வெள்ளி, 12 ஏப்ரல், 2013

வெளிப்படுத்துதல்


குறிக்கோளை நோக்கிய எண்ணம்
கொண்டவருக்கே வெற்றிக் கிண்ணம்!
கட்டை விரல் உயர்த்து
அகிலமே வியக்கும் வண்ணம்!
நாம் தெளிவான மனநிலையும்
வலுவான சிந்தனையும்
கொண்டிருந்தால் ஜெயிப்பது திண்ணம்!

சாதனைக்கதைகள் சிலருக்கே தெரியும்!
கேட்டுப்பார்த்தால் உண்மை புரியும்!
உற்றுக் கேட்க கேட்க
லட்சியம் தணலாய் எரியும்!
நாம் வாயினை மூடிவைத்து
காதுகளைத் திறந்தால்தான்
நமது உலகம் இன்னும் விரியும்!

இவன் என்ன சொல்லுவது?
நாம் என்ன கேட்டுக் கொள்வது?
என்று நினைப்பது சிறுமை!
நினைப்பை மாற்றினால் அருமை!
நாம் குற்றம்குறை பாராமல்
நம்கருத்தை பகிர்ந்து கொண்டு
மீள்கருத்தை ஏற்றால் பெருமை!

உள்ளம் என்றால் லட்சியம் வேண்டும்!
லட்சியம்தானே நம்மைத் தூண்டும்!
லட்சிய உள்ளத்தினை
இன்னல்கள் எவ்வாறு தீண்டும்?
நாம் நினைத்ததை தொடங்கிடவும்
தொடங்கியதை முடித்திடவும்
லட்சியத்தில் உறுதி வேண்டும்!

இல்லாதோர் இன்னல் கண்டு
கண்களிலே கண்ணீர் வார்ப்போம்!
ஒன்றிணைந்து கைகள் கோர்ப்போம்!
நலிந்தோர்க்கெல்லாம் நன்மை சேர்ப்போம்!
நாம் தேவையான நேரத்தில்
தேவையான உதவி செய்து
இன்னலை தீர்க்கப் பார்ப்போம்!

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

குழுப்பணியாற்றுதல்

முன்னேற்றப் பாதையிலே
எல்லோருமே செல்லலாமே!
முன்னின்று பணியாற்ற
முன்னேற்றம் தானாய் வரும்!
நாம் செயலை செய்யும் முன்பு
திட்டம் தீட்டினால்தான்
முன்னேற்றம் உறுதியாகும்!

மாற்றாரின் கருத்துக்கும்
மதிப்பளிக்க வேண்டாமா?
நண்பர் பகைவரென்று
பாகுபாடு பார்க்கலாமா?
நாம் எதிராளி வீட்டுமரத்து
இலந்தைக்கும் ருசி உண்டு!
என்பதை உணர வேண்டும்!

கடலளவு சொல்லை விடவும்
கடுகளவு செயலே போதும்!
தயக்கம் உடன் இருந்தால்
தொடங்காற்றல் வந்திடுமா?
நாம் பூனைக்கு மணிகட்ட
முயற்சித்த எலிகள் போல்
தயங்கி நிற்கக் கூடாது!

குடிநீர்க்குழாய் சொட்டுமாறு
அரைகுறையாய் மூடலாமா?
ஆளில்லா அறையினிலே
மின்விசிறி ஓடலாமா?
நாம் சின்னச்சின்ன செயல்களிலே
பொறுப்போடு நடந்து கொண்டு
முன்மாதிரியாக இருப்போம்!

விமர்சனங்கள் அடுத்தவர் உரிமை
விளக்கமளிப்பது நம்மோட கடமை!
பூக்கள் மட்டும் இன்றி
கற்களும் மேலே விழும்!
நாம் பூக்கள் கண்டு மயங்காமல்
கற்கள் கண்டு கலங்காமல்
முன்னேறி நடந்தால் வெற்றி!

திங்கள், 1 ஏப்ரல், 2013

பகுத்தறிதல்


நம்திறமை நாமறிந்தால்
நினைத்தவாறு வெற்றி கிட்டும்!
திறமையை வெளிப்படுத்த
குறிக்கோள் வேண்டுமன்றோ?
நாம் குறிக்கோளை அடைவதற்கு
சரியான அணுகு முறையை
தேர்ந்து எடுக்க வேண்டும்!

அண்டப்புளுகு புளுகுவோரை
அப்படியே நம்பலாமா?
ஏன்? எப்படி?எதற்கு?என்று
கேள்விகள் கேட்டிட வேண்டாமா?
நாம் தென்னையிலே தேள்கொட்ட
பனையிலா நெறி கட்டும்?
பகுத்தறிந்து பார்க்க வேண்டும்! 

இயற்கையின் மேல் குறையில்லை!
இயைந்து வாழ்ந்தால் குற்றமில்லை!
வற்றும் வளங்கள் தீர்ந்தால்
வருங் காலம் என்னாவது?
நாம் இக்கட்டான சூழ்நிலையை
எதிர் கொள்ளும் நடவடிக்கை
இப்போதே எடுக்க வேண்டும்!

உண்ணும் உணவே மருந்தாகும்!
உணர்ந்தாலே உடல் நலமாகும்!
உணவு பழக்கத்திலே
கட்டுப்பாடு வேண்டாமா?
நாம் சைவம் என்றாலும்
அசைவம் என்றாலும்
அளவாக உண்ண வேண்டும்!

முட்டாள் சொல்வான் முடியாது!
முயற்சிக்காமல் விடிவேது?
தொடர்ந்து முயற்சிப்பதை
தோல்வி என்றா சொல்லுவது?
நாம் மந்திரத்தில் மாங்காய்கள்
ஒருபோதும் விழாதென்று
உணர்ந்து உழைக்க வேண்டும்!