ஞாயிறு, 30 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-200

என்னவளே
என்று ஆரம்பித்து
தத்து பித்து என்று
என்னென்னவோ உளறினேன்!

அடடா
என் முதல் வரி
ஒரு கவிதை என்பதால்
இன்னும் ஓடுகிறது வண்டி!

சனி, 29 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-199

என்னவளே
காதலில் தோற்றால்
பிறருக்கு தெரியும்படி
ஆண்கள் தாடி வைக்கிறார்கள்!

அடடா
காதலில் தோற்றால்
பிறருக்கு தெரியாதபடி
பெண்கள் மூடி வைக்கிறார்கள்!

வெள்ளி, 28 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-198

என்னவளே
சென்றமுறை சுழித்தோடும் நீர்ப்பெருக்கில்
பாதத்தின் அடியில் மணல் நழுவ
கைகோர்த்து நடந்தோம்!

அடடா
இம்முறை சுடுமணலின் நீள்வெளியில் 
அடுத்தமுறை  ஆற்றுத்திருவிழாவிற்கு
மணலாவது மிஞ்சுமா?

குறுஞ்செய்திகள்-197

என்னவளே
நீ விசுக் விசுக்கென்று
கைவீசி நடப்பது
அழகென்றுதானே சொன்னேன்!

அடடா
நீ பொசுக் பொசுக்கென்று
இதற்கும் கூட
கோபப்பட்டால் எப்படி?

வியாழன், 27 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-196

என்னவளே
எத்தனையோ தடவை
பார்வைகள் பரிமாறியதெல்லாம்
மறந்து போய் விட்டது!

அடடா
நீ என்னை பார்க்காமல்
கடந்து போன ஒரு தடவை
இன்னும் நினைவில் இருக்கிறது!

குறுஞ்செய்திகள்-195

என்னவளே
உலகத்தின் வெளிச்சத்தை
வீட்டுக்குள் கொண்டுவருகிறது
ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சம்!

அடடா
இருட்டிலும் கூட உலகத்தை
மிகப்பிரகாசமாக்குகின்றன
மெழுகுவர்த்தியும் புத்தகங்களும்!

புதன், 26 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-194

என்னவளே
அத்திக்காய் இத்திக்காய்
எத்திக்காய் இருப்பினும்
மாதுளம் காய் என்றேன்

அடடா
தனக்காய் வாழாது
பாவைக்காய் வாழக்காய்
மாதுளம் கனியாகும் என்கிறாய்!

செவ்வாய், 25 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-193

என்னவளே
தீபாவளி கொண்டாட
தித்திப்பு புத்தாடை
இவை இருந்தால் போதாதா?

தித்திப்பை பகிர்ந்து
புத்தாடை உடுத்தி
தீ விபத்தில்லா தீபாவளி
கோலாகலமாக கொண்டாடுவோம்!

குறுஞ்செய்திகள்-192

என்னவளே
கழிவை அகற்று
குப்பைகள் சேர்ப்பதால்
பயன் ஒன்றும் இல்லை!

எவ்வாறேனும்
ஒவ்வொன்றையும்
செய்துதானாக வேண்டும்
எரிக்கவோ புதைக்கவோ!

திங்கள், 24 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-191

என்னவளே
எல்லா உபாதைகளுக்கும்
என்னையே வைத்தியம் கேட்டு
தொல்லை பண்ணுகிறாய்!

அடடா
மருத்துவர் அறை
அமைதி காக்கவும் என்பதை
தவறாக புரிந்து கொண்டாயோ?

குறுஞ்செய்திகள்-190

என்னவளே
மொட்டை போட்டால்
அழகிய குல்லாய் என்று
ஆசை காட்டினாய்!

போட்ட பின்
திருநெல்வேலிக்கே அல்வா
திருப்பதிக்கே லட்டு மாதிரி
குல்லாவுக்கே குல்லா என்கிறாய்!

குறுஞ்செய்திகள்-189

என்னவளே
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வேண்டவே வேண்டாம்!

ஆமாம்
முடிந்த வரை
பயன் படுத்துவோம்
அதே பழைய நெகிழியை!

குறுஞ்செய்திகள்-188

என்னவளே 
ஊர்தோறும்
நாறிக்கொண்டிருக்கின்றன
பேருந்து நிலைய கழிப்பறைகள்!

அடடா 
அரசாங்கம் பராமரிக்க 
இதைவிட முக்கியமானவைகள் ஏராளம் 
வேண்டுமானால் மூக்கை மூடிக்கொள்!

