  விழுப்புரத்திலிருந்து பையூருக்கு போவதென்றால் திருவெண்ணெய் நல்லூர் வழியாக திருக்கோவிலூருக்கு போகும் பேருந்தில் சென்று தொட்டிக்குடிசை அல்லது மண்டபம் நிறுத்தத்தில் இறங்கி ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும்.

                           பேருந்து சக்கரம் பழுதாகி விட்டதால் அன்று தாமதமாக பள்ளி செல்ல வேண்டிய சூழ்நிலை.மூச்சு வாங்க ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு சென்றேன்.பள்ளி வாசல் முன் கூட்டமாக இருந்தது.எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.ஒட்டு மொத்த கூட்டமும் எனக்காகத்தான் காத்திருக்கிறது என்பதை அறிந்தவுடன் இதயத்துடிப்பு இன்னும் பல மடங்காக கூடி விட்டது.நாம் என்ன தவறு செய்தோம்?ஏன் ஒரு விசாரணைக் கைதியைப் போல நம்மை எல்லோரும் பார்க்கிறார்கள்?என்று ஒரே குழப்பமாக இருந்தது.

         தலைமைஆசிரியர் அறைக்கு தயங்கியவாறு உள்ளே சென்றேன்.அங்கே கூடி இருந்தவர்கள் அத்தனை பேரும் ஒன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள்.இவர்தான் அப்படி சொன்னாராம்.இவர்தான் அப்படி சொன்னாராம் என்று குசு குசு வென பேசிக்கொண்டார்கள்.எனக்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை.தலைமை ஆசிரியரை மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தேன்.

                 தலைமைஆசிரியர் மிகவும் திறமையானவர்.எந்த பிரச்சனையையும் நாசூக்காக கையாளக்கூடியவர்.முகம் எப்போதும் சிரித்தபடிதான் இருக்கும்.புன்முறுவலோடு என்னைப்பார்த்து கேட்டார்.ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுத்தாய்?
போட சொல்லிக்கொடுத்தேன் என்று சொன்னேன்.அதுதான் எப்படி சொல்லிக்கொடுத்தாய்?என்று கேட்டார்.

பல்பத்தை வைத்து எல்லோரும் போடுங்கள்,போடுங்கள் என்று நான் சொன்னதை பிள்ளைகள் வாத்தியார் பல்பத்தை வாயில் போட சொல்கிறார் என்று நினைத்து வாயில் போட்டு தின்றிருக்கிறார்கள்.இதை நான் கவனிக்க வில்லை.நாளைக்கு எல்லோரும் கண்டிப்பாக “அபோட்டுக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

                 பல்பம் தின்ற பிள்ளைகள் பல்பம் தின்னாத மற்ற பிள்ளைகளையும் வாத்தியார் பல்பத்தை “அபோடாவிட்டால் அடித்து விடுவார் என்று பயமுறுத்தியதால் வீட்டுக்கு போய் ஆளுக்கு ஒரு பல்பம் பாக்கெட்டை “அபோட்டிருக்கிறார்கள்.பல்பத்தை “அபோடச்சொன்ன வாத்தியார் யார் என்று தேடிக்கொண்டு பெற்றோர்கள் பள்ளிக்கே வந்து விட்டார்கள்.

                      எனக்கு அழுவதா?சிரிப்பதா?என்றே தெரியவில்லை.ஒட்டு மொத்த வகுப்புக்கும் ஆளுக்கு ஒரு பல்பம் பாக்கெட் வாங்கித்தந்த பின்னரே பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.அன்றுதான் நான் கற்றுக்கொண்டேன்.சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும்.