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-187

என்னவளே
எல்லோரையும் காப்பாற்றும்
கடவுளர்கள் தானே
கோவிலுக்கு உள்ளே இருக்கிறார்கள்?

அடடா
யார் இப்படி
பெரிதாக எழுதிவைத்தது?
திருடர்கள் ஜாக்கிரதை! என்று

குறுஞ்செய்திகள்-186

என்னவளே
எல்லா ஆயுதங்களையும்
பயன் படுத்த தெரிந்தவனே
மிகப்பெரிய வீரன் என்று சொன்னேன்

நீயோ
ஆயுதங்களின் தீமையறிந்து
அதை பயன்படுத்த தெரிந்தும்
தொடாதவனே மாவீரன் என்கிறாய்!

சனி, 22 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-185

என்னவளே
மரம் ஒரு உயிர்
மனிதன் ஒரு உயிர்
பிறருக்காக உயிரை கொடுப்பது பெருமை!

மரம் சிலுவை செய்ய
உயிர் கொடுத்தது
சிலுவையில் உயிர் கொடுத்த
மனிதன் மட்டும் தேவன் ஆனார்!

வியாழன், 20 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-184

என்னவளே
நான் இருக்கும் வரை
காதல் உனக்கு ஒருபோதும்
புரியப் போவதில்லை!

ஆமாம்
நான் என்பதை தூக்கி
தூரமாக எறி
காதலை உணர்!

குறுஞ்செய்திகள்-183

என்னவளே
கூரைக்கு மேலே சேவல்
வலக்கை பக்கம் தெற்கு
இடக்கை பக்கம் வடக்கு

கிழக்கு பக்கம் வாசல்
கோழி இடும் முட்டை
எந்த பக்கம் விழுமென்று
இப்படியா கடிப்பாய்?

குறுஞ்செய்திகள்-182

என்னவளே
முரண்பாடுகளின் மூட்டைக்கு
அழகான பெயர் பெண் என்று
கேலி செய்தேன்

அடிப்பாவி
தவறுகளின் தொகுப்புக்கு
பொருத்தமான பெயர் ஆண் என்று
காலை வாருகிறாய்!

குறுஞ்செய்திகள்-181

என்னவளே
அப்பாவாகும் தகுதி மட்டுமே
ஒரு ஆண்மகனுக்கு
அடையாளம் ஆகுமா? என்றாய்

உண்மைதான்
இத்தனை குறைகளோடு
என்னை சகித்துக்கொள்ள
எத்தனை பெரிய மனம் உனக்கு?

செவ்வாய், 18 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-180

என்னவளே
வருங்கால சந்ததிக்கு கற்றுக்கொடுக்க
கல்வியை விடவும் சிறந்ததாக
வேறு ஏதேனும் இருக்கிறதா? என்றேன்

ஆமாம்
கல்வியை விடவும் சிறந்ததாக
கற்றுக்கொடுக்க வேறொன்று உள்ளது
அதன் பெயர் விழுமியங்கள்! என்றாய்

சனி, 15 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-179

என்னவளே
நான் ஏன் ரத்ததானம்
செய்ய வேண்டும்? என்று
கேள்வி கேட்டேன்.

நீ ஏன் ரத்ததானம்
செய்யக் கூடாது? என்ற
கேள்வியையே பதிலாக்கி
யோசிக்க வைத்து விட்டாய்!

குறுஞ்செய்திகள்-178

என்னவளே
நான் பாதிஆம்பள
என்பது பெண்ணுக்கு பெருமை!
ஆனால் ஆணுக்கு?

எது எப்படியோ
முல்லாக்கதையில்
கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள்
என்றகதை தெரியும்தானே?

குறுஞ்செய்திகள்-177

என்னவளே
மல ஜலம் கழிக்க
பார்க்க கேட்க நுகர
ஜோடிகளை படைத்தான் இறைவன்!

நல்ல வேளை
வாயை விட்டுவிட்டு
பிறவற்றை மட்டும்
ஒரு ஜோடி படைத்தான்!

வெள்ளி, 14 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-176

என்னவளே
தூறலை அனுபவிக்காமல்
கதவடைத்து தூங்கியதற்காய்
வருத்தப்பட்டு நின்றேன்!

அடடா
குறுமரத்தை குலுக்கி
திடீர்மழை அனுபவம் தந்து
திகைக்க வைத்து விட்டாய்!

வியாழன், 13 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-175

என்னவளே
நான் ஏன் நெகிழியை
பயன் படுத்துகிறேன் என்பதற்கு
ஆயிரம் காரணங்களை அடுக்கினேன்!

உண்மையிலேயே
நெகிழியை பயன்படுத்தாமல் இருக்க
ஒரு காரணம் கூட கிடைக்கவில்லையா?
எனக்கேட்டு நெகிழ வைத்துவிட்டாய்!

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-174

என்னவளே
கொள்ளி வைத்தால் பிணம் எரியும்
ஆனால் கொள்ளி வைப்பவரையே
எரிக்கும் பிணம் எது என்றாய்?

அடடா
வெள்ளை ஆடை போர்த்தி
கொள்ளி நமக்கு வைக்க தயாராய்
காத்திருக்கிறது சிகரெட் பிணம்!

சனி, 8 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-173


என்னவளே
நம்மிடம் எது இல்லையோ
அதை பெறவே
கடவுள் வேண்டும் என்றேன்!

நீயோ
நம்மிடம் எது இருக்கிறதோ
அதை கொடுத்தால்
கடவுளாகவே ஆகலாம் என்கிறாய்!

வியாழன், 6 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-172

என்னவளே
விபத்து நடக்க
கவனக்குறைவான
ஒரு நொடி போதும்!

ஆனால்
மறு நொடியில்
தொடங்கும் துயரம்
வாழ்நாளைக்கும் நீளும்!

குறுஞ்செய்திகள்171

என்னவளே
நீயா இப்படி?
கத்தியால் வெட்டுவதில்
இத்தனை சந்தோஷமா?

எல்லோரும் வேறு
கைத்தட்டுகிறார்கள்!
சரி சரி வெட்டு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

குறுஞ்செய்திகள்-170

என்னவளே
என் மருதாணி விரல்கள்
செக்க சிவந்ததற்காய்
பெருமைப்பட ஆசை!

அடடா
உன் வெட்கத்தை விடவும்
அதிகமாய் சிவக்க
மருதாணிக்கு துணிவில்லை!

புதன், 5 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-169


என்னவளே
நம் மீதுதான்
எத்தனை கண்கள்
திருஷ்டி சுற்றவா? என்றேன்!

சாலை விபத்தில்
மண்டை உடையும்படி
பூசணி உடைக்கும் முண்டங்களோடு
நீயும் சேராதே என்கிறாய்!

செவ்வாய், 4 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-168

என்னவளே
உடம்பின் உதவியின்றி
ஒரு துளி உதிரத்தையும்
உருவாக்க முடியாது!

ஒரு துளி உதிரமாவது
தானம் செய்யாத
உடம்பால் பயன் ஏது?
ரத்ததானம் செய்வோம் வா!

குறுஞ்செய்திகள்-167


என்னவளே
உன் கதைகளை
பொறுமையாக கேட்கிறேன்
என்பதற்காக இப்படியா?

சரி விடு!
எல்லோரிடமும் ஏராளமாய்
கதைகள் இருக்கின்றன!
யார்தான் கேட்பது?

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-166


என்னவளே
இந்த விஞ்ஞானம்
காதலை கைபேசிக்குள்
முடக்கி போட்டுவிட்டது!

நம்மைப்போல
மிதிவண்டி தள்ளியபடி
நெடுந்தூரம் பேசி நடக்கும்
ஜோடிகளே காணோமடி!

சனி, 1 அக்டோபர், 2011

குறுஞ்செய்திகள்-165

என்னவளே 
எண்களை படிக்காமல் 
கணக்கு பண்ண முடியாது 
என்கிறார்கள்!

ஆனால் 
கண்களை படித்தே 
கணக்கு பண்ணி விட்டாய்!
எப்படியடி?

குறுஞ்செய்திகள்-164

என்னவளே 
நீ மிகச்சாதாரணமாக 
வாசலை கடந்து 
தெருமுனை திரும்பிவிடுகிறாய்!

பாவம்!
என் மொட்டைமாடியின் 
படிக்கட்டுகள் ஒவ்வொன்றும் 
படாத பாடு படுகின்றன!

குறுஞ்செய்திகள்-163

என்னவளே 
என்னவாயிற்று உனக்கு?
உன் எல்லாப் பொய்களையும் 
ரசிப்பதென்னவோ உண்மைதான்!

அதற்காக 
ஒன்றுமில்லை உடம்புக்கு
நன்றாய்தான் இருக்கிறேன் 
என்று பொய் சொல்லாதே!